புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

எங்கள் ஊர்..!-(புங்குடுதீவு)

''சிறுத்திடல்" வளவெல்லாம் இந்நாளில்
சிறுவெள்ளம் பாயும் - வேலிப்
புற்றெங்கும் குடைபிடிக்கும் காளான்
பிடுங்குதற்கோ போட்டி சிறார்
'சோழனோடை" நிரம்பியே வழிந்து
சேரும் கடலுள் நன்றாய் - 'கேரதீவு"
தாழங்கடற்கரை ஈஞ்சுபுகுந்து வாடை
தம்பாட்டில் சில்லிட்டுச் செல்லும்..,

கற்றாளை கனத்தபுற்கள் ''கரந்தலி"
முற்றாத பற்றைக்காடு, இடையே
முதிர்ந்த மொட்டைப் பூவரசுகள்
வற்றாத நதிபோல வடிவத்தில்
''உப்புக்களி" வாய்க்கால் ஊர்மனை
வெள்ளத்தால் நிரம்பி ஓடிடுமழகாய்
''கள்ளியாறு" கரந்தலியில் நுரைதள்ளும்
கால்நடைகள் துள்ளிக் குதித்தோடும்..,

''இணுபிட்டியா" குளத்தில் எழுந்து
இறால் துள்ளும் ''பெரியகிராய்"
அணைவயல்கள் குடலை தள்ளும்
''அடைக்காத்தகுளம்" உடைத்துப் பாயும்
''இறுப்பிட்டி" போகும் இரவுபஸ் வெளிச்சம்
எங்கேயோ போய் எதிரொலிக்கும்
அறுத்துக் கொண்டோடும் மாடுகளால்
அழிவு பயிர்களுக்கென ஏசல்கேட்கும்..,

''மடத்துவெளி" வயற்காட்டில் வரிசையாய்
நடக்கும் களைபிடுங்கல், பாலத்தின்மேல்
ஓடும்நண்டு, ஓரா, முரல் துள்ளிக்குதிக்கும்
வாடியிருக்கும் கரையில் வெண்கொக்கு
''கல்லிக்காட்டில்" பொன்னாவரை பூச்சொரியும்
இல்லையெனாது முல்லையும் மல்லிகையும்
''கொல்"லெனச் சிரித்துக்கொட்டும் வளவுக்
கொட்டிலிலும் கூடையில் நெல்லிருக்கும்..,

விடியும்வரை திருவிழா ''பெருங்காட்டில்"
விண்ணிடிய வாணம், கோடையிடி
மேளக்கூட்டம் அத்தனையும் வாசிப்பு
மலரும் ''கிராஞ்சிமுருகன்" பூங்காவனம்
வீதியெலாம் ஆரவாரம் பந்தல்சோடனை
வீறிட்டோடும் மாட்டுவண்டிகள் நிரை
ஆதிப்பெருமையுடன் அழகான கோபுரம்
அற்புதமாம் ''கண்ணகையம்மன்" திருவிழா..,

''சோளகம்" எழுந்துவீசும் சொரிமணல்
தூரப்பறக்கும், திருவிழாக்கள் தொடரும்
''ஏழாற்றுப்பிரிவில்" அலையெழுந்து சுழலும்
ஏந்தியகையுடன் ''நயினையம்மனை" இரப்பர்
''மணிபல்லவம்" ''அமுதசுரபி" சனம்நிறையும்
அணியணியாய்ப் பலவிடத்து வண்டிகள்வரும்
துறைமுகங்களில் தாகசாந்தி அன்னதானம்
பறைசாற்றும் பொற்பூமி மைந்தர்வளம்..,

தென்னோலை தேங்காய், கருவாடு வந்திறங்கும்
தெரிந்து வாங்குவார்துறை ''குறிகாட்டுவான்"
''நாகேஸ்வரி" ''மணிமேகலை" 'அலையரசி"கண்டது
நாளும்மறவாது அழுது 'குமுதினி"வந்தது
எண்ணிப்பார்க்க அதிகமாகும் ஆலயங்கள்
ஏட்டுக்கல்விக்கும் குறைவில்லாப் பள்ளிகள்
வண்ணமயக்கோபுரங்கள் மதில்கள் மனைகள்
வாஞ்சையுடன் வரவேற்கும் பெருமனப்பரப்பு..,

''மகாவித்தியாலயம் கணேசன் சித்திவிநாயகன்
மகளிருக்குச் சுப்பிரமணியன், கமலாம்பிகை"
ஓகோவெனப் பதினான்கு பாடசாலைகள்
சாகாதகல்வியிங்கு சரித்திர காலந்தொட்டு
நாளும் கலை எழுத்து பத்திரிகை பக்தி
நன்னெறிமார்க்கம் ''சர்வோதயம்" எனவளரும்
நெய்தலும்மருதமும் நிறைந்தழகு சேர்க்கும்
நித்திலம்புகழ் பேறுடைப் பொற்பூமி..,

இத்தனையும்கொண்ட எங்கள் பூமியின்று
அத்தனையும் இழந்து அலங்கோலமாய்..
இருப்பதனைமாற்றி எழில் பெறவைக்கவென
எண்ணம் மிகவே இயக்கம்கொண்டிங்கு
வண்ணமாய்ப் பலவிழாவெடுத்துச் சிறப்பிக்கும்
சங்கத்தில்தான் உங்கள் உறவுவளரட்டும்
சளைக்காது உங்கள் பணிதொடரவே
சாற்றுவேன் யானும் புகழ்க்கவிதான்..!

- வி. ரி. இளங்கோவன்

ad

ad