புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று (21) வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. 

இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2வது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. 

இந்த 2வது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12ம் திகதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. சில கடுமையான வாசகங்களும் இடம்பெற்றன. 

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18ம் தேதி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. 

வரைவு தீர்மானத்தில் இடம் பெற்ற கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இலங்கை அரசே சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மனித உரிமை ஆர்வலர்களும் இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டனர். 

இந்த சூழ்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்று காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 2.35) அமெரிக்க தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்து பேசுவார்கள். விவாதத்தின் முடிவில் தேவைப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும். 

இலங்கையே வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. எனவே, வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

47 உறுப்பு நாடுகளை கொண்ட பேரவையில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. ஆதரவை பெருக்கி தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 

எனினும், கடந்த முறை போல் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐ.நா. மனித உரிமை பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் கூறப்பட்டதாவது: 

இலங்கையில் தற்போதுள்ள நிலைமைகளை சரியாக கவனத்தில் கொள்ளாமல், இலங்கையை அவமதிக்கும் வகையில், தனிமைப்படுத்தும் வகையில், புண்படுத்தும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இது இலங்கை அரசின் மறுசீரமைப்பு பணிகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, கடந்த முறை மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தது போல், இந்த தீர்மானத்தையும் இலங்கை நிராகரிக்கும். 21ம் திகதி இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் போது, இதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படும். 

அமெரிக்காவின் தீர்மானம் ஒருதலைப் பட்சமாகவும், அரசியல் நோக்கமுடையதாகவும் உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, வருங்காலத்தில் எல்லா நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கிறோம். 

இந்த தீர்மானத்தால், இலங்கையில் கஷ்டப்பட்டு மீட்கப்பட்ட அமைதியை சீர்குலைக்கும் பிரிவினை சக்திகளுக்குத்தான் பலன் கிடைக்குமே தவிர வேறு யாருக்கும் இல்லை. 

எனவே, உறுப்பு நாடுகள் இதை புரிந்து கொண்டு இலங்கையை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பீரிஸ் கூறியுள்ளார். 

ad

ad