புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது: கலைஞ

இலங்கையில் ஆளும் சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டுள்ளது என்று திமுக தலைவகலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி: ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்றிருக்கிறதே?
பதில்: இந்தியத் தரப்பில், இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும், ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆகியவை குறித்து கவலை தெரிவித்த இந்தியா, அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருப்பது நீதித் துறையில் அரசின் தலையீடாகும். இலங்கையில் மீள் குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத்துகிறது. இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.
இதேப்போல உலக நாடுகள் அனைத்தும், இலங்கை குறித்து தங்களது வாதங்களை முன் வைத்துள்ளது.
அந்தக் கூட்டத்தில், இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரசிங்கே கூறும்போது, “உள்நாட்டுப் போர் காரணமாக 30 ஆண்டுகளாக இலங்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் மறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளது. போரின்போது ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கியிருக்கலாம். எனவே அவர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகள் அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணை செய்யப்படும். சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீதான தாக்குதலில் இலங்கை அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த வாக்குறுதிகளைப் பற்றி சர்வதேசமனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்; பல ஆண்டுகளாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல் பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் அதிகாரி யோலாண்டாபோஸ்டர் இதைப்பற்றிக் கூறும்போது, “நாடுகளில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினை குறித்து ஐ.நா. ஆய்வு செய்து வருகிறது. அதில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது. மனித உரிமை தொடர்பாக இலங்கை அரசு பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஐ.நா.வின் ஆய்வில் பங்கேற்ற நாடுகள், மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம். விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆனபோதும், அங்கு மனித உரிமைப் போராளிகளுக்கு எதிராக மிரட்டலும், துன்புறுத்தலும் தொடர்கிறது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. மொத்தத்தில் அங்கு அமைதியும் பாதுகாப்பும் அற்ற சூழல் நிலவுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இலங்கைச் சிங்கள அரசு, தொடர்ந்து தமிழினத்தை ஏமாற்றி வருகிறது; ஏமாற்றுவதற்குத் தேவையான கபட நாடகத்தை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது. அந்தக் கபட நாடகத்தை நாம் புரிந்து கொண்டிருப்பதால் தான்; ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினை பொதுவாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி வருகிறோம். சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. நமக்கு ஊக்கமளித்திடும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.

ad

ad