இனப்பிரச்சினைக்கு பதிலாக மோதல் - மாறிய சொற்களின் பொருள் ஒன்றாம்! [Friday 2025-10-03 07:00] |
![]() இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார். அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது |
-
3 அக்., 2025
www.pungudutivuswiss.com