கேணல் பரிதிக்கு வீரவணக்கம் – யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு.
தளபதி பரிதி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்ட ஒரு மூத்த தளபதி ஆவார். தமிழீழம் நோக்கியதான போhராட்ட வடிவம் மாறிய போதிலும் தன்னை அதற்கமைய மாற்றி புலம்பெயர் தமிழருடன் இணைந்து பல இடர்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க தமிழீழம் நோக்கிய பாதையில் இளையோரின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர்.
கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய பணிச்செயற்பாட்டாளர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தளபதி பரிதி அவர்கள் மேல் நடாத்திய கொலைமுயற்சி இங்கு குறிப்பிடதக்கது. அதன் பின்னரும் அஞ்சாது தனது தாயகப்பணியைத் தொடர்ந்து வந்த தளபதி பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள இனவாதக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழரின் இறுதியும் அறுதியுமான முடிவாம் தமிழீழம் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் வழிமாறாது ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும். எமது போராட்டமானது புலம்பெயர் தேசத்தில் தமிழின உணர்வாளர்களால் அமைதியான மற்றும் சனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில் இலங்கை அரசின் இவ் எல்லை மீறிய படுகொலையை தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் கண்டிப்பதுடன் இக்கொலைக்கான நீதியை சர்வதேசத்தின் முன் கோரி நிற்போம்.