புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


ஈழம் தமிழர் தாயகம் இல்லையா? விகடன் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழ் 'செம்மலர்’. அதில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் எடுத்த விரிவான பேட்டி இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச் செல்வன், 'சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் ஆதரவுடன் அந்தக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய உண்ணாவிரதத்தில் ஆரம்பித்து...’ என்று குறிப்பிடுகிறார்.
லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்தது தன்னெழுச்சியான அவர்களின் உணர்வின் உந்துதல். அதற்கும் அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த மாணவர்கள் மிரட்டப்பட்டனர். உண்மை இவ்வாறு இருக்க, 'நிர்வாகத்தின் ஆதரவுடன்’ என்று சொல்வதற்கு என்ன காரணம்?
லயோலா நிர்வாகம் என்றால் கிறிஸ்தவர்களாம். கிறிஸ்தவப் பின்னணி என்றால், அமெரிக்காவாம். அமெரிக்காவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடந்ததாம். கூடங்குளம் மக்கள் தேவாலயம் முன்னால் உண்ணாவிரதம் உட்கார்ந்திருப்பதால் அது அமெரிக்கத் தூண்டுதல் என்று சொல்வதைப் போல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூளைக்குத்தான், இப்படி உள்நோக்கம் எல்லாம் கற்பிக்க முடியும்!
இந்தப் பேட்டியில் ஒரு கேள்வி...
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவதை ஆதரிப்பவர்கள், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பவர்கள் இலங்கைப் பிரச்னையில் மட்டும் மாறுபட்டு முடிவெடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கூறும் ஜி.ராமகிருஷ்ணன்,
'பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு. அவர்களின் நாட்டை அவர்களிடமிருந்து பறித்து ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டு, அந்த மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு....
 ஆகவே, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுடன் ஒப்பிட முடியாது’ என்கிறார். இதைப் போல வரலாற்று விரோதக் கருத்து எதுவும் இருக்க முடியாது. தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிராகரிக்கும் வார்த்தைகள் இவை.
பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு என்றால், ஈழ மக்களுக்கு அது சொந்த மண் அல்லவா? அவர்கள் அனைவருமே வந்தேறிகளா? 'குடியிருக்கப் போன இடத்தில் சண்டை போடலாமா?’ என்று திண்ணையில் உட்கார்ந்து பேசுவதைப் போல மார்க்சிஸ்ட்கள் பேசலாமா?
'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது.
பின்னர் காலந்தோறும் ஏற்பட்ட கடல் கோள்களாலேயே அந்த நிலப் பகுதி சிறிது சிறிதாகக் கடலில் மூழ்கி இப்போதுள்ள நிலையை அடைந்தது. தமிழ்நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும், இலங்கைத் தீவில் கரையோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது.
இந்தக் கடல் ஆழமில்லாது இருப்பது முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கையும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது’ என்று சொல்பவர் புலிவாதி அல்ல. வரலாற்றாசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி தான் இப்படிச் சொல்கிறார்.
சிங்களர் தங்கள் வரலாற்றைச் சொல்ல ஆதாரமாக 'மகாவம்சம்’ என்ற புத்தகத்தைக் காட்டுவார்கள். சிங்களர்களின் மூதாதையரான விஜயன் தன்னுடைய தோழர்களுடன் லாலா தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு ஏறி வந்த கப்பல், இலங்கையில் தரை தட்டிக் கரையேறியபோது, அவர்களுக்குப் புகலிடம் அளித்தவர் யட்சப் பெண்ணரசி 'குவெய்னி’ என்கிறது மகாவம்சம்.
அந்த குவெய்னியை ஏமாற்றி அரசுரிமை பெற்றான் விஜயன். 'குவி எய்னி = குவெய்னி. அதாவது அழகெல்லாம் ஒருங்கு திரண்டவள் என்று பொருள்படும் ஒரு தூய தமிழ்ச் சொல் இது’ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.
தலைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட மதுரை. இடைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட கபாடபுரம். கடைச்சங்கம் இருந்த இடம், உத்தர மதுரை. இதில் கபாடபுரம் என்பது எங்கே இருந்தது? பிளவுபடாத நிலப்பரப்பாகிய குமரிக் கண்டத்தில் தமிழகத்தில் தொடங்கி ஈழம் வரை தாமிரபரணி இருந்தது என்றும், அந்த ஆற்றைத் தாண்டி கபாடபுரம் இருந்தது என்றும், யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை சொல்கிறார். இது, தியரி வகுப்புகள் எடுத்த ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலக்கியவாதி தமிழ்ச்செல்வனுமா மறந்துபோனார்?
அநுராதாபுரத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் எல்லாளன், தமிழன். அவன் காலத்தில் இலங்கையில் 32 தமிழரசர்கள் இருந்தனர். அவர்களையெல்லாம் வென்ற பிறகுதான் சிங்கள மன்னன் துட்டகைமுனுவால் அரியணை ஏற முடிந்தது என்பதும், அவர்களே ஒப்புக்கொண்ட வரலாறு. ஈழத்துத் தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், சாசனவியல் ஆகியவற்றின் சான்று ஆதாரங்களுடன் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஈழத் தமிழர் தொன்மை குறித்து எழுதி இருக்கிறார்.
'பௌத்தக் கலாசாரம் பரவுவதற்கு முன், இந்தோ ஒஸ்ரிக் முண்டா, திராவிட மொழிகள் இங்கு பேசப்பட்டிருக்கலாம்’ என்ற கருத்தை பேராசிரியர் சுதர்சன் செனிலரத்தினா ஏற்றுக்கொள்கிறார். அநுராதாபுரத்தில் அகழ்வாய்வு செய்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கொன்னிங்காம் இதை ஒப்புக்கொள்கிறார்.
அநுராதாபுரம், பொலனறுவை, யாழ்ப்பாணம், தம்பதெனிய, கண்டி, கொட்டே ஆகிய ராஜ்யங்கள்தான் போர்ச்சுக்கீய, ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இருந்தவை. 1799-ல் பிரிட்டிஷார் வெளியிட்ட வரைபடத்தில் மூன்று ராஜதானிகள் உள்ளன. கொட்டி கிங்டம் (சிங்களீஷ்), கண்டி கிங்டம் (சிங்களீஷ் - ஒருமுறை தமிழ் மன்னர் ஆளுகையில் இருந்தது.) ஜாஃப்னா கிங்டம் (தமிழ்) என்று அவற்றைக் குறித்துள்ளனர்.
வட மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் என்பதைப் பல சிங்கள வரலாற்று ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர்.பிரிந்து கிடந்த பகுதியை பிரிட்டிஷார் தான் ஒன்று படுத்தினார்கள். நாட்டைவிட்டு வெளியேறும் போது சிங்களவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுப் போனார்கள்.
அதுதான் சிக்கலே. 'வடக்கு - கிழக்கு பகுதி என்பது தமிழர் தாயகம்’ என்று தமிழ்த் தேசியவாதிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படுவது அல்ல. ராஜீவ் - ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே, 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்களாக இருந்துள்ளன’ என்று இருக்கிறது.
வட கிழக்கு மாகாணத்தை இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப்பிரதேசங்​களாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவே ஒப்புக்​கொண்டார். ஆனால், மார்க்சிஸ்ட் செயலாளர் இதை நிராகரித்து, 'இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு’ என்று முக்கியத்தன்மையைக் குறைக்கிறார்.
வரலாற்றுக் காலம் முதல் தமிழர்கள் அங்கு வாழ்ந்த உரிமை என்பதே தாயக உரிமை. இதை ஒப்புக்கொண்டால், தேசிய இனப் பிரச்னை தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்பதால், ஈழத் தமிழர்களின் முன்வரலாற்றையே மறைக்கப்பார்க்கிறார்கள்.
பாலஸ்தீன விடுதலை பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்ரேலியக் கொடுமை பற்றி விலாவாரியாக எழுதும். அந்த இஸ்ரேல் அளவுக்கதிகமான அழித்தொழிப்பு வேலைகளை பாலஸ்தீனம், சிரியாவில் செய்ததைப்போல ஈழத்திலும் செய்தது.
இரத்தக் கறை படிந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, 1983-ல் இஸ்ரேலைத்தான் முதலில் அணுகினார். அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பீ.சமரசிங்காவை இஸ்ரேலுக்கு ரகசியமாக அனுப்பிவைத்தார். அதன்பிறகு, ஜெயவர்த்தனாவின் மகனும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த ரவி ஜெயவர்த்தனாவும் இஸ்ரேல் போனார்.
மொசாட் தலைவர் அட்மொனியையும், இஸ்ரேல் பிரதமர் ஷமீரையும் சந்தித்தனர். 'ஒரு பொதுவான எதிரியை - பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இஸ்ரேலின் வளங்களைப் பயன்படுத்தத் தயார்’ என்று ஷமீர் வாக்களித்தார்.
இலங்கைப் படைக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது. இதை அப்போதே முஸ்லீம் எம்.பி.கள் கண்டித்தனர். 'அரசாங்கத்தின் முடிவு பிடிக்கவில்லை என்றால், கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்’ என்று பகிரங்கமாகவே ஜெயவர்த்தனா அறிவித்தார்.
சிங்கள இராணுவம் கொடூரமாக மாறுவதற்கு இந்தப் பயிற்சிகள்தான் பயன்பட்டன. முழுக் கிராமங்களையும் தீயிட்டுக் கொளுத்துதல், அகதி முகாமுக்குள் நுழைந்து அனைவரையும் வெட்டிப் போடுவது, தேடித் தேடிக் கண்டுபிடித்துக் கொல்வது போன்றவை அப்போதுதான் ஆரம்பமாகின. சித்ரவதையில் கோரமான முறைகள் கையாளப்பட்டன. தமிழ்ப் பகுதியில் நடத்தப்பட்ட வன்கொடுமைகளை விவரித்தால், துன்பமே அதிகமாகும்.
தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய வேட்டு வைக்கும் சம்பவத்தை அன்று மொசாட் செய்தது. இனத்தால், மொழியால் தமிழர்களாகவும், மதத்தால் முஸ்லிம்களாகவும் இருந்தவர்களை இரு பிரிவாகப் பிரித்து மோதவிடும் வேலையைத் தொடங்கியது. 'இஸ்ரேலின் மொசாட் என்ற உளவுப் பிரிவின் ஆலோசனைக்கு இணங்க தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஆழ்ந்த பிரிவினையை உருவாக்கும் பொருட்டு தமிழ்-முஸ்லிம் கலவரங்களை உருவாக்குவதற்குத் தூண்டிவிடப்பட்டனர்’ என்று, கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதுகிறார்.
இவர் புலி ஆதரவாளர் அல்ல. இப்படி, தமிழர் ஒற்றுமையை இஸ்ரேல் சிதைத்த வரலாற்றை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் எடுத்துப் பார்க்க வேண்டும்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கொடுமை செய்தால் பரிதாபப்படுவதும்... அதையே, ஈழத்தில் செய்தால் பாராமுகமாக இருப்பதும் ஓரவஞ்சகச் சிந்தனை. இது ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகிக்கு மட்டுமல்ல... அந்தக் காலத்தில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், பி.ராமமூர்த்தி போன்ற பெரிய தலைவர்களுக்கே இருந்துள்ளது. அதுவே இன்று வரை தொடர்கிறது!
-தொடரும்

ad

ad