புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

மீட்கப்பட்டவர்களிடம் விசாரனை! 28 ஆண்டுகளாக கொத்தடிமைகளாகவே இருந்ததாக திடிக்கிடும் தகவல்!Photos


 


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள கீழாத்தூரில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாண்டுரெங்கனுக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் பள்ளிநெலியனூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 43 பேர்   கொத்தடிமையாக கடந்த 10 நாட்களாக வேலை பார்த்துள்ளனர்.  
இது குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய ஆதிவாசி தோழமை கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கன்னியப்பன் தலைமையிலானோர் தொழிலாளர்களிடம் கீழாத்தூரில் ரகசியமாக விசாரித்துள்ளனர். அப்போது, பாண்டுரெங்கனிடம் 28 ஆண்டுகள் கொத்தடிமைகளாகவே தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இவர்களை வைத்து வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 
இது குறித்து அந்தக் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முத்துமாரிக்கு சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு ஆலங்குடி வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில்நாயகி உள்ளிட்டோர் கீழாத்தூர் வந்து மலைவாழ் மக்களிடம் விசாரித்தனர். 
விசாரணையில் தெரியவந்ததாவது: விழுப்புரம் மாவட்டம் பள்ளிநேலியனூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்களை 3 குழுவாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கண்காணிப்பாளரை நியமித்து கரும்பு வெட்டும் வேலைக்கு பயன்படுத்தியுள்ளார் பாண்டுரெங்கன். 
அதில், கரும்பு ஆலை நிர்வாகத்திடம் ஒப்பந்தம் செய்யும் கூலியை இவர்களுக்கு கொடுக்காமல் அதில் 10 விழுக்காடு மட்டுமே கொடுத்துள்ளார். மேலும், ஆண்டுக்கு தீபாவளி பண்டிகையின்போது 5 நாட்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு லாரியில் அழைத்துச்சென்று விடுவதும், பின்னர், மீண்டும் கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். 
எந்தப்பகுதிக்கு ஆள் தேவைப்படுகிறதோ அங்கு கொண்டு போய் தங்கவைத்து வேலை வாங்கியுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை சென்று செலவுக்கான கூலையை பாண்டுரெங்கன் கொடுத்துள்ளார். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் முன்பணமும் கொடுத்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு பார்க்கும்போது தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கடனில் இருப்பார்களாம்.
வேலைபார்க்கும் இடத்தில் மழை, வெயில் என எந்த சூழலாக இருந்தாலும் சாதாரண கரும்பு தோகையால் குடில் அமைத்துக்கொண்டு பிள்ளைகளோடு தங்கி வேலை பார்த்துள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்கள் சொந்த செலவிலேயே பார்த்துக்கொள்வார்களாம். பிள்ளைகளை படிக்கவைப்பதும் இல்லை, பெரும்பாலானோருக்கு குடும்ப அட்டை, வீட்டுமனை, ஓட்டு உரிமை இல்லை. 
இவ்வாறு அதிகநேரம் வேலை வாங்குதல், குறைவான கூலி, கல்வி மறுப்பு, சுகாதாரம் இல்லை, மிரட்டுதல் உள்ளிட்ட செயலில் பாண்டுரெங்கன் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து 3 இடங்களில் தங்கி இருந்த 43 பேரையும் லாரி மூலம் அழைத்துவந்து வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்கவைத்தனர். பின்னர், வருவாய் கோட்டாட்சியர் முத்துமாரி, வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான வருவாய்த்துறை பணியாளர்கள் கொத்தடிமை தொழில்முறை கண்டறிதல் படிவத்தில் தேவையான  விவரங்களை சேகரிக்கதொடங்கினர். 
3 நாளாகியும் விசாரணை நீடித்து வருகிறது. வருவாய்த்துறையினரின் விசாரணையில் இருப்பதால் கிராம நிர்வாக அதிகாரி தங்கராஜ் தலைமையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்குப்பிறகே சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுமென வருவாய்த்துறையினர் கூறுகின்றனர். 
மேலும், பழங்குடியினர் வகுப்பு மக்களுக்கான மாநில அமைச்சர் சுப்பிரமணியன் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை இரவு, பகலாக விசாரித்து வருகின்றனர்.  மேலும், 43 பேரை கொத்தடிமையாக வைத்திருந்த பாண்டுரெங்கனைப்பற்றியும் விசாரித்து வருகின்றனர்.  

      மேலும், விசாரணை முடிக்கப்பட்டு  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் கொத்தடிமையாளர்களிடம் இருந்து விடுதலை சான்று வழங்கப்படும்.  அதோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் தலா ஒவ்வொருவருக்கும் ரூ. 1000 பெற்று இவர்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு அழைத்து செல்லப்படும். பின்னர், அந்த மாவட்ட ஆட்சியரை அணுகி இவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 19 ஆயிரம் பெற்று வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.  

ad

ad