புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவதுநிச்சயமாகிவிட்டது. 
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக் குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கை முறை பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருட கால
அவகாசம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன. இலங்கை சீனா பக்கம் சரிந்துவிடும் என்ற அச்சம் தான் இந்த மென்மையான அணுகுமுறைக்குக் காரணம். அமெரிக்க இராஜதந்திரக் குழுவினர் தமக்கு நெருக்கமானவர்களிடம் இத்தகவல்களை நேரடியாகவே கூறியிருக்கின்றனர்.tinakural
போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை தேவை என அமெரிக்க செனட்டர்கள் இருவர் கோரிக்கை விடுத்தபோதும் விசாரணையில் இது அடங்கும் எனக்கூறுவதற்கில்லை. நல்லிணக்க முயற்சிகளும் பெரிதாக இல்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதைத் தான் நல்லிணக்கம் எனக் கருதுவது போலத் தெரிகின்றது. தற்போது தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பச்சை ஆக்கிரமிப்பைத் தடுப்பது பற்றிய ஏற்பாடுகள் விசாரணையில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தரப்பு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது விடயத்தில் அழுத்தங்களைக் கொடுக்காததனால் அது எதுவும் செய்யவில்லை.
இந்தத் தடவை சிராணி பண்டாரநாயக்க விவகாரம் அமெரிக்காவிற்கு போனஸாக கிடைத்திருப்பதனால் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைப் பாதுகாப்பு, நீதித்துறைச்சுதந்திரம் போன்ற விடயங்கள் பிரேரணையில் அடங்கலாம். இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுத் தளத்தில் சிறிய வெடிப்பை உருவாக்கியுள்ளமையினால் இதனை மேலும் அகலப்படுத்த அமெரிக்கா விரும்பலாம். அமெரிக்கா பிரேரணை விவகாரத்தில் இலங்கை  அரசாங்கத்தை எப்படியாவது வளைக்க விரும்புகின்றதே ஒழிய முறிக்க விரும்பவில்லை. சீன அச்சத்திற்கு அப்பால் மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கத்தினை மறிப்பதால் பல சங்கடங்கள் வரலாம் என்றும் அமெரிக்கா கருதுகின்றது. முறித்தால் தமிழ்த் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு அங்கீகரித்தால் சிங்கள தேசம் முழுமையான பகையாளியாகிவிடும். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தங்களது நலன்களைப் பாதுகாக்க முழு இலங்கைத் தீவுமே தேவை. இதனால் கூடியவரை தமிழர் விவகாரம் என்கின்ற கருவியைப் பயன்படுத்தி வளைப்பதிலேயே கவனம் செலுத்தும்.
இந்தியாவிற்கு இந்தத் தடவையும் பல சங்கடங்கள் உண்டு. அது உள்ளூர இலங்கையைப் பாதுகாக்கவே விரும்புகின்றது. ஆனால், அடுத்த வருடம் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் தமிழகத்தின் அபிலாஷைகளை புறம் தள்ளத் தயங்குகின்றது. இலங்கையை ஆதரித்தால் ஏற்கனவே தமிழகத்தில் கந்தலாகியிருக்கும் காங்கிரஸ் கட்சி மேலும் கந்தலாகிவிடும். தி.மு.க. கூட்டணியிலிருந்து மெல்லக் கழரப்பார்க்கும். இந்தத் தடவை காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதனால், தி.மு.க. விற்கு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கழரும் நோக்கமும் உண்டு. தி.மு.க. காங்கிரஸோடு தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதற்கு பிரதான காரணம் ஸ்பெக்ரம் ஊழல் வழக்குதான். ஆட்சிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் உறவினை வைத்திருந்தால் தான் வழக்கிற்கு முகம் கொடுப்பது இலகுவாக இருக்கும்.
தி.மு.க. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கும் மகஜர் கொடுத்துள்ளது. இது விடயத்தில் பல மாங்காய்களை விழுத்தவே தி.மு.க. முனைகிறது. தேர்தலில் ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகளை எப்படியாவது பெறுதல் வேண்டும். அதற்கு ஜெயலலிதாவை விட ஈழத் தமிழர் மீது தான் அதிக அக்கறையாக இருக்கின்றேன் என்பதைக் காட்ட வேண்டும். இரண்டாவது தமிழ் நாட்டில் தனது தலைமையில் தான்  கூட்டணி என்ற மரபினை மீறி விஜயகாந்தின் தே.மு.தி. கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை முயன்று வருகின்றது. காங்கிரஸின் இந்தக் குறுக்கு வழி ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு காங்கிரஸ் தலைமையை கொஞ்சம் தட்டி வைக்க வேண்டும். மூன்றாவது காங்கிரஸின் செல்வாக்கு தொடர்ந்து சரியுமானால் காங்கிரஸிடமிருந்து கழர வேண்டும். அவ்வாறு கழருவதால் வெளியில் கூறக்கூடிய துரும்பு இருக்க வேண்டும். ஜெனீவா விவகாரம் இவற்றுக்கெல்லாம் ஓர் நல்ல துரும்பாக இருக்கின்றது.
வைகோவின் ம.தி.மு.க. அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் இணைந்திருக்க விரும்புகின்றார்களா? இல்லையா என்பது தொடர்பாக அவர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் தாயகத் தமிழர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஜெயலலிதா இதுவரை பிரேரணை பற்றி எதுவும் கூறவில்லை. ஜெயலலிதா வெறும் கருத்துகளாக கூறாமல் சட்டசபையில் காட்டமான தீர்மானங்களாக தனது கருத்துகளை நிறைவேற்றுவார். அந்தத் தீர்மானங்களுக்கு எப்போதும் இரண்டு இலக்குகள் இருக்கும். ஒன்று தமிழ் உணர்வாளர்களை தனது பக்கத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பது. இரண்டாவது கருணாநிதிக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் பல சங்கடங்களைக் கொடுக்கின்ற அவர்களது பிரசாரங்களை பலவீனப்படுத்துகின்ற வலுவான தீர்மானங்களாக அவை இருப்பது.
ஏற்கனவே ஜெயலலிதா நிறைவேற்றிச் இரண்டு தீர்மானங்கள் தொடர்பாக காங்கிரஸும் தி.மு.க.வும் ஆடிப்போயுள்ளன. ஒன்று இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம். இந்தத் தீர்மானத்தை தி.மு.க.வோ, காங்கிரஸோ ஒருபோதும் எடுக்க முடியாது. தி.மு.க.விற்கு எடுக்க முடியுமாயின் காங்கிரஸ் தலைமைக்கு சங்கடங்கள் வருவதை அது விரும்பாது. காங்கிரஸ் இத்தீர்மானத்தை எடுப்பதாயின் இலங்கை தொடர்பான அதன் வெளியுறவுக் கொள்ளை முழுமையாக மாற்றமடைய வேண்டும். அத்தோடு இலங்கையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளிலும் பாதிப்புகளை சம்பாதிக்க வேண்டி வரும். தமிழக ஆளுநர் ரோசையா அண்மையில் பொருளாதாரத் தடை தீர்மானத்தை மீண்டும் நினைவூட்டியிருக்கின்றார். இங்கு ஜெயலலிதாவின் விருப்பத்தையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இரண்டாவது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படைகளுக்குப் பயிற்சி வழங்கக் கூடாது என்ற தீர்மானமாகும். காங்கிரஸ் இது விடயத்தில் தமிழ்நாட்டைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் பயிற்சிகளை வழங்கவே விரும்புகின்றது. நடைமுறையிலும் அதனை மேற்கொள்கிறது.
இந்த இரண்டு தீர்மானங்களும் தமிழக மக்களைப் பொறுத்தவரை உணர்வு பூர்வமான தீர்மானங்கள். தமிழக மக்கள் இலங்கை இராணுவத்தை தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்த கொலைகார இராணுவமாகவே பார்க்கின்றன. இதனால் இந்தியாவின் எந்த இடத்திலும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கக் கூடாது என்பது அவர்களது பொதுக்கருத்தாக உள்ளது. இதைவிட நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இலங்கையை எந்தவிதத்திலாவது தண்டிக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். இதனால் ஜெயலலிதாவின் பொருளாதாரத் தடை தொடர்பான தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றனர்.
அமெரிக்காவின் ஜெனீவா பிரேரணை வந்த பின்னர் மேலும் அதிரடித் தீர்மானங்களை ஜெயலலிதா அறிவிக்கக்கூடும். நிச்சயமாக அந்தத் தீர்மானங்கள் கருணாநிதியின் தீர்மானங்களை விட உயர்ந்ததாகவே இருக்கும். கருணாநிதி சற்றுக் புத்திசாலித்தனமாக இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். ஜெயலலிதா இதனையும் விட உயர்ந்த வகையில் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கலாம். ஏற்கனவே, ஜேர்மனியில் கூடிய தாயக அரசியல் சக்திகளும் புலம்பெயர் சக்திகளும் "ஆர் 2 பீ' என்கின்ற பாதுகாப்பதற்கான பொறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பினை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தத் தீர்மானத்தை ஆதரித்து ஜெயலலிதாவும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றக்கூடும். ஜெயலலிதாவின் தீர்மானம் தமிழ்நாடு சட்டசபைத் தீர்மானமாக வரக்கூடிய நிலை இருப்பதனால் அதன் பெறுமதி கருணாநிதியின் தீர்மானங்களையும் விட அதிகமானதாகவே இருக்கும்.
இன்று தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் விவகாரம் வாக்குவங்கியில் பாதிப்புச் செலுத்தும் விவகாரமாக மாறியுள்ளது. இதனால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக்கொண்டு ஈழத் தமிழர் விவகாரத்தை உயர்த்திப் பிடிக்கவே முனைவர். அதிலும் கருணாநிதிக்குள்ள பெருங்கவலை ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் தளம் தன்னிடமிருந்து ஜெயலலிதாவின் கைக்கு மாறிவிட்டது என்பதே. அவர் எப்பாடுபட்டாவது அதனை மீண்டும் பறித்தெடுக்க முயல்கின்றார். ரெசோ அமைப்புக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சி இதன் அடிப்படையில்தான் எழுந்தது. புலிகளின் வீழ்ச்சி தன்னைப் பாதாளத்தில் கொண்டு போய் வீழ்த்தும் என கருணாநிதி முன்னர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவிலுள்ள இரண்டாவது சங்கடம் அமெரிக்கா பிரேரணையைக் கொண்டு வருவதால் அதனை நிராகரிக்க முடியாது என்பதாகும். சென்ற தடவை  இந்தியா ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்நாடு அழுத்தம் என்பதற்கு அப்பால் இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இன்று இந்தியாவின் சர்வதேசக் கூட்டாளியும் பிராந்தியக் கூட்டாளியும் அமெரிக்காதான். பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலையும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலையும் சமாளிக்க அமெரிக்காவையே இந்தியா நம்பியிருக்கிறது. எனவே, அமெரிக்காவை நிராகரித்துவிட்டு தற்போதைய சூழலில் இந்தியாவினால் தனது இருப்பைப் பாதுகாக்க முடியாது. இதைவிட ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் பெறும் இலக்கும் இந்தியாவிற்கு உண்டு. இதற்கும் அமெரிக்காவின் ஆதரவு தேவை.
எனவே இந்தியாவினால் அமெரிக்காவின் பிரேரணையை நிராகரிக்க முடியாது.
ஆனால், பிரேரணையில் வீரியத்தை இயன்றளவு குறைக்கப்பார்க்கும். சென்ற தடவையும் அதனையே மேற்கொண்டது. இந்தத் தடவையும் அதற்கு முயற்சி செய்யலாம். ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சர் பீரிஸ் இந்தியாவிடம் ஆதரவு கேட்டிருக்கின்றார். 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த கால அவகாசம் கேட்டிருக்கிறார். திவிநெகும சட்டத்தின் பின்னர் 13 ஆவது திருத்தத்தில் எதுவுமில்லை என்பது வேறுகதை. இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக வெளிநாட்டமைச்சரிடம் கூறியுள்ளது. இதன்போது பிரேரணையின் வீரியத்தைக் குறைக்க ஆவண செய்வேன் எனக் கூறியிருக்கலாம்.
சர்வதேச அழுத்தங்கள் எல்லாம் இந்தியாவைத் தாண்டி வருகின்றபோது வீரியக்குறைப்புக்கு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது. ஜெனீவாவில் இருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் இதனை நேரடியாகவே சிலருக்கு கூறியிருக்கின்றனர். "வலுவான அழுத்தங்களைக் கொடுக்க இந்தியா விடுவதில்லை' என அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்தியா மேற்கொள்ளும் இத்தொடர்கதையை எப்படியாவது நாம் நிறுத்தியாக வேண்டும். சில பத்தி எழுத்தாளர்கள் இந்தியா இப்படித்தான் செய்யும். நாம் பணிந்து போக வேண்டும் எனப் போதனை செய்யப் பார்க்கின்றனர். அவர்கள் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை என்றைக்குமே மாறாத பைபிள் போன்றே கருதுகின்றனர். சமூக விஞ்ஞானத்தின் இயங்கியல் தன்மையை மறுக்கின்றனர். இயங்கியல் கோட்பாட்டின் படி  சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களுக்கு இடைவிடாத அழுத்தம் முக்கியம். முன்னர் இலங்கை விடயத்தில் அணைத்தலை மட்டும் மேற்கொண்ட இந்திய அரசு கடந்த ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் அழுத்தங்களுடன் கூடிய அணைத்தலை மேற்கொள்கின்றது. இது முக்கியமான மாற்றமே. எதிர்காலத்தில் இம்மாற்றங்கள் மேலும் அதிகரிக்கலாம். இதற்கு முக்கிய கருவியாக தமிழகமே இருக்கும்.
இந்திய மத்திய அரசாங்கம் என்பது மாநிலக் கட்சிகளையும் இணைத்த அரசாங் கமாக இருப்பது இன்று பொது விதியாகிவிட்டது. இந்தப் பன்மைத்தன்மை அழுத்தங்களுக்கான கதவுகளை நன்றாகவே திறந்துவிடும். இந்திய ஆய்வாளர்கள் பலர் இனிவருங்காலங்களில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாநிலங்கள் முக்கிய பங்குவகிக்கும் எனக் கூறத் தொடங்கிவிட்டனர்.
எனவே, தமிழ்த் தேசிய அரசியலுக்கான ஒரு பகுதி வேலைத்திட்டம் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் காத்திருக்கின்றது. இந்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் இயக்கம் ஒரு சுயாதீனமான இயக்கமாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசாங்கத்தின் சலுகைகளைப்  பெற்று எடுபிடிகளைப் போல இருக்கின்ற அமைப்பினால் இந்தப் பணியைச் செய்ய முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனம் இங்குதான் மிக வெளிச்சமாகத் தெரிகின்றது.இது இந்திய மத்திய அரசின் ஒரு எடுபிடி அமைப்பு. இதனால்தான் கூட்டமைப்பின் தலைமைகள் இதுவரை ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை.
வல்லரசுகள் தங்கள் நலன்களிலிருந்துதான் நிகழ்ச்சி நிரல்களை நகர்த்தும் என்பது உண்மையே. அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் இணைப்பதில்தான் தமிழரசியலின் கெட்டித்தனம் தங்கியுள்ளது. எனது முன்னைய கட்டுரைகளில் கூறியதைப் போல வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைமை தேவையில்லை. அது வெறும் அடிமைக்கூட்டங்கள் செய்கின்ற வேலை.
ஜெனீவா வரலாற்று ரீதியாக தமிழ்த்தரப்பிற்கு ஒரு வலுவான தளத்தைக் கொடுத்திருக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு தமிழர்களது நலன்கள் பெரிதாக பேசுபொருளாகவில்லை. மாறாக வல்லரசுகளின் நலன்களே கவனத்தில் எடுக்கப்படுகின்றன.
தமிழ்த்தரப்பு என்றைக்கும் வரலாற்றைக் கோட்டை விடப்போகின்றதா? என்பதே இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்வி.

ad

ad