-

13 அக்., 2025

www.pungudutivuswiss.comவிஜய் கூட்டணிக்கு வேண்டாம்.. கரூர் விவகாரத்தை சமாளிக்க முடியாமல் ஓடட்டும்.. அப்ப தான் தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக
என்பது தொடரும்.. விஜய்யை கூட்டணியில் சேர்த்து அவரை பெரிய ஆளாக்கினால், நாளை நமக்கே தலைவலியாகிவிடும்.. அதிமுக தலைமையின் திடீர் யோசனை..
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் பேசுபொருளாக உள்ள நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக திரைக்கு பின்னால் முயற்சிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தி.மு.க.வின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள, விஜய்யின் அரசியல் கட்சியான த.வெ.க கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அ.தி.மு.க.வின் தலைமை இந்த விவகாரத்தை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகி, ஒரு புதிய வியூகத்தை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய கரூர் விவகாரம் தொடர்பாக விஜய் சந்தித்த தொடர்ச்சியான வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக அவர் மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும், அரசியல் ரீதியான தாக்குதல்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் அ.தி.மு.க. தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.
கரூர் போன்ற ஆரம்பகால அரசியல் சவால்களுக்கே விஜய் மிகவும் சோர்வடைந்து, ஒதுங்கி போயிருக்கும் நிலையில், இத்தகைய ஒரு நபரை தங்கள் கூட்டணியில் சேர்த்து, அவரை பாதுகாத்து ‘பெரிய ஆளாக்க’ வேண்டிய அவசியம் இல்லை என்று அ.தி.மு.க. கருதுகிறது என்று கூறப்படுகிறது.
கரூர் விவகாரத்தில் இருந்து விஜய்யால் மீண்டு வர முடியாவிட்டால், ரஜினிகாந்தை போலவே அரசியலில் இருந்து அவர் பின்வாங்கிவிடுவார் அல்லது ஒதுங்கிவிடுவார். விஜய் அரசியலில் இருந்து விலகினால், 2026 தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தாலும் கூட, தமிழக அரசியல் களம் தொடர்ந்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு இடையேயான போட்டியாகவே நீடிக்கும்.
ஒருவேளை விஜய்யை இப்போதே கூட்டணியில் சேர்த்து, அந்த கூட்டணி வெற்றி பெற்றால், அதன் முழு பெருமையும் விஜய்க்கும் சென்று, அவர் அரசியல் ரீதியாக பெரிய அளவில் வளர்ந்துவிடுவார். 2026 தேர்தலில் த.வெ.க. 50 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் கூட, எதிர்காலத்தில் தமிழக அரசியல் களம் தி.மு.க. Vs த.வெ.க. என்று மாறி, அ.தி.மு.க. ஓரங்கட்டப்படும் அல்லது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவே, இத்தகைய ஒரு நிலையை தாங்களாகவே உருவாக்க கூடாது என்று அ.தி.மு.க. தலைமை யோசிப்பதாக கூறப்படுகிறது.
இதனால், பா.ஜ.க. விஜய்யை கூட்டணியில் சேர்க்க விரும்பினாலும், அ.தி.மு.க. அதற்கு சம்மதிக்காது என்றும், மாறாக, விஜய்யை தனித்து ஓடவிட்டு, அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அ.தி.மு.க. ரகசியமாக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் எப்போதுமே ஒரு புதிய கட்சி நுழைந்தால், அந்த கட்சியை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சவாலுக்கு உள்ளாக்கி, அதன் வீரியத்தை குறைக்க முயலும். விஜயகாந்தின் கட்சி அப்படித்தான் ஓரங்கட்டப்பட்டது. அதேபோல், விஜய்யையும் அரசியலில் இருந்து விரட்டிவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கும் தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள்தான் கோலோச்ச முடியும் என்ற நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தலைமை கணக்கு போடுவதாக தெரிகிறது.
இந்த கடுமையான அரசியல் சவாலை எதிர்கொள்ளும் சக்தி விஜய்க்கு இருக்குமா, அல்லது அவரும் ரஜினிகாந்த் போல ஆரம்பத்திலேயே பின்வாங்கி விடுவாரா என்பதை வரும் காலங்களே தீர்மானிக்கும்.

ad

ad