புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013


Kalaignar Karunanidhi · 32,699 like this
43 minutes ago · 
தி.மு.கழகம் ஆற்றும் அறப்பணிகளில் சில !

கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி வழங்கும்போதும் நாம் திரட்டுகிற கழக நிதியைத் தேர்தலுக்காகப் பயன் படுத்துவதைத் தவிர, இந்திய அளவில், மாநில அளவில் இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட, அரசுக்கு உதவி வருவதை வழக்கமாகக் கொண்டு வருகிறோம். மேலும், கட்சியில் நலிந்த நிலைக்கு ஆளாகியுள்ள உடன்பிறப்புகளின் கல்வி உதவி, நோய் சிகிச்சை போன்ற அவசர அவசியங்களுக்கும் நிதி உதவி செய்து வருகிறோம். ஒருசிலர் அதிகமாக எதிர்பார்த்த போதிலும், அனைவருக்கும் பரவலாக உதவிட வேண்டுமென்ற அடிப்படையில் முடிந்த அளவு உதவித் தொகையை வழங்கி வருகிறோம்.
கழகம் திரட்டுகின்ற நிதிக்கும் கணக்கு உண்டு; அவை யார் யாருக்கு எதற்காக வழங்கப்படுகின்றன என்பதற்கும் கணக்கு உண்டு. அதுபற்றி அவ்வப்போது ஏடுகள் வாயிலாக வெளியிட்டும் வருகிறோம்.
தி.மு.க.வில் நலிந்த நிலையில் இருப்போர், உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டோர், விபத்துக்கு ஆளானவர்கள், அடக்குமுறை காரணமாகவோ; மாற்றுக் கட்சியினர் நடத்திய அராஜகத்தினாலோ பாதிக்கப்பட்டோர் எனப் பல பிரிவினருக்கும்; அஃதன்னியில் மாணவர்கள் கல்வியை ஊக்கப்படுத்தவும், தொழிலாளர்கள் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு தரவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை ஒப்புவிப்போரை உற்சாகப்படுத்தவும், பெரியார், அண்ணா, புரட்சிக் கவிஞர், கழகத் தலைவர் பெயர்களால் விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கவும், இவையன்னியில் ‘முரசொலி’ விருது கள் என பெருநிதியை வழங்கவும் - அண்ணா அறிவாலயத்தில் கழக வரலாற்றுக் கருவூலத்தைத் தொடர்ந்து நடத்தவும் - வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையைச் சிறப்புற நடத்தவும் - பேராசிரியர் நூல் நிலையம் ஒன்றை மிகப் பெரும் நூல் நிலையம், படிப்பகம் என்று நடத் திடவும் - இத்தனை பணிகளும் இவை தொடர் பான சமூகப் பணிகளும் கழகத்தின் சார்பில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
கழகத்தின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டதற்கு சில உதாரணங்களை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தபோதிலும், மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.
1976ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டோர் குடும்பங் களுக்கு மாதந்தோறும் கழகச் சார்பில் தேவைப் பட்டோருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட குடும்பங்களில் மிசாக் கைதியாக சிறையில் மறைந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு அப்போது மாதந்தோறும் அளித்து வந்த உதவி நிதி ரூபாய் இருநூறு, 1976 முதல் 2010ஆம் ஆண்டு வரையும் வழங்கப்பட்டு, அதன் பின்னர் அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு பண விடைத்தாள் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. 
தி.மு.க. அறக்கட்டளை சார்பில் வெற்றிச் செல்வி அன்பழகன் இலவசக் கண் மருத்துவ மனையில் 1988 முதல் இதுவரையில் மருந்துகள், கருவிகள், பணிபுரிவோர் ஊதியம் உட்பட ரூபாய் 44,95,525 (சுமார் 45 இலட்சம் ரூபாய்) செலவாகி யிருக்கிறது. அந்த மருத்துவமனையில் டாக்டர் வசந்தி அவர்களின் மேற்பார்வையில், கண் அறுவை சிகிச்சை உட்பட இந்தக் காலகட்டத்தில் 70,656 பேர் (சுமார் எழுபதாயிரம் பேர்) இலவசமாகப் பயன் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி கடல் கொந்தளிப் பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி நிதியாக 28-12-2004 அன்று பிரதமர் நிவாரண நிதியாக திருமதி சோனியா காந்தி அம்மையார் மூலம் (ரூபாய் 1,00,00,000) ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
நான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கழக முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர் சுனாமி நிவாரண நிதியாக வழங்கி, பிரதமர் நிதியில் சேர்க்கப்பட்ட வகையில் மொத்தம் 1 கோடியே 97 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் 2004-2005இல் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கும் உதவி நிதியாக 222 பேருக்கு 9 இலட்சத்து 44 ஆயிரத்து 885 ரூபாயும், 11 பேருக்கு மருத்துவச் செலவிற்காக 
50 ஆயிரத்து 300 ரூபாயும்,
தீ விபத்து மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 650 ரூபாயும், இலங்கையில் ராணுவத்தினரின் கொடுமை களுக்காளாகி வீடுகளை இழந்து உண்ண உண வின்றி வாடிய ஈழத் தமிழர்களுக்கு உதவி நிதியாக 
4-6-1987 அன்று ஒரு இலட்சம் ரூபாயும், ஈழத்தில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மருத்துவ உதவி களுக்காக 3-11-1995 அன்று 25 இலட்சம் ரூபாயும்,
சென்னை லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி -சீர்காழி கோவிந்தராஜன் நினைவு அறக்கட்டளை - காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலம் - கியூபா நாட்டு மக்களுக்கு உதவி - மராட்டிய மாநில பூகம்ப நிதி உதவி - "உதவும் கரங்கள்'' சேவை நிறுவனத்திற்கு நிதி - தமிழகத் தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையொட்டி வெள்ள நிவாரண நிதி - கார்கில் போரில் வீரமரணமடைந்த 11 பேர்களின் குடும்ப நிவாரண நிதி - அரசு அலுவலர், ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டு இறந்த இருவரின் குடும்பங்களுக்கு நிதியென மொத்தம் 58 இலட்சத்து 66 ஆயிரத்து 853 ரூபாய் நிதி தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் மட்டுமல்லாமல், தி.மு.க. தலைமைக் கழகச் சார்பில் 1985 முதல் 2005 வரை இருபதாண்டுகளில் ஒரு கோடியே 39 இலட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டுள் ளது. அந்தப் பட்டியலில், 370 கழகத் தோழர்களின் குடும்ப நிதியாக 1 கோடியே 6 இலட்சத்து 
9 ஆயிரத்து 432 ரூபாயும், 205 கழகத் தோழர்களின் மருத்துவ உதவி நிதியாக 8 இலட்சத்து 
97 ஆயிரத்து 983 ரூபாயும், 358 கழகச் சொற்பொழி வாளர்களின் உதவி நிதியாக 6 இலட்சத்து 
97 ஆயிரத்து 500 ரூபாயும், 34 பேருக்கு முப்பெரும் விழா விருது பெற்றவர்களுக்கு பொற்கிழி வழங்கிய வகையில் 4 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், தமிழ் ஈழ மக்களுக்கு நிதி உதவி மற்றும் குஜராத் பூகம்ப நிதி வழங்கிய வகையில் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இடம் பெறும்.
2005ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தி.மு.கழக அறக்கட்டளையின் சார்பாக மராட்டிய மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் வாடும் மக்களின் துயர் துடைப்பதற்காக 10 லட்சம் ரூபாயும், 
பாகிஸ்தான் - ஜம்மு-காஷ்மீர் பூகம்ப நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாயும், தமிழகத்தில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட 25 லட்சம் ரூபாயும், 2011ஆம் ஆண்டு தாக்கிய "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட 50 லட்சம் ரூபாயும் என்பன போன்றவைகளுக்காக 98 லட்சத்து 79 ஆயிரத்து 5 ரூபாயும் வழங்கப் பட்டுள்ளன.
தலைமைக் கழகத்தின் சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை கழகத் தோழர்களுக்கு உதவியாக அளித்த வகையிலும், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது வாரிசுகளுக்கு 40 லட்சம் ரூபாயும், டெல்லி யில் உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் மரபுரிமையர்களுக்கு 55 லட்சம் ரூபாயும், ஏன் அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருமழையினால் பாதிக்கப்பட்டோ ருக்கு உதவிட 25 லட்சம் ரூபாயும் என மொத்தம் 2 கோடியே 12 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
கழகத்தின் சார்பிலும், தி.மு.கழக அறக்கட்டளை யின் சார்பிலும் உதவி நிதிகளை வழங்குவதைப் போலவே, தி.மு.கழக இளைஞர் அணி அறக் கட்டளையின் சார்பாக கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய பிறந்த நாளினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு - மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர் களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதமும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதமும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதமும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதமும் தொடர்ந்து நான்காண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளில் 1,646 மாணவ, மாண வியர்க்கு 97 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் உதவி நிதியாக தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டுக்கான உதவித் தொகை 29-6-2013 அன்று மதுரையில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 211 மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் 1,364 மாணவர்களுக்கும் மொத்தம் 97 இலட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் கழகப் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவுள்ளது. மாணவர்களை அழைத்து வந்து, பரிசு பெறச் செய்து, பின்னர் பத்திரமாக அழைத்துச் செல்லும் பொறுப்புகளையெல்லாம் இளைஞர் அணியினரே ஏற்றுக் கொள்கிறார்கள். 
தமிழக அரசின் சார்பில் தமிழைப் மொழிப் பாடமாகக் கொண்டு, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கும், அதுபோலவே 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக் கும் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டு வருகின்றன. ஆனால் நமது தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் இந்த இரண்டு தேர்வுகளிலும், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு மாத்திரமல்லாமல், மாவட்ட அளவிலும் இந்த இரண்டு தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அரசின் சார்பில் இந்த விருதுகள் வழங்குவதிலே கூட குழப்பங்கள் ஏற்பட்டு, அதைப் பற்றி "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியிட்டதைப் போலவே நானும் எழுதிய பிறகு முதல் அமைச்சர் அதை நேரடியாகக் கவனித்து பரிசு பெறாமல் ஊருக்குத் திரும்பச் சென்ற மாணவர்களையெல்லாம் மீண்டும் சென்னைக்கு அழைத்து நேரடியாக அவரே வழங்கியிருக்கிறார். அரசின் சார்பில் இந்த ஆண்டு சுமார் 200 மாணவர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மதுரையில் சுமார் 1500 மாணவர்களுக்கு 29ஆம் தேதி ரொக்கப் பரிசுகள் வழங்கவிருப்பதால் அதிலே எந்தவிதமான குளறுபடிக்கும் நாம் இடம் கொடுத்துவிடாமல் மாணவர்கள் மகிழ்வோடு பரிசுகளைப் பெற்றுச் செல்ல வழிவகுக்க வேண்டும்.
இந்த ஆண்டு இவ்வளவு மாணவர்கள் இந்தப் பரிசுகளைப் பெறுவதற்குக் காரணம், நீண்ட வரலாறு கொண்டதும், நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாக நிலைநாட்டப்பட்டதுமான சமச்சீர் கல்வித் திட்டத்தின் காரணமாக, 2013ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வில், பல்லாண்டுக் காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு அதிக அளவில் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 2013ஆம் ஆண்டு 89 விழுக்காடு வெற்றி கிடைத்துள்ளது. இது 2012ஆம் ஆண்டைவிட, 2.8 விழுக்காடு அதிகமாகும். மாணவர்களில் 86 சதவிகிதம் பேரும், மாணவியர்களில் 92 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். 52 பேர் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 137 பேர் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவ்வாறு கழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தினால், சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன! அதன் காரணமாகத் தான் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக கடந்த நான்காண்டுகளில் எந்த அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டதோ, அந்த நான்காண்டில் வழங்கப்பட்ட மொத்தத் தொகைக்குச் சமமாக இந்த ஓராண்டில் மட்டும் பரிசுகளை மாணவச் செல்வங்களுக்கு வாரி வழங்கவிருக்கிறார்கள். 
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மேலும் ஒரு பாராட்டத்தக்கப் பணியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை யொட்டி, அவரது நூற்றாண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போன்ற போட்டிகளை நடத்தி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஐந்தாண்டுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் வாயிலாக 7 ஆயிரத்து 98 மாணவர்களுக்கு 
1 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கழகத்தின் சார்பில் ஆனாலும், இளைஞர் அணியின் சார்பில் ஆனாலும் திரட்டப் படுகின்ற ஒவ்வொரு ரூபாயும் முறையாக நல்ல காரியங்களுக்காகவே செலவழிக்கப்படுகின்றன என்பதை விளக்குவதற்காகவே இந்தக் கடிதம். 29ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் பரிசு பெறவிருக்கும் 1500 மாணவ, மாணவியரை யும் வாழ்த்துகிறேன். இந்தப் பரிசுகளை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பெறுகின்ற அளவிற்கு மற்ற மாணவர்களும் முனைந்து கல்வியில் தங்கள் நாட்டத்தைச் செலுத்திட வேண்டுகிறேன்.

ad

ad