புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012


இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இராணுவ அதிகாரிகள் இரகசியமான பேச்சுவார்த்தைக் கூட நடத்தியிருப்பதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
லலித் மற்றும் குகன் உயிருடன் உள்ளனர். அவர்கள் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக நேற்றிரவு இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
அதனடிப்படையில் எமக்குள்ள தொடர்புகள் மூலம் விசாரித்து அறிந்து கொண்டதில், அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவத்தினர் தான் கைதுசெய்தனர் என்பதை, எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் முன்னர் தெரிவித்திருந்தோம்.
லலித் மற்றும் குகன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி என்ற கிராமத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளை வேனில் சென்றவர்கள், அவர்களை வேனில் ஏற்றி சென்ற கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், கிராம வாசிகள் இது குறித்து கிராம சேவகருக்கு அறிவித்தனர். அவர், அருகில் உள்ள காவற்துறையில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து மாலையில் அங்கு சென்ற காவற்துறையினர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர். எனினும் மோட்டார் சைக்கிள் கிடைத்ததாக காவற்துறையினர் எமக்கு கூறவில்லை.
குகனின் மனைவி கோப்பாய் காவற்துறை நிலையத்திற்கு சென்ற போது, மோட்டார் சைக்கிள் இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து சட்டத்தரணிகள் மூலம் விசாரித்த போது, மூன்று கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கோவில் ஒன்று அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் கிடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
காவற்துறையினர் தொடர்ந்தும் இந்த சம்பவத்தை மூடி மறைக்கவே முயற்சித்தனர்.கடத்தல் சம்பவம் குறித்து கிராமவாசிகளிடம் இருந்து தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் காவற்துறையினர் எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை.
இதன் பின்னர், கடத்தப்பட்ட இருவரும் கொழும்பு கோட்டை பிரதேசத்pல் உள்ள நலன்புரி கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர், தெமட்டகொடவில் உள்ள புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது வடக்கில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மிகவும் ஆபத்தான உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் காவற்துறையின் எந்த பதிவேடுகளிலும் பதிவுசெய்யப்படவில்லை.
லலித்- குகன் கடத்தப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரானவர்கள், அவர்கள் இருவரும் தமது பொறுப்பில் இல்லை என தெரிவித்தனர். இருவரையும் விடுதலை செய்யுமாறே அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
இவர்கள் கடத்தப்பட்ட சம்பவமானது பல கடத்தல் சம்பவங்களில் ஒரு சம்பவமாகும். அரசியல் காரணத்திற்காகவும் ரகசியங்களை மறைக்கும் தேவையக்காவும் பலர் கடத்திச் செல்லப்படுகின்றனர். நாட்டிற்குள் மிகவும் கெட்ட நிலைமை உருவாகியுள்ளது. மக்கள் சக்தியினால் மாத்திரமே இந்த நிலைமை தோல்வியடைய செய்ய முடியும் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
சட்டத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றனர் – சிறீதுங்க
யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக்கட்சியின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. பொய்யான கதைகளை கூறிவருகிறது. பிரகீத் குறித்தும் இப்படிதான் கூறினர். முன்னாள் சட்டமா அதிபர், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு சென்று, பிரகீத் வெளிநாடு ஒன்றில் இருப்பதாக கூறினார். பின்னர், நீதிமன்றத்தில், பிரகீத் குறித்து தெய்வத்திற்கு மாத்திரமே தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் இப்படி கூறியிருந்தால், காதில் பிடித்து சிறையில் அடைத்திருப்பார்கள். சட்டம் சீர்குலைந்துள்ளது. சட்டத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றனர் என ஐக்கிய சோசலிசக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிமலரூபன் கொலை செய்யப்பட்டார், தில்ருக்ஷன் கொலை செய்யப்பட்டார். குறைந்தது, இவர்களுக்காக மரண சான்றிதழ்களை கூட அரசாங்கத்தினால் வழங்க முடியாதுள்ளது. சிறை என்பது அரசாங்கத்தின் பாதுகாப்பில் வாழும் இடமாகும். எனினும் சிறையில் கொலை செய்கின்றனர்.
அமைச்சர் பதியூதீன் மன்னார் நீதவானை அச்சுறுத்திய போது, ஜனாதிபதி பகிரங்கமாக ஜனாதிபதி மன்னிப்பு கேட்டார். நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகியோர் தமிழர்கள் என்பதாலா மன்னிப்பு கேட்பதில்லை?. இதுதான் உண்மை. லலித், குகன் பிரகீத் கடத்தப்பட்டமை, நிமலரூபன்,தில்ருக்ஷன் ஆகியோர் கொலை செய்யப்பட்டமை ஆகியவற்றிக்கான பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் ஏற்கவேண்டும். லலித்,குகன் ஆகியோர் வடக்கில் உள்ள இராணுவ முகாமில் ரகசியமான தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.
இதனால் லலித,; குகன் ஆகியோரை விடுக்குமாறும், பிரகீத் இருக்கும் இடத்தை கூறுமாறும், நிமலரூபன் மற்றும் தில்ருக்ஷன் ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அரசாங்கத்திடம் நாம் கோருகிறோம் என சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ad

ad