புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

 வடக்கு மாகாண வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும்; சபை நடவடிக்கைகளும்
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் இன்று முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய அமர்வில் முதலமைச்சரால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சுக்கள் தவிர்ந்த முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய முதலமைச்சர் அலுவலகம், உள்ளூராட்சி, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில், சமூக நலத்துறை மற்றும் காணி அமைச்சு என்பனவற்றுக்கான குழுநிலை விவாதங்களும் நடைபெற்று வாக்கெடுப்பு இன்றி இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 34 உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும் அமைச்சுக்களுக்கான வரவு - செலவுத் திட்ட    குழுநிலை விவாதங்கள் நாளை நடைபெறுமென அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அதன்படி இன்று மாலை 4.30 மணியளவில் சபை இன்றைய சபை அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பிரேரணைகள் முன்வைப்பும்; நிறைவேற்றமும் 


சிவில் சமூகத்தை சார்ந்த பண்பும் அறிவும் உடைய ஒருவரே எதிர்வரும் காலங்களில் வட மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 15 பிரேரணைகள் வடமாகாண சபையில் இன்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 3ஆவது அமர்வு அவைத்தலைவர் க.சிவஞானம்  தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. 

இதன்போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணைகள் எதுவித எதிர்ப்புக்களும் இன்றி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணைகளாவன

1.    சிவில் சமூகத்தை சார்ந்தவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்.

2.    வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி சிவில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.

3.     கரவெட்டி பிரதேச சபையின் ஒரு பிரிவை நெல்லியடி நகர சபையாக மாற்றப்பட வேண்டும்.

4.    வடமாகாணத்திலுள்ள விவசாய நிலங்களில் இராணுவம் குடியிருப்பதையும் விவசாயம் செய்வதனையும் தடுத்து அந்நிலங்களை உரிய மக்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட வேண்டும்.

5.     வடமாகாணத்தில் மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதுடன் கிரவல் காட்டு மரங்கள் பாதுகாப்பதுடன் அது தொடர்பான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெறப்;படும் வருமானங்கள் வடமாகாண சபையின் வருமானங்களாக உள்வாங்கப்பட வேண்டும்.

6.    வடமாகாண சபையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்,

7.    வடமாகாணத்திலுள்ள வீட்டுத்திட்டங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
 
8.    வடமாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் நிரந்த நியமனம் வழங்கப்பட வேண்டும். 

9.    தற்போது நடைமுறையிலுள்ள வீடடுத்திட்டங்கக்கு இலகுவான முறையில் மணல் கிடைப்பதற்கு வழி செய்யப்பட வேண்டும்.
  

10.    இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு உள்ளிட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனடியாக வழங்க வழிசெய்யப்பட வேண்டும் 

11.    வடமாகாணத்திலுள்ள அரச காணிகளை காணிகளற்ற அப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

12.    வடமாகாண சபையில் காணி விடயம் சம்பந்தமாக சரியான முடிவு எட்டும் வரை தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

13.    வடமாகாண சபைக்கான மாகாண திட்டமிடல் குழுவை உரிய முறையில் அமைத்து அதன் மூலம் மாகாண சபையின் அபிவிருத்தியை மேம்படுத்த வேண்டும்.

14.    வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் புனரமைக்கப்படவும் வேண்டும்.

15.     மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடமாடும் சேவைகளை பின் தங்கிய மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

 ஆகிய 15 பிரேரணைகளும் எதுவித எதிர்ப்பும் இன்றி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

சபையில் கூட்டமைப்பினர் கவனயீர்ப்புப் போராட்டம்.

10 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் தலைமையில் சபையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடாத்தப்பட்டது. 

மனித உரிமை தினமான இன்று குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை வழங்க வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

இதன்போது தமழ் இனப்படுகொலை மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை தேவை ,இராணுவத்தில் சரணடைந்த போராளிகள்  எங்கே, வலி.வடக்கில் கோவில்கள் பாடசாலைகளை இடித்தழிப்பதை உடனடியாக நிறுத்து, காணாமல் போனோர் எங்கே,காணி சுவீகரிப்பதை நிறுத்து, இராணுவ குடியிருப்புக்கள் நிறுவுவதை நிறுத்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, வலி.வடக்கிற்கு சென்ற முதலமைச்சரை திருப்பி அனுப்பியதை கண்டிக்கின்றோம், இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டு, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு என்ற சுலோகங்களையும் சபையில் ஏந்தி கூட்டமைப்பினர் போராட்டத்தை மேற்கொண்டனர்.

எனினும் எதிர்க்கட்சியினர் ஆதரவோ எதிர்ப்போ இன்றி இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 

நெல்சன் மண்டேலாவிற்கு சபையில் அகவணக்கம்


தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை,  நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபையிலும் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

 அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றும் நாளையும் அரசாங்கம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மாகாண உடையில் வந்தார் அவைத்தலைவர்.

வட மாகாண சபையின் அவைத்தலைவருக்கு என  உருவாக்கப்பட்ட ஆடையுடன் கந்தையா சிவஞானம், சபை அமர்வுகளை தலைமை தாங்கி நடத்தினார்.

குறித்த ஆடையில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துப்படுத்தும் பனைமரம் மற்றும் யாழ் இசைக்கருவியின் படங்கள் என்பனவும் பொறிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஆடையை தயாரித்தவர்களுக்கு அவைத்தலைவர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இனிவரும் அமர்வுகள் இவ்வாறே இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த அமர்வுகளில் செங்கோல்

வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அவைத் தலைவர், 'வட மாகாண சபைக்கான செங்கோல் அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் அமர்வில் செங்கோலுடன் வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செங்கோல் அமைப்பதற்கான குழுவின் தலைவராக கந்தையா சிவஞானம், ஆலோசகர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோரும் 

வடிவமைப்பு உதவியாளர்களாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான பொ.கிருஷ்ணன், செல்வி. ஸ்ரீதேவி, ச.சதானந்தன், ம.மனோகரன் ஆகியோரும் மேற்பார்வையாளராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். 

அங்கஜனுக்கு மேலும் ஒரு மாதம் விடுமுறைக்கு அனுமதி 

வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு  மேலும் ஒரு மாத கால விடுமுறைக்கு சபை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்குமாறு வட மாகாண சபையிடம் மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளதாக தவிசாளர் சபையில் இன்று தெரிவித்தார்.

அதன்படி இதற்கு சபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமையினால் அவருக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்க சபை அனுமதியளித்தது. 

எனினும் சபை ஆரம்பிக்கப்பட்டு இதுவரை அவர் விடுமுறையிலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொடுப்பனவுகளுக்கும் அனுமதி 

வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்கின்ற உறுப்பினர்களுக்கான ஒரு அமர்விற்குரிய கொடுப்பனவாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து வரும் உறுப்பினர்களுக்கு 7,000 ரூபாவும் 

கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களுக்கு 3,000 ரூபாவும் யாழ்.மாவட்ட உறுப்பினர்களுக்கு 1000 ரூபாவும் வழங்கப்படும்.

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவாக வடமாகாண சபையினால் மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.

வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சர்களுடனும் இரண்டு முகாமைத்துவ உதவியாளரும் ஒரு அபிவிருத்தி பணியாளரும் இணைந்து பணியாற்றுவார்கள். 

வடமாகாண ஆளுநரின் அனுமதியுடன் வடமாகாண ஆசிரியர்களுக்கு மேலதிக உதவி தொகையாக மாதாந்தம் 4000 ரூபா வழங்கப்படவுள்ளது  என்றார்.

மேலும் சபை அமர்வின் போது முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள்  பலர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=148752502011538255#sthash.duKrDG64.dpuf

ad

ad