புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

23 ஆவது பொதுநலவாய உச்சி மாநாடு கோலாகல ஆரம்பம்

கலாசார பாரம்பரியங்களுடன் தலைவர்கள் வரவேற்பு
பொதுநலவாய அரச தலைவர்களின் 23வது உச்சி மாநாடு நேற்று கோலா கலமாக கொழும்பில் ஆரம்பமானது. உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கிலும் அரச தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும்
இடம்பெற்றன.
பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற தாமரைத் தடாக முன்றலில் இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடையில் ஆலவட்டங்களுடனும் சின்னஞ் சிறார்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தி அசைத்தவண்ணம் வரவேற்றனர்.
காலை 8.30 தொடக்கம் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகை இடம்பெற்றது. வாகன தொடரணியுடன் காலை 9.15 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சகிதம் வந்திறங்கினார். அவரை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தின் வருகை இடம்பெற்றது.
தனது பாரியார் சகிதம் வந்திறங்கிய கமலேஷ் சர்மாவை ஜனாதிபதியும் அவரது பாரியாரும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து காலை 9.20 தொடக்கம் 10.14 வரை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், புருனை சுல்தான், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹkனா உட்பட அரச தலைவர்களின் வருகை இடம்பெற்றது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் என்ற வகையில் கமலேஷ் சர்மாவும் தனது பாரியார் சகிதம் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலிலிருந்த வண்ணம் அரச தலைவர்களை வரவேற்றனர்.
அரச தலைவர்களின் வருகை நிறைவடைந்ததை அடுத்து பொதுநலவாய அமைப்பின் தலைவியான இரண்டாவது எலிசபெத் மகாராணியை பிரதிநிதித்து வப்படுத்தி உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்க வந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவியான கோன்வெல் சீமாட்டியின் வருகை இடம்பெற்றது.
வாகன தொடரணியுடன் விசேட வாகனத்தில் வந்திறங்கிய இளவரசர் சார்ள்ஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கமலேஷ் சர்மா, அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபட் ஆகியோர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். ஜனாதிபதி, இளவரசர் சார்ள்ஸை கைகூப்பி வரவேற்றதுடன் இளவரசரும் கைகூப்பி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் காலை 10.25க்கு அரச தலைவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறும் தாமரைத் தடாக மண்டபத்தின் பிரதான மேடைக்கு ஒருவர் பின் ஒருவராக அழைத்து வரப்பட்டனர். ஆரம்ப கட்டமாக சில நாடுகளின் அரச தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த வெளிநாட்டு அமைச்சர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு நாட்டு அரச தலைவர்களும் தமக்குரிய ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
காலை 10.39 கமலேஷ் ஷர்மாவும், அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் டொனி எபட்டும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ¤ம் பிரதான மேடையில் வந்து அமர்ந்தனர். காலை 10.40 க்கு தேசிய கீதத்துடன் உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண பிரதான நிகழ்வு ஆரம்பமானது. அதன் பின்னர் இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘ஆயுபோவன்’ (வணக்கம்) என்ற தொனியை பிரதிபலிக்கும் வகையில் வரவேற்று நடனமும் பாடலும் இடம்பெற்றது.
இம்முறை பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் தலைமை பொறுப்பை வசிப்பவர் என்ற வவகையில் முதலாவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை காலை 10.46 க்கு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவின் உரையும், இறுதியாக தலைமை பொறுப்பை வகித்த அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபட்டின் உரையும் இடம்பெற்றது.
இறுதியாக இரண்டாவது எலிசபெத் மகாராணியின் பிரதிநிதியாக வருகைதந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்ஸ்ஸின் உரை இடம்பெற்றது.மகாராணியின் சார்பாக இந்த அரச தலைவர்கள் உச்சி மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதாக இளவரசர் இதன்போது அறிவித்தார். இதனிடையே இலங்கை மற்றும் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடல்களும் கலை நிகழ்ச்சிகளும் இடைக்கிடையே அரங்கேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக வாத்திய இசைகளுக்கு மத்தியில் வாகன தொடரணியாக அரச தலைவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் அரச தலைவர்கள் கலந்துகொண்ட நிறைவேற்றுக் குழு கூட்டம் இடம்பெற்றது. இந்த வைபவத்திற்கு புதிய தலைமை பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தமை விசேடஅம்சமாகும்.

ad

ad