புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

'இலங்கை படுகொலைகளின் மண்’ தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை-விகடன் 
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.
புலிப் பிள்ளையே, ஈராக்குக்குப் போ இலங்கைக்கு வராதே’ -புத்த மதவாதம் வழியே இனவாதம் பேசும் ராவண பலய இயக்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்த போது அவருக்கு எதிராக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன் நடத்திய போராட்ட கோஷம் இது.
ஆனால் நவநீதம்பிள்ளையோ, 'யாரையும் விமர்சிக்க இங்கு நான் வரவில்லை. இலங்கை அரசின் அழைப்பின் பேரில், இங்குள்ள மனிதஉரிமை சூழ்நிலையை ஆராய்வதற்காக வந்துள்ளேன்’ என்று, தன் இலங்கைப் பயணத்தைத் தொடங்கினார்.
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது, தமிழ் அரசியல் கைதிகளின் நிலை பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விவாதித்து, பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இருப்பது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண நூலகம் சென்று அந்தப் பகுதி மக்களின் நிலை குறித்து விசாரித்தார். காணாமல் போனோர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையைச் சந்திப்பதற்காக நூலகத்தின் வெளியே காத்துக்கிடந்தனர். அவர்களை நவநீதம்பிள்ளையை சந்திக்க விடவில்லை. அப்போது மக்கள் கத்திக் கதறியது போர் ஓலம்போல இருந்தது.
ஆனால், யாழில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் புலிகளின் திருகோணமலை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தன் கணவர் காணாமல் போனது பற்றி அனந்தி குறிப்பிட்டுள்ளார்.
அங்கு வந்திருந்த நிமலரூபனின் (கடந்த வருடம் சிறையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி) தாயார் அழ, அவரைத் தழுவி ஆறுதல் கூறினார் நவநீதம்பிள்ளை.
இறுதிக்கட்டப் போர்ப் பகுதியான முள்ளிவாய்க்காலிலும் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் நவநீதம்பிள்ளையின் வருகையை ஒட்டி இராணுவத்தை அகற்றியிருந்தனர்.
நவநீதம்பிள்ளை வருவதாகப் பேச்சு எழுந்ததுமே நந்திக்கடலை ஒட்டியுள்ள பிரதேசத்தில் போரில் எரியூட்டப்பட்ட வாகன குவியல்களை அகற்றுவதற்கான வேலைகளை இராணுவம் தொடங்கி விட்டது.
சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆனையிறவு சோதனைச் சாவடியும் நவநீதம்பிள்ளை கடந்து சென்ற போது மட்டும் மூடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் சென்று ஆய்வு செய்த நவநீதம்பிள்ளையிடம் மக்கள், 'அபகரிக்கப்பட்ட நிலங்கள், போருக்குப் பிறகு உள்ள வாழ்வாதார பிரச்சினைகள், காணாமல் போன உறவுகள்’ தொடர்பாக அழுது நொந்துள்ளனர்.
அப்போது நவநீதம்பிள்ளை, 'நான் தூரதேசத்தில் இருந்து உங்களது பிரச்சினைகளை ஆராய்வதற்கே வந்துள்ளேன். காணாமல் போனவர்களின் பிரச்னைகளை நான் முன்னரே அறிவேன்.
அதேபோல் இங்குள்ள மற்ற பிரச்சினைகளையும் ஆராய்ந்து தீர்வைத் தேடித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களது பிரச்னைகளுக்காக எனக்குள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தித் தீர்வைத் தேடித் தருவேன்’ என்று கூறியுள்ளார்.
நவநீதம்பிள்ளை வன்னிப் பகுதிகளில் இருந்து திருகோணமலை சென்றதுமே முகாம்களுக்குள்ளே இருந்த இராணுவம் பழையபடியே வந்துவிட்டதாம்.
போரின் போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை சந்திக்க மறுத்து விட்டாராம் நவநீதம்பிள்ளை.
 மகிந்த ராஜபக்‌சவுடனான இவருடைய சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பு போல்தான் நடந்துள்ளது. ஏனெனில் நவநீதம்பிள்ளை, தான் ஆராய்ந்த பலவற்றை வெளிப்படையாக ராஜபக்‌சவிடம் விவாதிக்கவில்லை.
இலங்கையில் நடந்த கொடுமைகளின் பிரதிபலிப்புகள் ஐ.நா.வில் இந்த மாதம் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கும் அறிக்கையில் அறியக் கூடும் என்று கூறப்படுகிறது.
நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளத் தயார்’ என்ற அமைச்சர் மேர்வின் சில்வாவின் பேச்சை அறிந்து தன் கோபத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியுள்ளார் பிள்ளை. இந்தப் பேச்சுக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மன்னிப்பும் கோரியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் மக்களைச் சந்தித்த அன்றைய இரவு, அரசாங்க அதிகாரிகளுக்குக் காட்டிக் கொள்ளாமல் மணலாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் பகுதி மக்களை, சந்தித்துக் குறை கேட்டாராம்.
மணலாறு என்ற பகுதி திருகோணமலை, முல்லைத்தீவு, அனுராதபுரம் எல்லைகளை ஒட்டிய தமிழர் மாவட்டம். இதை 'வெலிஓயா’ என்ற சிங்கள மாவட்டமாக அறிவித்து அதற்கான சான்றுகளை அண்மையில் மகிந்த ராஜபக்ச வழங்கியது நினைவிருக்கலாம்.
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.

ad

ad