புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013



            நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் எல்லாம் ஒரு ஸ்வீட் பாக்சோடுதான் நுழைகிறார்கள். ஸ்வீட் சாப்பிட்டு... சாப்பிட்டு சுகர் அதிகமாகிவிட்டது என சில தலைவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அங்கே உற்சாகம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கிடையே கடமையே கண்ணாக தமிழகம் முழுவதும் கட்சி நடத்தும் பாத யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்தோம்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?



பொன்.ராதாகிருஷ்ணன்: மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவர். ம.பி.யில் பா.ஜ.க. தான் வெற்றிபெறும் என தேர்தல் கணிப்புகள் வெளிவந்தபோது அந்த கணிப்புகளையெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கள் காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் திக்விஜயசிங்கையும் அவருடன் சேர்த்து காங் கிரசையும் குப்பைக் கூடையில் தூக்கி போட்டுவிட்டது.

ராஜஸ்தானில் அந்த மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு அறுதி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கைக் கூட காங்கிரசால் பெற முடியாத அளவிற்கு மரண அடியை காங்கிரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பரிசளித்திருக்கிறார்கள்.

சத்தீஸ்கரிலும் டெல்லியிலும் பா.ஜ.க. போராடி ஜெயித்திருக்கிறது. அதுவும் டெல்லியில் கெட்டவனுக்கு எட்டுல சனி என சொல்வார்கள். அதைப் போல வெறும் 8 சீட்டுகளுடன் இரட்டை இலக்க எண்களை தொட முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு முழு முதற் காரணம் நாடெங்கும் வீசிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் அலைதான். 



இந்த அலை மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த சத்தீஸ்கர், இந்திய தலைநகரான டெல்லி போன்ற மாநிலங்களில் பெரிதாக வீச வில்லையே?


பொன்.ராதாகிருஷ்ணன்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஒரு விளையாட்டை விளையாடியது. இந்திரா கொலை, ராஜீவ் கொலை போன்ற படு கொலை சம்பவங்களை வைத்து தேர்தலில் முன்பு எப்படி வெற்றி பெற்றதோ, அதுபோல மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப் பட்டதை வைத்து அனுதாப ஓட்டை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற முயற்சித்தது. அந்த படுகொலைகள் நடக்கவில்லையென்றால் சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்றதை போல மூன்றில் இரண்டு பங்கு சீட்களுடன் வெற்றி பெற்றிருக்கும். டெல்லியில் நரேந்திர மோடி காங்கிரசுக்கு எதிரான அலையை உருவாக்கினார். அந்த அலையின் வீச்சில் காங்கிரஸ் வீழ்ந்தது. சிங்கம் வீழ்த்திய இரையை மற்ற விலங்குகளும் பங்கு போட்டுக் கொள்ளும். அதுபோல பா.ஜ.க. வீழ்த்திய காங்கிரசின் ஓட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியும் பெற்றது. ஒட்டுமொத்தமாக நான்கு மாநிலத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றியின் பெருமை மோடி யையே சாரும்.

ம.பி.யில் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ் தானில் வசுந்தராராஜே, சத்தீஸ்கரில் ராமன்சிங் போன்ற பலமான மாநில தலைவர்களின் கடுமையான உழைப்பில்லாமல் வெறுமனே மோடி மட்டும் பிரச்சாரம் செய்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா?


பொன்.ராதாகிருஷ்ணன்: பா.ஜ.க. என்பது ஒரு பெரிய ஆலமரம். அதன் விழுதுகள்தான் பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள். அந்த மாநில தலைவர்கள் மட்டுமல்ல கட்சியின் சாதாரண தொண்டர்கள் என அனைவருமே ஒற்றுமை யாக பாடுபட்டதால்தான் இந்த வெற்றி சாத் தியமாகியிருக்கிறது. ஆலமரத்தின் விழுது களும் வேர்களும் இணைந்து ஒரு பெரிய மர மாகி நிழல் தருகிறது. அந்த நிழலின் அருமை தான் நரேந்திர மோடியின் பிரச்சாரம்.

2009, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதே மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகத்தானே வந்தது?


பொன்.ராதாகிருஷ்ணன்: முடிவுகள் வருவதற்கு முன்பு நான்கு மாநில சட்டமன்றங்களோடு ஐந்தாவதாக மிசோரம் மாநிலத்தையும் சேர்த்து நாங்கள் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் சொன்னது. தற்பொழுது நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ஜெயிப்போம் என சொல்கிறார்கள். 2009-ல் இரண்டு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்ற பா.ஜ.க. தற்பொழுது நான்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும்.

நான்கு மாநில தேர்தல் வெற்றி தமிழக அரசியலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?


பொன்.ராதாகிருஷ்ணன்: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியிருக் கின்றன. அந்த கட்சியுடன் எவ்வளவு பலம் பொருந்திய கட்சி கூட்டு சேர்ந்தாலும் அந்த கட்சி யும் சேர்ந்து மூழ்கிவிடும் என்பதை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு தமிழக கட்சிகளுக்கு கிடைத்திருக் கிறது.

பலம் பொருந்திய கட்சி என தி.மு.க.வை சொல்கிறீர்களா? அல்லது அ.தி.மு.க.வை குறிப்பிடுகிறீர்களா?

பொன்.ராதாகிருஷ்ணன்: நரேந்திர மோடி அலை இன்று தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்களின் மனதைக் கூட மாற்றியிருக்கிறது. பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி என்பதை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதீத நம்பிக்கையுடன்தான் பேசுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ad

ad