புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தட களப் போட்டியின் 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான குண்டெறிதலில் வெண்கலப்பதக்கத்தையும்,தட்டெறி தலில் வர்ண விருதினையும் பெற்ற இராஜமனோகர் தர்சிகா வவுனியா மாவட்டத்திற்கும், வடமாகாணத் திற்கும் பெருமை சேர்த்தார்.
அயராத முயற்சியும், நேரம் தவறாத பயிற்சியும், பெற்றோரின் ஊக்குவிப்பும் இருந்தால் எதிலும் எவரும் சாதிக்கலாம். அந்த வகையில் பாடசாலை
களுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டி யில் நான் சாதிப்பதற்கு எனது பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கிய காரணம். அந்த அடிப்படையில் தேசியத்தில் வென்ற பதக்கத்தை எனது பெற் றோருக்கு சமர்ப்பிப்பதில் பெருமை அடைகின்றேன் என வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வீராங்கனை இராஜமனோகர் தர்சிகா தெரிவித்தார்.

சாதனை குறித்து எமது செய்தியாளர் தயாளபாலன், தர்சிகாவிடம் கருத்துக் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற பெரு விருப்பம் இருந்தது. பெண் என்ற வகையில் பெற்றோரின் ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும் எனக்கு அவசியமாக இருந்தது. அவர்களின் ஒத்துழைப்பின்றி எம்மால் விளையாட்டில் சாதிப்பதோ, அதில் ஈடுபடுவதோ கடினம்.
அந்த வகையில் எனது விருப்பத்திற்குத் தடையாக என் பெற்றோர் இடையூறு விளைவிக்க வில்லை. மாறாக ஒத்துழைப்பும், ஊக்குவிப்புமே அளித்தனர். நான் குண்டெறிதல், தட்டெறிதல் போட்டி விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தி, அதில் சாதிக்க வேண்டும் என்ற பெருவிருப்புடன் செயற்பட்டேன்.
எனது எண்ணங்களையும், திறமைகளையும் இனங்கண்டு, நெறிப்படுத்திய, செழுமைப்படுத்திய பெருமை எமது பாடசாலை ஆசிரியர் குமரேசன் அவர்களையே சாரும். அவர் அடிக்கடி எனக்கு கூறுவதுண்டு. உனது அயராத முயற்சியும், நேரம் தவறாத பயிற்சியும் நிச்சயமாக தேசிய மட்டப் போட்டிகளில் சாதிக்க வழிவகுக்கும் எனக் கூறுவர். அத்துடன் சிறுவயதில் இருந்து இன்று வரை, என் வளர்ச்சியை நெறிப்படுத்திய மற்றுமொருவர் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கந்தவேள் விஜிதரன் அவர்களே. குண்டெறிதலின் நுணுக்கம் குறித்தும் அதன் சரியான விளக்கம் குறித்தும் எனக்குக் கற்று தந்தார் அவரே.
மேற்படி பயிற்றுவிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மட்ட தட்டெறிதலில் 28.92 மீற்றர்கள் எறிந்து வர்ண விருதினைப் பெற்றேன். மூன்று இடங்களுக்குள் என்னால் வரமுடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இருப்பினும் வர்ண விருது கிடைத்திருப்பதே சிறப்பானது. உன்னால் அடுத்து வரும் ஆண்டுகளில் தங்கமோ, வெள்ளியோ, வெண்கலமோ பெற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. கவலையைவிட்டு விட்டுமேலும் உன் பயிற்சியையும், குண்டெறிதல், தட்
டெறிதல் தொடர்பான முழு விளக்கங்களையும்தெரிந்துகொள். எம் ஒத்துழைப்பு உனக்கு எப்பொழுதும் உண்டு எனக் கூறி என்னை ஆறுதல் படுத்தினார்.
நான் எங்கு சென்று போட்டிகளில் பங்கேற்றாலும் அங்கு எனது அப்பா வந்து ஊக்கமளிப்பார். அந்த வகையில் எனது அப்பா என்னுடன் போட்டிக்களத்துக்குக்கூட வருவது நான் செய்த பாக்கியமாகவே கருதுவேன்.
இருப்பினும் இந்த அதிர்ஷ்டம் எனக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஏனெனில் எனது அப்பா கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்தமை எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத்தந்தது. தந்தையின் இழப்பிலிருந்து என்னால் மீண்டுவர முடியாமல் தவித்தேன். இருப்பினும் எனது அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும். தேசிய மட்டப் போட்டிகளில் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று எனக்கு அடிக்கடி ஊக்கம் தந்தார்.
அப்பாவுக்காக சாதிக்கவேண்டும் என்ற வெறி எனக்குள் உருவாகிற்று. புதிய வேகம் வந்தது போல் எனது செயற்பாடுகள் அமைந்தன.
பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்லாது செஞ்சிலுவைச் சங்க விளையாட்டுப் போட்டி, அகில இலங்கை மெய்வல்லுநர் சங்கவிளையாட்டு, தேசிய இளைஞர் சேவை மன்ற விளையாட்டு, சேர் ஜோன் டார்பட் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றமை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியில் வெல்வதற்கு பெரும் பயிற்சிக்களங்களாக அமைந்திருந்தன.
அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தட களப் போட்டியின் குண்டெறிதலில் வெண்கலப் பதக்கத்தையும், தட்டெறிதலில் வர்ணவிருதையும் வென்றேன். இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணம் எனது பெற்றோரே. அந்த வகையில் இந்த வெற்றிகளை அவர்களுக்குச் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்வடைகின்றேன்.
எதிர்காலத்தில் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற பெரு விருப்பம் எனக்கு இருக்கின்றது. அதில் சாதிப்பேன் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. அவ்வாறு சாதிக்கும் பொழுது அதில் கிடைக்கின்ற வெற்றிகளும் எனது பெற்றோருக்கே சமர்ப்பிப்பேன்.
எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சக மாணவிகள், பழைய மாணவர்சங்கம் என வளர்ச்சிக்கு ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். உங்களின் ஆசி எனக்கிருக்கும் வரை நான் விளையாட்டில் பல சாதனைகளைப் படைப்பேன் எனவும் அவர; தெரிவித்தார்.

ad

ad