புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2018

சம்பந்தன், மாவை தேசத் துரோகிகளாம் - குடியுரிமையை பறிக்கச் சொல்கிறார் சங்கரி


இரா. சம்பந்தன் , மாவை சேனாதிராஜா ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்-

இரா. சம்பந்தன் , மாவை சேனாதிராஜா ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்-

“சம்பந்தனின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் விஜயகலா பெரும் குற்றவாளியல்ல. விஜயகலா மகேஸ்வரன் ஏதாவது குற்றம் புரிந்திருந்தால் அது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது புரிந்த குற்றத்திலும் குறைவானதா, கடுமையானதா அன்றேல் ஒப்பிடக்கூடியதா?.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களின் பெரும் தியாகத்தால் பெரும் புகழ் பெற்றிருந்த வடக்கு மற்றும் கிழக்கு ஜனநாயகம், திரும்ப பழைய பெருமையை ஒருபோதும் பெறமுடியாத அளவிற்கு தடம் புரண்டது 2004ஆம் ஆண்டு தேர்தலில்தான்.

நாடாளுமன்றத்தின் கால எல்லையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நீடிக்க அரசு முற்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை 1983ஆம் ஆண்டு துறந்து பெரும் தியாகத்தை புரிந்தனர்.

அந்த 18 பேரில் சம்பந்தனும், நானுமே தற்போது உயிருடன் இருக்கின்றோம். ஆனால் ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரின் திட்டமிட்ட சதியால் பலவீனமடைந்ததுள்ளது. ஆனால் ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் இருவரும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை துஷ்பிரயோகம் செய்து மோசடி மூலம் புத்துயிர் பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி, விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனப்படுத்தி இருந்தனர்.

அவர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரின் தலைமையில் அமோக வெற்றியடைந்தனர். தேசியப் பட்டியல் உட்பட 22 ஆசனங்களையும் கைப்பற்றினர். அவர்களின் வெற்றிக்கு ஓர் அமைப்பின் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர் 100 வாகனங்களையும் உபயோகித்து உதவினர்.

அவற்றில் 50வீத வாகனங்கள் இலக்கத்தகடு இல்லாதவையாகும். வாக்குரிமையற்ற பல பாடசாலை மாணவ மாணவியர் தமக்கு கிடைத்த ஐஸ்கிறீமிற்காக ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்திருந்தனர்.

சகலவிதமான ஊடகங்களுக்கும் அனைத்து நாட்டிலும் தம் நாட்டு சரித்திரத்தை மட்டுமல்ல சகல நாட்டு சரித்திரத்தையும் முறையாக பதிய வேண்டிய புனிதமான கடப்பாடு உண்டு.

சகல திருத்தங்களும், உடனுக்குடன் சேர்க்கப்பட வேண்டும். இதை செய்யத் தவறுவது தேசத் துரோக குற்றமாகும். விஜயகலாவின் பிரச்சினைக்குரிய பேச்சு பலதுறையினராலும் விமர்சிக்கப்பட்டதை நான் கேட்டும் படித்தும் இருக்கின்றேன்.

பகிரங்க மேடையில் அவரது நாடாளுமன்ற சகபாடிகள், அமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையிலேயே அவ்வுரை இடம்பெற்றது. இப்பிரச்சினையை நான் வேறு கோணத்தில் இருந்து பார்க்கின்றேன்.நாடாளுமன்ற உறுப்பினர் பலரால் இதுபோன்ற உரைகள் நாடாளுமன்றத்திலேயே கடந்த காலத்திலும் ஆற்றப்பட்டுள்ளது. அவ்வுரைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் வெளியிடப்படுவதனால் தம் தொகுதி ஆதரவாளர்களுக்கு தொலைக்காட்சி மூலம் தெரியப்படுத்துவதே நோக்கமாக இருந்து வருகின்றது.

அத்தகைய பேச்சுகள் ஆதரவாளர்கள் கைதட்டலுக்காக ஆற்றப்படுவதாகும். ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரைபற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவர் தனதுரையில் 40,000 சவப்பெட்டிகள் ஆனையிறவைத் தாண்டும் எனக் கூற, அப்படியானால் நான்கு இலட்சம் சவப்பெட்டிகள் ஆனையிறவு சந்திக்கும் என வேறு ஓர் உறுப்பனர் கூறி, சொன்னவரை தலைகுனிய வைத்தது உண்மை சம்பவமாகும்.

எனது திடகாத்திரமான வேண்டுகோள் யாதெனில் ஓர் நெத்தலியையொத்த விஜயகலாவின் நடவடிக்கைபற்றி மாறுபட்ட கருத்துக்களை கூறியவர்கள் பின் நோக்கி சென்று பெரும் திமிலங்களை ஒத்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் 2004 தொடக்கம் இன்று வரை என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என அறிய வேண்டும்.

விஜயகலா கூறியவை பாச உணர்வால் தூண்டப்பட்டு அடிமனதில் இருந்து வந்த வார்த்தையாகும். அக்கொடிய சமபவத்தில் பாதிக்கப்பட்டவர் ஆறு வயதுடைய சிறு குழந்தையாகும்.இத்தகைய சம்பவத்தைப்பற்றி ஓர் தாயின் ஆதங்கம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் இந்த தாய்க்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எல்லாவற்றிறிகம் மேலாக இந்த அம்மையார் பிள்ளைகள் விவகார அரச அமைச்சரும் ஆவார்.

ஆகவே நாம் அனைவரும் அவரது உணர்வுகளை விளங்கிக் கொள்ள வேண்டும். நாடாளுமன் சகபாடிகள், அமைச்சர்கள் உள்ளடக்கிய சபையினரை கவரும் நோக்கோடு விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் ஆற்றிய உரையாகும்.

நாட்டின் இறைமை பற்றி சத்தியப்பிரமாணம் எடுத்தபின்பு விஜயகலா ஏதாவது தப்பு செய்திருந்தார் என்றால், எப்படி இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும், ஏகப் பிரதிநிதிகள் என்றும் பிரகடனப்படுத்தி, தேர்தலில் வெற்றியும் அடைந்தபின்பு நாட்டின் இறைமையை ஏற்று சத்தியம் செய்து அந்த நாடாளுமன்றத்தின் கால எல்லை முடியும் வரை ஆறு ஆண்டுகாலம் மட்டுமல்ல அதன் பின்பும் இன்று வரை இருக்கின்றனர்?

விஜயகலாவிற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. எனது ஒரே வேண்டுகோள் இவ்விரு திமிலங்களாகிய இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரை காலங்கடந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து அவர்களின் ஆசனங்களைப் பறிக்க வேண்டும்.

அத்தோடு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் தேசத் துரோக குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும். 2004 பொதுத் தேர்தலில் அவர்கள் வென்றெடுத்த 22 ஆசனங்களும் பெருமளவு ஆள்மாறாட்டம் மூலம் கணக்கற்ற பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ்கிறீம் கொடுத்து பெற்றவையாகும்.

அத்தேர்தலில் வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் போது தோல்வியுற்ற ஒருவர் அன்று மாலை வெற்றியீட்டியுள்ளார். இன்னுமொரு வேட்பாளர் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கு மேல் வாக்குப் பெற்று வெற்றி அடைந்துள்ளார். அவர் கூறிய சவப் பெட்டிகள் போன்ற கதைகள் அவரை பெரு வெற்றி அடைய உதவி இருக்கலாம்.

காலம் கடந்தாலும்கூட இப்போதும்கூட ஓர் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்க காலம் கடக்கவில்லை. ஆணைக்குழு அமைத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் பிரகடனப்படுத்திய 2004ம் ஆண்டுக்குப் பின் நடந்த அத்தனைக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பொறுப்புக் கூற வேண்டுமா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்தமையினாலேயே இறுதியில் விடுதலைப் புலிகளும் அழிய நேர்ந்தது.

2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட தயாராக இருந்தார்கள் என்பதையும், தமிழ் கட்சிகள் அத்தனையும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்து ஒரே பொது சின்னமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியனை தீர்மானித்திருந்தனர்.

இந்த முடிவிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலையீடு இன்றியே உதய சூரியன் சின்னம் தீர்மானிக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது பற்றி எத்தனை பேர் அறிந்திருந்தார்கள்?

இதுமட்டும் நடந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களும், பலகோடி பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். விடுதலைப் புலிகளும் ஆயதங்களை கை விட்டு சக வாழ்க்கைக்குத் திரும்பி இருப்பார்கள்.

புதிய சூழ்நிலையில் யுத்தம் கைவிடப்பட்டு, முழு இலங்கையிலும் சக வாழ்க்கை ஆரம்பமாகி இருக்கும். சகலரும் ஏற்கக்கூடிய ஓர் தீர்வு திட்டம் ஏற்பட்டிருக்கும்.

குறிப்பாக இரு தமிழ் தலைவர்களின் பதவிப் பேராசையால் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளின் பின்பும் இரத்தம் வடிந்தோடும் நம் நாட்டில் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் தாம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதே இன்றைய நிலையில் பொருத்தமானதாக இருக்கும்.

நாட்டின் நலன் கருதி குறிப்பாக தமிழ் மக்களின் எதிர் காலத்தை தேசப் பற்றாளர்களிடம் விட்டுவிடுமாறு வேண்டுகிறேன். இரா.சம்பந்தனுக்கும், மாவை சேனாதிராசாவிற்கும் எதுவிதமான பொதுநலன் சார்ந்த பதவிகள் வகிக்க சட்டப்படியோ அல்லது தார்மீக ரீதியாகவோ அருகதை கிடையாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க விசுவாசமாக நம்புவது இந்திய முறையிலான அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவதே. அத்துடன் தென்னாபிரிக்க அரசின் சாசனத்தில் அமைந்துள்ள உரிமைகள் சட்ட கோவையை எமது அரசியல் சாசனத்துடன் இணைப்பதுவுமேயாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad