புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012

FACEBOOK DIVYA KUMAR THX
17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:

''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண
்டிருக்கு...



அதாவது நிறைய மக்கள் செத்துக் கொண்டிருக்கினம். அதாவது வந்து... எங்களுடைய துண்டுக்குள்ள... எங்களுடைய துண்டுக்குள்ள... கிட்டத்தட்ட வந்து... ஒரு இரண்டு தர இரண்டு... இரண்டு கிலோமீற்றர் தர இரண்டு கிலோமீற்றர் நீள – அகலமான துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது வந்து என்னெண்டு சொல்லிச் சொன்னால் எல்லா இடமும் பிணக்குவியல்கள். பிணக்குவியல்கள் தான் எல்லா இடமும்... எல்லா இடமும் மக்கள்.

மக்களையும் வெளியேற விடாமல்... நாங்கள் வந்து என்னெண்டு சொல்லிச் சொன்னால்... மக்களை வந்து நேற்று நாங்கள் கேட்டனாங்கள். நேற்று... முந்தநாள்... முந்தநாள்... முந்தநாள் வந்து... ஐ.சி.ஆர்.சி ஊடாக ஜெனீவாவில தொடர்பு கொண்டு... ஜெனீவாவில வந்து தொடர்பு கொண்டு... நேரடியாகத் தொடர்பு கொண்டு – கே.பி பத்மநாதனுக்கு ஊடாகத் தொடர்பு கொண்டு... ஜெனீவாவோ தொடர்பு கொண்டு... இரட்டைவாய்க்கால்... முல்லைத்;தீவு வட்டுவாகலுக்கு ஊடாக – அல்லது இரட்டைவாய்க்காலுக்கு ஊடாக காயப்பட்டிருக்கிற இருபத்தையாயிரம் மக்களையும் நாங்கள் விடுறம். எடுக்கச்சொல்லி... வந்து எடுக்கச்சொல்லி... இருபத்தையாயிரம் மக்களையும் வந்து எடுக்கச்சொல்லிச் சொன்னம். ஆனால் கேக்கேல்ல.

அந்த இருபத்தையாயிரமும் செத்திட்டுது. அந்த இருபத்தையாயிரமும் செத்திட்டுது. அத விட – இப்ப ஐம்பதுனாயிரம் - இருபத்தையாயிரத்துக்கும் மேல... இருபத்தையாயிரத்துக்கும் மேல வந்து என்னெண்டு சொல்லிச்சொன்னால் இதுக்குள்ள நிண்டு காயப்பட்டுக் கொண்டு நிக்குது – செத்துக் கொண்டு நிக்குது. சண்டையும் நடந்து கொண்டிருக்கிறபடியால்... ஆட்லறி எல்லாமே மோசமாக அடிக்கப்படுகிது.

அதாவது இரண்டு கிலோமீற்றர் துண்டுக்குள்ள வந்து பரவலாக எல்லா முனைகளாலையும் ஆட்லறிகளாலை அடிச்சுக் கொண்டிருக்கினம். சனம்தான் செத்துக் கொண்டிருக்குது. ஆனால் நாங்கள் சண்டை முனையிலை வந்து... தொடராக நாங்கள் சண்டை பிடிச்சுக் கொண்டு நிக்கிறம்.

கடைசி வரைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனால் தொடரா நாங்கள் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறம். ஆனால் எங்கடை மக்கள் செத்துக் கொண்டிருக்கினம். சர்வதேசம் திரும்பிப் பாக்கேல்ல.''

மிகவும் உறுதியாகக் - கணீரென – ஒலித்த தளபதி சூசை அவர்களின் அந்தக் குரல் ஒரு செய்தியை தெளிவாக உணர்த்தி நின்றது. அடிபணிவு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் இல்லை. உயிரைத் துச்சமென மதித்துக் களமாடிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் மக்களைப் பாதுகாப்பதே தமது நோக்கம் என்பதை ஐயம் - திரிபு இன்றித் தெளிவாகவே தளபதி சூசை அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால் தளபதி சூசை அவர்களின் குரல் தமிழ் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கிய சில நிமிடங்களில் மலேசியாவிலிருந்தும், அவுஸ்திரேலியாவிலிருந்தும் ஊடகங்களுக்கு மாறிமாறி அழைப்புக்கள் பறந்த வண்ணமிருந்தன. ஒன்று கே.பியிடமிருந்து. மற்றையது கே.பியின் ஊடக இணைப்பாளராக விளங்கும் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளரான மருத்துவர் ஒருவரிடமிருந்து. இவ்விரு நபர்களாலும் ஊடகங்களுக்கு எடுக்கப்பட்ட அழைப்புக்களில் வலியுறுத்தப்பட்ட விடயம் இதுதான்: தளபதி சூசையின் செவ்வியை ஒலிபரப்பும் பொழுது அவர் கடைசியில் கூறிய 'கடைசி வரைக்கும் அடிபணிய மாட்டம்' என்ற சொற்பிரயோகத்தை வெட்டிவிட வேண்டும், அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த அழைப்புக்களின் சாராம்சம்.

தமிழ் ஊடகங்கள் மீது இவ்வாறான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதன் காரணம் அப்பொழுது ஊடகவியலாளர்கள் பலருக்குப் புரியவில்லை. களத்தில் நின்றவாறு ஒரு வீரத்தளபதி வழங்கிய செவ்வியின் ஒரு பகுதியை வெட்டுமாறு அல்லது அவர் கூறிய விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டில் உள்ள இருவர் கூறியதன் சூட்சுமத்தைப் புரிந்து கொள்வது அப்பொழுது ஊடகவியலாளர்களுக்கு கடினமாகவே இருந்தது. அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஒருவரும், அவரது பேச்சாளராக விளங்கும் ஒரு மருத்துவரும் இவ்வாறு கூறியதை ஊடகவியலாளர்கள் ஜீரணிக்கவில்லை.

ஆனால் இவ்வாறான நிர்ப்பந்தம் தம்மீது பிரயோகிக்கப்பட்டதன் சூட்சுமத்தை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. தளபதி சூசையின் அறிவித்தல் வெளிவந்த சில மணித்துளிகளுக்குள் இன்னொரு அறிக்கை ஊடகங்களில் வெளிவந்தது. அதன் ஆங்கில வடிவம் ஆங்கில மொழியிலான தமிழ் இணையம் ஒன்றிலும், அதன் தமிழ் வடிவம் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கிய 'புதினம்' என்ற தமிழ் இணையத்தளத்திலும் வெளியாகியது. கே.பி அவர்களால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு அமைந்திருந்தன:

''எமது ஆயுதங்களை மௌனிப்பதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். எம்மால் தொடர்ந்தும் போராட முடியவில்லை என்பதற்காகவும், இழக்கப்பட்ட உயிர்களுக்காகவுமே நாங்கள் வருந்துகிறோம். எமது அப்பாவி மக்களின் குருதி சிந்தப்படுவதை எம்மால் இனியும் சகித்துக் கொள்ள முடியாது.''

இவ் அறிக்கை ஏனைய தமிழ் ஊடகங்களை சென்றடைந்த பொழுது ஊடகவியலாளர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. யுத்த முனையில் அடிபணியாது மக்களைப் பாதுகாப்பதற்காக தாங்கள் போராடிக் கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் அறிவித்த சில மணித்துளிகளுக்குள் அதற்கு நேர்மாறான அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் வெளியிட்டமையே இதற்கான காரணமாகும்.

தமிழினத்தின் மானத்தைக் கப்பலேற்றும் வகையில் கே.பி வெளியிட்ட இவ்வறிக்கையை வெளியிடுவதா? அல்லது அதைக் கிடப்பில் போடுவதா? ஊடகவியலாளர்களுக்குப் பெரும் குழப்பம். இன்னொரு பக்கத்தில் இவ் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு நிர்ப்பந்தித்து மலேசியாவிலிருந்தும், அவுஸ்திரேலியாவிலிருந்தும் அழைப்புக்கள் பறந்த வண்ணமிருந்தன. மறுமுனையில் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தொலைக்காட்சியோ கே.பியின் அறிக்கைக்கு முக்கியத்தும் கொடுத்தும், தளபதி சூசையின் செவ்வியின் முக்கியத்துவத்தை தணித்தும் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தது. செய்வதறியாது சில ஊடகங்கள் இவ் அறிக்கையை வெளியிட, ஏனைய ஊடகவியலாளர்களோ வன்னியிலிருந்து உறுதிப்படுத்தப்படும் வரை அறிக்கையை வெளியிட முடியாது என்று உறுதியாக நின்றனர். ஆனால் இவர்களின் உறுதி நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை.

ஆயுத மௌனிப்பு அறிக்கையை தான் வெளியிட்ட சில மணிநேரத்தில் சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகத் தெரிவித்து பின்வருமாறு கே.பி அவர்கள் தெரிவித்தார்:

''எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு சமாதான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருக்கின்றது. இரண்டாயிரம் போராளிகள் இப்பொழுது முல்லைத்தீவு பகுதியில் எஞ்சி நிற்கிறார்கள். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறுக்கும் அதிகமான மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நேற்றிலிருந்து மூவாயிரம் பொதுக்கள் இறந்து விட்டார்கள். இப்பொழுது இருபத்தையாயிரம் மக்கள் காயமடைந்துள்ளார்கள்.''

ஆயுதங்களை கீழே போடும் இந்த முடிவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இணங்கினாரா? என்ற தொனியில் சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் வினவிய பொழுது அதற்குப் பதிலளித்த கே.பி பின்வருமாறு குறிப்பிட்டார்:

''பிரபாகரன் இதற்கு இணங்கினார். இதற்கு முதல் நான்கு மணித்தியாலம் நான் அவருடன் கதைத்தேன். எமது செய்தியை சிறீலங்கா அரசாங்கத்திற்கும், உலக தரப்புக்களுக்கும் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எவரும் பதில் தரவில்லை. யுத்தத்தையும் நிறுத்தவில்லை.''

''சனல்-4: திரு.பிரபாகரன் அந்தப் பகுதியில் நிற்கின்றாரா?

கே.பி: யெஸ் சேர் (ஆம் ஐயா).

சனல்-4: இந்த சுற்றிவளைக்கப்பட்ட பகுதியில் நிற்கும் அவருடன் உரையாடினீர்களா? சரணடைவதற்கு அவர் தயாராக உள்ளாரா?

கே.பி: இல்லை சரணடையவில்லை. ஆனால் ஆயுதங்களைக் கையளிக்கிறோம்... கீழே போடுகிறோம்.''

தளபதி சூசை வழங்கிய செவ்விக்கு நேர்மாறாக ஏற்கனவே கே.பி வெளியிட்ட ஆயுத மௌனிப்பு அறிக்கையால் குழம்பிப் போயிருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சனல்-4 தொலைக்காட்சியில் வெளிவந்த கே.பியின் அறிவித்தலை அடுத்து என்ன செய்தென்று தெரியாது திணறினார்கள்.

அப்பொழுது ஒஸ்லோவிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் வந்தது. அதை அறிவுறுத்தல் என்று கூறுவதைவிட வேண்டுகோள் என்றுகூடக் கூறலாம். வன்னியிலிருந்து உறுதிப்படுத்தப்படும் வரை கே.பியின் அறிவித்தலை வெளியிடப் போவதில்லை என்று உறுதியாக நின்ற ஊடகவியலாளர்களிடம் ஒஸ்லோவிலிருந்து அழைப்பை எடுத்த நபர் பின்வருமாறு கூறினார்: ''பார்த்துச் செய்யுங்கோ.''

இதனால் குழப்பமடைந்த ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட நபரிடம் மீண்டும் வினவினார்: ''இயக்கம் ஆயுதங்களை கீழே போடுகின்றதா?''

அதற்கு சலித்தவாறு பதிலளித்த ஒஸ்லோ நபர்: ''அப்பிடித்தான் பேட்டி இருக்குது. பார்த்துச் செய்யுங்கோ.''

அப்பொழுது தமிழீழத்தில் நள்ளிரவைக் கடந்திருந்தது. அவ்வேளையில் செய்கோள் தொலைபேசி ஊடாக முள்ளிவாய்க்காலில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி ஒருவருடன் வெளிநாட்டிலிருந்து செய்தியாளர் ஒருவரால் அழைப்பு எடுக்கப்பட்டது. ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கீழே போடுவதாக வெளிவந்த அறிவித்தல் உண்மையா? என்று சம்பந்தப்பட்ட செய்தியாளர் வினவிய பொழுது, சிரித்துவிட்டு குறிப்பிட்ட போராளி பின்வருமாறு தெரிவித்தார்:

''இப்பவும் சண்டை நடந்து கொண்டுதான் இருக்குது. எங்களிட்ட இருக்கிற ஆயுதங்கள்தான் இப்ப எங்களுக்கும், சனத்தும் கடைசிப் பாதுகாப்பு. ஆனால் அதுவும் கனநேரத்துக்கு நீடிக்காது. ஏனெண்டால் ரவுண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சு கொண்டு வந்திட்டுது. ரவுண்ட்ஸ் முடிய எங்கட ஆயுதங்களும் மௌனமாகிடும். பிறகும் எங்கட ஆயுதங்கள் மட்டுமில்லை நாங்களும் மௌனமாகிவிடுவம். ஆயுதங்களை கீழ போட்டிட்டு வெள்ளைக் கொடியோட போகச் சொல்லுறாங்கள். முந்தநாளிலை இருந்து ஆமியின்ர பகுதிக்குள் போன ஆக்களுக்கு என்ன நடந்தது எண்டே தெரியாது. கடைசியிலை குப்பிதான் எங்களிட்ட மிஞ்சப் போகுது.''

இவ்வாறு கூறிவிட்டு சிரித்த குறிப்பிட்ட போராளி, மக்களை மீட்பதற்கான முயற்சிகள் எவற்றிலாவது அமெரிக்கா அல்லது ஐ.நா. சபை ஈடுபடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றதா என்று வினவத் தவறவில்லை. ஆனால் அவ்வாறு எவையும் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், மாறாக கே.பியின் ஆயுதங்களைக் கீழே போடும் செய்தியே ஊடகங்களில் வெளிவருவதாகவும் சம்பந்தப்பட்ட செய்தியாளர் கூறிய பொழுது அதற்கு பதிலளித்த குறிப்பிட்ட போராளி:

''இப்பிடித்தான் பொபியும் சொல்லிக் கொண்டிருந்தவன். ஆயுதங்களை நாங்கள் கீழே போட்டால்தான் கப்பலை அமெரிக்கா அனுப்பும் எண்டவன். நாங்கள் எல்லாரும் செத்தாப் பிறகாவது கப்பல் வரட்டும்.''

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிமணித்துளிகளில் குறிப்பிட்ட போராளி கூறிய விடயங்களில் பல ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன. போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்கும் ஒரேயொரு நோக்கத்திற்காகவே கே.பியை தமது வெளியுறவுத் தொடர்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை நியமித்திருந்தது. ஆனால் அதைவிடுத்து வெளிநாடுகள் வலியுறுத்திய ஆயுதக் களைவு நிர்ப்பந்தத்தையே கே.பியும், அவரது ஆலோசகரான உருத்திரகுமாரனும், அவரது உதவியாளரான பொபியும் (பரந்தாமன் அல்லது வழுதி) கிளிப்பிள்ளைகள் போன்று அடிக்கடி வன்னிக்கு கூறிக்கொண்டிருந்தார்கள்.

மக்களை மீட்பதற்கான முயற்சிகள் எவற்றிலும் உலக சமூகம் ஈடுபடப் போவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட நிலையில், சாவு நிச்சயம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பொழுதும், தம்மிடம் இறுதியாக எஞ்சியிருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, உயிரை வேலியாக்கி மக்களைப் பாதுகாப்பதற்காக முள்ளிவாய்க்காலில் போராளிகள் களமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆயுதங்கள் ஓய்ந்ததும், வெள்ளைக் கொடிகளுடன் முன்னரங்க நிலைகளை நோக்கி நகரும் பொழுது தாம் கொல்லப்படுவோம் என்பது அங்கு நின்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. எதிரியிடம் நிராயுதபாணிகளாக பலியாவதை ஏற்க மறுத்த சில போராளிகள் சயனைட் உட்கொண்டு உயிர்துறப்பதற்கு தயாரானார்கள். இவர்களில் சில போராளிக் குடும்பங்களும் இருந்தன.

ஆனால் 'ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்' என்று கே.பி வெளியிட்ட அறிவித்தல் மட்டும் அந்த வேளையிலும் வெளிநாட்டு ஊடகங்களில் அலறிக் கொண்டிருந்தது. ஆயுதங்களை கீழே போடுவதாக கே.பி அறிவித்தால் என்ன? ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தால் என்ன? ஆயுதங்கள் தாமாகவே மௌனிக்கும் பொழுது தாங்கள் எல்லோரும் கொல்லப்படுவோம் என்பதை அந்த இறுதிக் கணத்தில் முள்ளிவாய்க்காலில் நின்ற போராளிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதையே குறிப்பிட்ட போராளியின் கடைசி வார்த்தைகள் பிரதிபலித்தன.

முள்ளிவாய்க்காலின் யதார்த்தம் இதுதான். இதுதான் 18.05.2009 திங்கட்கிழமை அதிகாலை வெள்ளைக் கொடியுடன் காயமடைந்த போராளிகளையும், மக்களையும் அழைத்துக் கொண்டு சிங்களப் படைகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற பொழுது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாள சீ.புலித்தேவன் ஆகியோருக்கு நடந்தது. ஆயுதங்களின்றி சென்ற இந்த இரு சமாதானப் புறாக்களையும் சிங்களம் விட்டு வைக்கவில்லை. 2009 ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளின் ஆயுதக் களைவு நிர்ப்பந்தத்தை கே.பியும் அவரது ஆலோசகர் உருத்திரகுமாரனும் திணிக்க முற்பட்ட பொழுது, அதனை என்ன காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தார்களோ, அதுவே இறுதியில் 18.05.2009 அதிகாலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறியது.

ஆனால் இதன் பின்னால் இன்னொரு உண்மை மறைந்திருந்தது. ஆயுதங்களை மௌனிப்பது பற்றியோ, அன்றி ஆயுதங்களை கீழே போடுவது பற்றியோ கே.பி விடுத்த அறிவித்தல்களுக்கும், முள்ளிவாய்க்காலில் இறுதிவரை தமது உயிரை வேலியாக்கி மக்களைப் பாதுகாப்பதற்காகப் போராடிய போராளிகளுக்கும் இடையே இறுதி நேரத்தில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதுதான் அது.

ஒரு வகையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தை பெரும் இரத்தக்களரியுடன் சிங்களம் முடிவுக்கு கொண்டு வந்ததற்கு கே.பி விடுத்த அறிவித்தல் காலாக அமைந்தது என்றுகூடக் கூறலாம். முள்ளிவாய்க்காலில் இறுதிக் கணம் வரை தமிழீழ தேசியத் தலைவர் நின்றதாகவும், அவருடன் உரையாடிய பின்னரே ஆயுதங்களைக் கீழே போடும் அறிவித்தலை தான் விடுப்பதாகவும் சனல்-4 தொலைக்காட்சிக்கு கே.பி கூறிய பொய், தமிழீழ தேசியத் தலைவர் அங்கு நிற்பது போன்ற பிரம்மையை சிங்களப் படைகளுக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும். விளைவு, முள்ளிவாய்க்காலில் தலைவர் நிற்பதாக நம்பி எவரையும் உயிருடன் விட்டு வைப்பதில்லை என்ற முடிவில் மக்கள் மீதான தாக்குதல்களை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்தியிருக்கக்கூடும். இதுவே வெள்ளைக் கொடியுடன் பேசச்சென்ற பா.நடேசன், சீ.புலித்தேவன் போன்ற நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளின் உயிரைப் பலிகொள்ளக் காரணியாகவும் அமைந்தது.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த பத்தியொன்றில் நாம் சுட்டிக் காட்டியது போன்று, ஆயுதங்களைக் கீழே போடும் அறிவித்தலை சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய பொழுது, தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கே.பியிற்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. 2008 டிசம்பர் மாதத்தின் இறுதியில் ஒரேயொரு தடவை – வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் – தொலைபேசியில் உரையாடியதைத் தவிர அதற்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ தேசியத் தலைவருடன் கே.பி உரையாடவில்லை. இறுதிக் கணத்தில் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நின்றாரா, அல்லது அதற்கு முன்னரே அங்கிருந்து தலைவர் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறிச் சென்றாரா என்பதுகூட கே.பி அவர்களுக்குத் தெரியாது.

அப்படியிருக்கும் பொழுது, ஆயுதங்களைக் கீழே போடும் அறிவித்தலை ஏன் கே.பி வெளியிட்டார்? தலைவருடன் உரையாடாமல் என்ன துணிச்சலில் தலைவருடன் நான்கு மணிநேரம் தான் உரையாடியதாக கே.பி அறிவித்தார்? தலைவர் எங்கு இருக்கின்றார் என்பதை அறியாத ஒருவர் – தலைவருடன் ஐந்து மாதங்களாக தொலைபேசியில் உரையாடாத ஒருவர் – என்ன துணிச்சலில் தலைவரின் இருப்பிற்கு முடிவுகட்டி அறிக்கை வெளியிட்டார்?

கே.பி செய்த திருகுதாளங்களின் பின்னணியில் இருந்தது ஊகமாக? நிர்ப்பந்தமா? அல்லது இரண்டும் இருந்ததா?

(முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுவது தொடரும்)

ad

ad