புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2019

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்- சுதீஷ் பேட்டி


பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்- சுதீஷ் பேட்டி
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது.

பாமகவுக்கு கொடுக்கப்பட்டது போல், 7 தொகுதிகளை ஒதுக்கும்படி தேமுதிக வலியுறுத்தியது. இதனை அதிமுக ஏற்கவில்லை. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது.

விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.

எனவே, பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாக, தேமுதிக கூட்டணிக்கு வருவது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஷ் கோயலும் தெரிவித்தார். கூட்டணி விவகாரத்தில் ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

ஆனாலும், தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து, கூட்டணி தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதேசமயம், தேமுதிகவுக்கு 2 தனித் தொகுதிகள் உள்பட 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாகவும், இதனால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்த பரபரப்பான தருணத்தில், கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்ததும் அவர் எந்த தகவலையும் வெளியிடாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.


ஆனால், கூட்டணிக்கு தேமுதிக வருவதை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உறுதி செய்தார். அத்துடன், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் அதிமுக அணியில் தேமுதிக இணைவது உறுதியானது.

இது ஒருபுறமிருக்க, கூட்டணி தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், அங்கு வந்து ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின்போது உறுதியான முடிவு எட்டப்படவில்லை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், ‘அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்’ என்று கூறினார்.

“மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்குமாறு பேசினார். அதன் அடிப்படையில் இன்று அவரை சந்தித்து பேசினேன். பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை தலைவர் எடுத்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தற்போது சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பியூஸ் கோயல் செல்வதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம். தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார்” என சுதீஷ் தெரிவித்தார்.

ad

ad