புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்கக் கோரி, 12.02.2009 அன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைமை அலுவலகம் முன்பு தமிழீழத் தமிழர் முருகதாசன் அவர்கள், தன்னுடலை தீயிட்டுக் கொண்டு வீரமரணமடைந்தார்.
அவரது நினைவு நாளான இன்று 12.02.2014, தமிழீழ இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதோடு மட்டுமின்றி அதை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்ட ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த, மே பதினேழு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகளின் பங்களிப்போடு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற அம்முற்றுகைப் போராட்டத்திற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார்.
ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க அமைப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும், திரளான தமிழுணர்வாளர்களும், மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், த.தே.பொ.க சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தோழர் பிச்சைமுத்து, தாம்பரம் தமிழக இளைஞர் முன்னனிச் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் நல்லன்.கோ, இரமேசு உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் முற்றுகையில் ஈடுபட்டு, ஐ.நா. கொடியை எரித்து கைதாகியுள்ளனர்.
தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய முதன்மைக் கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
முற்றுகையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், தற்போது அவர்களை திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளது.

ad

ad