புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையும் : ஹக்கீம்
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்செனிடம் தெரிவித்தார்.

 

அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான உத்தேச தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் கிறீட் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் சந்தித்து இரு நாடுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடனான ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றியதாகவும் இனப் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை ஒரு முக்கிய தரப்பினரான முஸ்லிம்களுடைய பரிமாணம் தனியாக உள்வாங்கப்படாதது ஒரு பாரிய குறைபாடாக தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், இந்த பாரதூரமான குறைபாடு இனியும் தாமதிக்காமல் நிவர்த்திக்கப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதில் நோர்வே தூதுவர் அதிக ஆர்வம் செலுத்தினார். அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் பற்றியும் அவர் கேட்டறிந்து கொண்டார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டது குறித்தும் அவர் அமைச்சரிடம் வினவினார்.

கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் தூதுவர் அமைச்சரிடம் கேட்டார். அந்த விதந்துரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், செயலாளர் நாயகம் ஹஸன் அலி ஊடாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

நோர்வே அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கி வந்த பல்வேறு உதவிகள் பின்னர் தடைப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், புதிதாக அவ்வாறான உதவிகளையும், வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த நல்லுறவுகள் நீடிக்குமென அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

ad

ad