1 மே, 2019

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு
Facebook Twitter Mail Text Size Print தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய 3 பேரும் அ.ம.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என கூறியுள்ளார்.


அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சபாநாயகர் ஒரு தலைப்பட்சமுடன் செயல்படுகிறார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த மனுவை நாங்கள் வழங்கி உள்ளோம். அதனை பேரவை செயலாளர் வாங்கி கொண்டார் என கூறியுள்ளார்.