புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளத
கொழும்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் பிச்சைக்காரர்களை கைதுசெய்து வருகின்ற சூழ்நிலையில், பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காக அரசிடம் திட்டம் ஏதும் இல்லையா என்று தமிழோசை வினவிய போதே சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் இதுபற்றி தெரிவித்தார்.
சமூக சேவைகள் அமைச்சின் உதவித்திட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகள் இல்லை. உடல் அங்கவீனமானவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் தனித்து விடப்பட்ட பெற்றோருக்கு மட்டுமே உதவக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்றன.
இந்த சூழ்நிலையில், வறுமையால் வாடி, நிராதரவான நிலையில் தெருவுக்கு பிச்சைக்காரர்களாக வருவோருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அரசின் கடமையல்லவா என்று தமிழோசை சமூக சேவைகள் அமைச்சிடம் சுட்டிக்காட்டியது.
இதற்குப் பதிலளித்த இமெல்டா சுகுமார், எதிர்காலத்தில் பிச்சைக்காரர்களுக்கும் உதவக்கூடிய விதத்தில் தமது திட்டங்களை வகுக்க அமைச்சரவை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்'?
பிச்சைக்காரர்கள் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகக் கூறியே, கொழும்பின் முக்கிய இடங்களில் அவர்களைக் கைதுசெய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி. அஜித் ரோஹண தமிழோசையிடம் கூறினார்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் குறைந்தது 60 பிச்சைக்காரர்கள் கைதானார்கள். தொடர்ந்தும் பிச்சைக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிச்சைக்காரர்கள் கைதுசெய்யப்படும் விவகாரம் நாட்டின் சமூக ஆர்வலர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களும் செல்வந்தர்களும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யவில்லை என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறினார்.
கொழும்பு நகரை அழகுபடுத்தும் அரசாங்க நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு கட்டமாகவே, பிச்சைக்காரர்கள் கொழும்பில் கைதுசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிச்சைக்காரர்களின் அதிகரிப்பு நாட்டில் வறுமை அதிகரிப்பதையே காட்டுகிறது என்றும் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் பிச்சைக்காரர்கள் மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்- பிபிசி

ad

ad