புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

அரசுடமையாக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்!- சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் வாதத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ்நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் காணி  உரிமையாளர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்து   மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
யாழ் நாவலர் வீதி 267 1/1 இலக்க 37 பேர்ச் காணியின் உரிமையாளர்களான மனுதாரர்கள் குலசேகரம் விக்னேஸ்வரன், அவரது மனைவி மதிமலர் விக்னேஸ்வரன் அவரது மைத்துனி கௌரி திருமால் ஆகியோர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு உதவிச் செயலாளர், பயங்கரவாதத் தடைப்பிரிவு பணிப்பாளர், அசோசியேடட் நியுஸ் பேப்பர் நிறுவனம், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினால் 2009ம் ஆண்டு வர்த்தமானி 1583/12 ஆம் ஒழுங்கு விதியின் கீழ் 2012ஆம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ் நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் யாழ் நாவலர் வீதி 267 1/1 இலக்க 37 பேர்ச் காணியையும் மாடிவீட்டையும் விற்பதற்கோ அல்லது கை மாற்றுவதற்கோ பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சுக் சந்திரா ஏகநாயக ரோகினி மாரசிங்க் ஆகியோர் இந்தத் தடையாணை உத்தரவை வழங்கினர்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாவது,
அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆதனம் 2006ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில் 2010ம் ஆண்டு சுரபி பதிப்பகத்தை நடாத்திய பிரதான குடியிருப்பாளரான பொன்னுத்துரை குருதேவ் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பயங்கரவாதத் தடைப் பிரிவினர் இந்த வீட்டை அரசினால் நடாத்தப்படவிருக்கும் தமிழ் பத்திரிகைக் காரியாலயத்திற்கு வாடகைக்கு தரும்படி முதலாம் மனுதாரரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மனுதாரர்கள் நிராகரித்த நிலையில், பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொன்னுத்துரை குருதேவ் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த சான்றுகளும் இன்மையால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மனுதாரர்களான வீட்டு உரிமையாளர்களுக்கு எந்தவித அறிவித்தலும் இன்றி தமது தேவைப்பாட்டிற்காக பயங்கரவாதத் தடைப்பிரிவினர், பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2009ம் ஆண்டு வர்த்தமானி 1583/12 ஆம் ஒழுங்கு விதியின் கீழ் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ் நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தினர்.
இதனை அறிந்த மனுதாரர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்தே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.சி வலியமுன மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி தனது வாதத்தில் 2009ம் ஆண்டு வர்த்தமானி 1583/12 ம் ஒழுங்கு விதியின் பிரகாரம் அசையும் சொத்துக்களை மட்டுமே அரச உடமையாக்கலாம், அசையா சொத்துக்கள் அரச உடமையாக்க சட்டத்தில் இடமில்லை என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் பிரதிவாதிகளால் சட்டரீதியற்ற முறையில் இந்த ஆதனம் கையகப்படுத்தியிருப்பதாக தனது வாதத்தை முன் வைத்தார்.
இந்த வாதத்தை கவனத்தில் கொண்ட நீதியரசர்கள் குழாம் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுடன் வழக்கின் இறுதித் தீர்ப்பு வரை காணியையும் வீட்டையும் பிரதிவாதிகள் விற்பனை செய்வதையோ அல்லது கைமாற்றம் செய்வதையோ தடை விதித்து உத்தரவிட்டதுடன் வழக்கின் விசாரணையை ஆனி மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

ad

ad