8 ஜூலை, 2019

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சில மாநிலங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.பிற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் சிறப்பு நிகழ்வாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பாதுகாப்பு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சமூகநீதிக்கு எதிரானது. இந்த பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்கும் விதமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் கலந்துகொள்கின்றனர்.

மேலும், தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். தி.மு.க. தரப்பில் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட பலரும் பங்கேற்க இருக்கின்றன.

கூட்டத்தில், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த தீர்மான நகலை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.