புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

இசைப்பிரியா கொலையால் தமிழகம் கொந்தளிப்பு!- கி.வீரமணி அறிக்கை
இலங்கை இராணுவத்தால் நடைபெற்றுள்ள இசைப்பிரியா கொலை பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழக மண்ணில் ஏற்படுத்தியுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் இவ்வாரத்தில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது, காரணம் இலங்கை ராஜபக்ச அரசு போர்க் குற்றவாளி என்று ஐ.நா அமைத்த குழு அறிக்கையே தந்து, அந்த ஆட்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளிடையே பரவலாக உள்ளது.
அதோடு மட்டுமல்ல, மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஐ.நா மனித உரிமை ஆணையம் அதன் தலைவர் நவநீதம்பிள்ளை தலைமையில் விசாரணைக்கு அனுப்பப்பட்டு அறிக்கை தரும் நிலை உள்ளது. அவரை ராஜபக்ச ஆட்சியினர் எவ்வளவு கொச்சைப்படுத்தி மிகவும் கேவலமாக நடத்த முடியுமோ அவ்வளவு மோசமாக நடந்து கொண்டதும் உலகறிந்த உண்மைகளாகும்.
தமிழ்நாட்டில் ‘டெசோ’ உட்பட, பிரதமரோ, இந்திய அரசோ இலங்கையில் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் அதிபர்கள் மாநாட்டிற்குச் சென்று கலந்து கொள்ளக் கூடாது என்று ஒரே குரலாக, பலரும் பல கட்சிகள், வழக்குரைஞர்கள், விவசாயிகள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினரும் பல்வகைப் போராட்டங்களையும் நடத்திய வண்ணமே உள்ளனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டின் குரல், கோரிக்கை மத்திய அரசை நோக்கி இதுதான் என்று உணர்த்தும் வண்ணம் முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியும் இத்தீர்மானத்தை ஆதரித்தது, இவைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்று தீருவது என்று பிரதமர் முடிவு செய்தால் தமிழர்களின், உணர்வுகளைப் புண்படுத்துவதும், புறக்கணிப்பதுமான விரும்பத் தகாத செயலாகி, வரலாற்றில் ஆட்சிக்கு என்றென்றும் நீங்காக் கறையாக ஆகிவிடும் என்பதை பிரதமர் உணர்ந்து முடிவு எடுக்கவேண்டும்.
அங்கு தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஆளும் ராஜபக்ச கூட்டணியைத் தோற்கடித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. விக்னேஸ்வரன் முதலமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். அது இப்போது பொம்மை அரசுதான்.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாமல் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதன் மூலம்தான், இலங்கை போர்க் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர் சம்பந்தன் தெளிவாகக் கூறி, தமிழ்நாட்டு ஊடகங்களுக்குப் பேட்டியே கொடுத்துள்ளார்.
இதில் விக்னேஸ்வரன் மட்டும் இந்தியா கலந்து கொள்ள வேண்டும், பிரதமர், இலங்கை மாநாட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார் என்று ஏடுகளில் வந்த செய்தி அவரால் நேற்று மறுக்கப்பட்டுள்ளது. அப்படி மாநாட்டிற்குப் பிரதமர் வரும் பட்சத்தில் அவர் யாழ்ப்பாணம் வந்து பார்க்க வேண்டும் என்றுதான் நான் எழுதினேனே தவிர, அவர் அவசியம் வர வேண்டும் என்று கூறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, வடக்கு மாகாண தேர்தல் ஒழுங்காகக் கூட நடைபெற முடியாமல் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு, ஜனநாயக நடைமுறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. இப்பகுதியில் பத்திரிகையாளர்களும் பாதுகாப்பாக, செய்தி சேகரிக்க முடியாத நிலை காணப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது. எனவே, இலங்கையில் தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்படல் வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கனடா நாடு கொமன்வெல்த் அமைப்பில் மிகவும் பங்கு பெற்றுள்ள, இங்கிலாந்துக்கு அடுத்தபடி உள்ள முக்கிய நாடு. அதன் பிரதமரே இலங்கையில் மனித உரிமை மீறல், இனப் படுகொலையை ஏற்காமல் மனிதநேயத்துடன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். நமது இந்திய அரசின் பிரதமருக்கு அவரை விட அதிக பொறுப்பும், தமிழர்கள் தொப்புள் கொடி உறவும் உள்ளவர்கள் ஆயிற்றே!
தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்கெடுப்பால்தான் இந்த அரசே வந்துள்ளது. மதவாதம் பல்வேறு மாயாஜாலங்களைக் காட்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் நிலையில், காங்கிரஸ் இப்படி, அதன் முக்கிய தலைவரின் மத்திய அமைச்சர்கள் பலர், கருத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு முடிவு எடுத்தால், பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அது பெரும் தற்கொலை முயற்சி போல் ஆகி விடாதா என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
பிரிட்டன் சனல்-4 மூலம் ‘இசைப்பிரியா’ பற்றிய இலங்கை அரசின் சகிக்கவே முடியாத மனித உரிமை மீறல் இனப்படுகொலை எப்படிப்பட்டது, எப்படி இதை மூடி மறைத்து போரில் கொல்லப்பட்டது போல் ஜோடனை செய்த புரட்டு இப்போது காட்சிகள் மூலம் அம்பலமாகி விட்டனவே.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் என்ற இளந்தளிர் சுட்டுக் கொல்லப்பட்ட படம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலார் இசைப்பிரியா கொலை (பிரபாகரனின் மகள் என்ற தப்புக் கணக்கோடு) இராணுவத்தால் நடைபெற்றுள்ள ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழ் மண்ணில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன், இந்திய அரசோ பிரதமரோ கலந்து கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்,  வரவேற்கிறோம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்போ கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. வெங்கையா நாயுடு இரண்டுக்கும் மத்தியில் குழப்பத்துடன் பேசியுள்ளார்.
13வது சட்டத் திருத்தத்தையோ, தமிழர்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதையோ கொமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்றுதான் நமது பிரதமர் ராஜபக்சவிடம் வற்புறுத்த வேண்டும் என்பதல்ல, எந்த நிலையிலும் பேசலாம், வற்புறுத்தலாம்.மேலும் பல்லாயிரங் கோடி ரூபாய்களையும், ஆயுதங்களையும் கொடுத்துதவிய இந்திய அரசுக்கு இப்படி வற்புறுத்திட உரிமையும், அதிகாரமும் உண்டே!
எனவே அங்கே கலந்து கொள்வதற்கு இப்படி ஒரு நொண்டிச் சாக்கு, போலிக் காரணம் தேவை இல்லை. நமது நாட்டுப் புறக்கணிப்பு என்பது இலங்கைக்கு மட்டும் எச்சரிக்கை ஆகாது. உலக நாடுகளுக்கும் இந்தியா, இலங்கையைப் பற்றி ஒரு வெளிச்சத்தைக் காட்ட அது உதவிடும்.
இவற்றையெல்லாம் மீறி நமது பிரதமர் கலந்து கொள்ள முடிவு எடுத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் நமது எதிர்ப்பை அறவழியில் காட்டியாக வேண்டும். அவரவர் இல்லங்களில், இடங்களில் கறுப்புக் கொடிகளை அந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையுள்ள மூன்று நாள்களில்  பறக்க விட்டு நமது துயரத்தை, எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இது ஒரு கட்சியின் வேண்டுகோள் அல்ல, ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்ச்சிக்கான அறிவிப்பாகும். தமிழ் மானம் காப்போம் என்று கூறியுள்ளார்.

ad

ad