6 ஆக., 2018

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.லோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை ஆட்டோ, கால்டாக்சி, உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.