6 ஆக., 2018

கருணாநிதியை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாததால் மனம் உடைந்த தி.மு.க. நிர்வாகி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
கருணாநிதியை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை
அம்பத்தூர்:

சென்னை கொரட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் குமரன்(வயது 44). தி.மு.க. நிர்வாகியான இவர், அம்பத்தூர் 84-வது வட்ட துணை செயலாளராக இருந்தார். பந்தல் அமைப்பது மற்றும் எலக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் குமரன் கடந்த 6 நாட்களாக தினமும் காலையில் காவேரி மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வரை காத்து இருப்பார். ஆனால் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி விடுவார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு சென்ற குமரன், இரவு முழுவதும் மருத்துவமனை அருகே காத்து இருந்து விட்டு நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

பின்னர் தனது மனைவி வள்ளி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் மருத்துவமனை அருகே 24 மணிநேரமும் காத்து இருந்தும் அங்கு சிகிச்சை பெறும் கருணாநிதியை என்னால் நேரில் பார்க்க முடியவில்லையே? என புலம்பியபடி இருந்தார். குமரனுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் குமரன், தனது தலையில் தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மண்ணூர்பேட்டை பகுதிக்கு சென்று 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு கையில் தி.மு.க. கொடியை பிடித்துக்கொண்டு, தான் வாங்கி வந்த பெட்ரோலை திடீரென தனது உடலில் ஏற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த குமரனின் உடலுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., ரெங்கநாதன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.