திருமாவளவனுக்கு தடை நீக்கம் : இனி விழுப்புரம் மாவட்டத்திற்குள் செல்லலாம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்டத்தில் நுழைவதற்கு உயர்நீதி மன்றம் இன்று அனுமதி அளித்தது.
கடந்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சியினர் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் நுழைவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். இதை எதிர்த்து தலைவர் திருமா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்த வழக்கில் ஏற்கெனவே இடைக்கால அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தடையை முற்றாக நீக்க விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் போராடி வந்தனர்.
இந்நிலையில் வரும் ஜூன் 28 முதல் சூலை 5 ம் நாள் வரை கடலூர், நாகை , அரியலூ,மதுரை, தேனி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய வேண்டியிருப்பதால் மாவட்ட ஆட்சியர் விதித்த தடையாணையை தளர்த்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் இன்று வாதம் நடைபெற்றது. வாதத்தின் உண்மைகளை ஏற்றுக் கொண்ட நீதியரசர் சசிதரன் திருமா மேற்கொள்ளும் சுற்று பயணத்திற்கு அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு காட்டினாலும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து தீர்ப்பளித்தார்.