25 மார்., 2019

தமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போராடடம்

18 சடடசபை வெற்றியை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்கும் நிலை ராகுலை விமர்சிக்காத எடப்பாடி .ஒரு வேலை எடப்பாடி தரப்பு அதிக பா உ தொகுதிகளை வென்றால் ராகுலுக்கு முண்டு கொடுத்தாவது காங்கிரஸ் சடட சபை உறுப்பினரை ஆதரிக்க கேட்க்கும் நிலை தேர்தல் வாக்குறுதிகள் காலம். 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அ.தி.மு.கவும் தி.மு.கவும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், 38 தேர்தல் வாக்குறுதிகளும் தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இரண்டிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. போரின் போது, இடம்பெற்ற குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை விவகாரத்தில், திராவிடக் கட்சிகளிடத்தில் இருந்து, வேறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தும், இப்படியொரு தேர்தல் வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.

‘தேசிய அளவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு, மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்க, மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்’ என்பது மட்டுமே, அ.தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய வாக்குறுதியாகக் காணப்படுகின்றது.

ஆனால், தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘மகளீருக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடன்’, ‘50 இலட்சம் மகளீருக்கு வேலை’ போன்றவை முக்கியமான வாக்குறுதிகளாக உள்ளன.

‘கச்சதீவை மீட்போம்’ என்பது, இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதனால்தானோ என்னவோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “நான் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்து கொடுத்த வாக்குறுதிகளைத் திரும்பவும் கொடுத்திருக்கிறார்” என்று நக்கலடித்திருக்கிறார்.

இரண்டு திராவிடக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களிலும் ‘வாரிசுகளுக்கு’ப் பஞ்சமில்லை. தி.மு.கவில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆர்க்காடு வீராச்சாமி ஆகியோரின் மகன்களுக்கு தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.கவில் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிடோட்டோரின் மகன்களுக்கும் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், பணம் செலவழிப்பது என்ற அளவுகோலின் அடிப்படையில், வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் அவல நிலைமை, இரு கட்சிகளிலும் ஏற்பட்டிருக்கிறது.

வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டுதானே, தங்களின் வாக்குகளைச் செலுத்துகிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாக, இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களும் அமைந்து விட்டன.

தி.மு.க தலைவராக கலைஞர் கருணாநிதி, அ.தி.மு.க பொது செயலாளராக ஜெயலலிதா ஆகியோர் இருந்த காலத்தில், மக்கள் செல்வாக்குப் பெற்ற, எதிர்பார்க்கப்படாத புதுமுக வேட்பாளர்கள் இருப்பார்கள். அப்படி வேட்பாளர்களைத் தெரிவு செய்ய, இரு கட்சித் தலைவர்களுமே இன்றைக்குத் தயாராக இல்லை. ஆகவே, பொதுமக்கள் நன்மதிப்புப் பெற்ற வேட்பாளர்கள் என்ற எண்ணவோட்டம், இப்போது காணப்படவில்லை. ‘பணம் கொடுத்தால் வாக்கு போடப் போகிறார்கள்’ என்ற ஒரே கண்ணோட்டம் மட்டுமே தெரிகிறது.

தேர்தல் ஆணைக்குழுவால், எத்தனை கண்காணிப்பாளர்களை நியமித்தாலும், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, பணத்தை விநியோகிக்கும் வல்லமை படைத்த கட்சிகளாக, இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி இக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளும் இருப்பதால், தேர்தலின் புனிதத் தன்மை, படுபாதாளத்துக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளது.

இப்போது இரு கட்சித் தலைவர்களுமே, தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள். அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில், முதல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கினார். அங்கு பேசிய அவர், “தி.மு.க கூட்டணி ஒரு சுயநலக்கூட்டணி. இந்திய நாட்டைப் பாதுகாக்க, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ராகுல் காந்தி, பிரதமர் என்றும், இல்லை, எதிர்க்கட்சிகள் கூறும் ஒருவரே பிரதமர் என்றும் ஸ்டாலின் மாற்றி மாற்றிப் பேசுகிறார்” என்று கூறி, “தி.மு.க நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் பச்சோந்தி போன்றது” என்று, கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அதேநேரத்தில், தனது முதலாவது பிரசாரத்தை, கலைஞர் கருணாநிதியின் பிறந்த மாவட்டமான திருவாரூரில் தொடங்கிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் நரேந்திர மோடி, ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்றும் விமர்சித்து, எடப்பாடி மற்றும் மோடி ஆகிய இருவர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளார். “தவழ்ந்து வந்து, முதலமைச்சராகி கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் எடப்பாடி, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த, வெளிநாட்டு வாழ் பிரதமர், மோடி” என்றும், கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

ஆகவே, இதுவரை இருவரின் பிரசாரத்தை உற்று நோக்கினால், முதலமைச்சர் பழனிசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கவில்லை; ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கிறார்.

ஆனால், ஸ்டாலினோ, பிரதமர் மோடியையும் பழனிசாமியையும் விமர்சிக்கிறார். ஸ்டாலினுடையது இருமுனைத் தாக்குதல் என்றால், எடப்பாடியினுடையது ஒரு முனைத் தாக்குதலாகச் சென்று கொண்டிருக்கிறது.

இதற்குக் காரணம், இல்லாமல் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. ஏற்கெனவே, 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள எடப்பாடி, இந்த 18 தொகுதிகளில், சரி பாதி தொகுதிகளை வெற்றி பெற்றேயாக வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது, அவருக்குத் தெரியும்.

அப்படியே வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு விட்டாலும், ராகுல் காந்தியை விமர்சித்து, வம்பை விலைக்க வாங்க வேண்டாம் என்று நினைக்கிறார். ஏற்கெனவே 97 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இருக்கும் தி.மு.க- காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஆட்சி, மத்தியில் தேர்தலுக்குப் பிறகு அமைந்தாலும் தன் ஆட்சிக்கு ஆபத்து உருவாகி விடும் என்று கருதுகிறார் எடப்பாடி. இவற்றை மனதில் வைத்தே, ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ராகுல் காந்தியை விமர்சிக்காமல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், இப்போது நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை உணருகிறார். அவர் தலைமையில், ‘மினி தேர்தல்’ போல் சந்திக்கும் சட்டமன்றத் தேர்தல் இது.

இந்த 18 தொகுதிகளில் அவர் பெறப் போகும் வெற்றியை வைத்தே, அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி அமைக்க முடியும். இது ஒரு புறமிருக்க, 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டால், 115 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தி.மு.கவுக்குக் கிடைத்து விடும். அது, இப்போது இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு விடை கொடுக்கச் சரியாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்.

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு, மோடி அளித்த ஆதரவுக்கு, அவர் மீது கோபத்தைக் காட்டும் ஸ்டாலின், இப்படியோர் இரு முனைத் தாக்குதலில் தீவிரமாக இருக்கிறார்.

ஆகவே, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தல் இப்போது நடைபெறும் தேர்தலில் ஒரு சிறப்பம்சம். மற்ற மாநிலங்களில் இவ்வளவு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கவில்லை.

நாடாளுமன்றத் தொகுதிகள் 39இல் வெற்றி பெற்று, ஸ்டாலின் அல்லது எடப்பாடி ஆகிய இருவரில் ஒருவர் கைகாட்டும் ஆட்சி, மத்தியில் அமையப் போகிறது என்பதன் முக்கியத்துவத்தை விட, 18 சட்டமன்றத் தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி, எடப்பாடியின் இரு வருட ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது எட்டு வருடமாக ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்காத, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினுக்கு ஆட்சி அமைக்கும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்குமா? என்ற திகில் நிறைந்த காட்சிகளை நோக்கி, தமிழகத் தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.