புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

சிறிலங்கா அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவித் தமிழ்ப் பெண்கள்-Associated Press in Colombo - theguardian.com 

தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெண் உறவினர்கள் எவ்வித குற்றமும் இழைக்கப்படாத நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக சிறிலங்காவில் செயற்படும் பெண்கள் மனித உரிமை அமைப்பொன்று உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்படும் அப்பாவிப் பெண்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஆறு பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களது துணைவர்கள் அல்லது இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டே சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு விபரித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள பெண்கள் தற்போது மனிதாபிமானமின்றி சிறிலங்காவின் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சிலர் வயது முதிர்ந்தவர்களாகவும் மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நிலையிலுள்ள போதிலும் இவர்கள் தொடர்ந்தும் எவ்வித வசதிகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் புலிகள் மீளவும் ஒன்றுசேர முயற்சிப்பதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளைத் தாம் எடுத்துள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கத்தின் இக்குற்றச்சாட்டைத் தமிழ் அரசியல்வாதிகள் மறுத்துள்ளதுடன், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக உயர் இராணுவப் பிரசன்னத்தைத் தொடர்ந்தும் பேணுவதாகவும் இதனை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என்கின்ற முறைப்பாட்டைத் தான் விசாரணை செய்யவுள்ளதாகவும் காவற்துறைப் பேச்சாளர் அஜித் றோகன சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் புலிகளின் புதிய தலைவர் எனக் கூறப்படும் 'கோபி' என்பவரைக் கைதுசெய்யும் நோக்குடன் சிறிலங்கா காவற்துறையும் சிறிலங்கா இராணுவத்தினரும் தமிழ் மக்கள் வாழிடங்களில் போர்க் காலங்களில் மேற்கொண்டதைப் போன்று தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோபியுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஐந்து தமிழ்ப் பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெண்கள் வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி எனக் கூறி 26 வயதான கர்ப்பிணியாக இருந்த சர்மிளா கஜீபன் என்பவரை சிறிலங்கா அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஆனால் தான் கோபியின் மனைவியில்லை என இந்தப் பெண் தெரிவித்துள்ளார். தற்போது தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கான மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவருக்கு கருச்சிதைவு இடம்பெற்ற அன்றைய இரவு இந்தப் பெண் 60 மைல்கள் தொலைவிலுள்ள தடுப்பு நிலையம் ஒன்றுக்கு தொடருந்து மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் பெண்கள் வலையமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 63 வயதான இவரது மாமியாரையும் இவருக்கு உதவியாக இருந்த வயதுமுதிர்ந்த பெண் ஒருவரையும் சிறிலங்கா காவற்துறையினர் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது காணாமற் போன உறவுகளுக்காகக் குரல்கொடுக்கும்
பாலேந்திரன் ஜெயக்குமாரி சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இவரது வீட்டில் கோபிக்கு புகலிடம் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஜெயக்குமாரியின் 13 வயது மகளும் இவருடன் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயக்குமாரியின் கைதானது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் குரல்களை நசுக்குவதற்கான முயற்சியாகும் என மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜெயக்குமாரியின் 15 வயது மகன் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று அரசாங்கத்தின் புத்தகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் இவர் தொடர்பாகத் தமக்கு எவ்வித தகவலும் தெரியாது என சிறிலங்கா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பிறிதொரு பெண்ணொருவர் கோபியின் காதலி எனக் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடொன்றில் பணிபுரியும் மகன் ஒருவரின் 61 வயதான தாயார் சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்கள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மகன் இவரது செலவுக்காக ஒழுங்குமுறையாக பணம் அனுப்பி வருகின்ற போதிலும், புலம்பெயர் சமூகத்தால் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக பணம் அனுப்பப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

"இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களை சிறிலங்கா அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடாத்தவில்லை. கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணொருவர் எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி அன்றிரவே நீண்ட தூரம் தொடருந்தில் பயணிக்க வைக்கப்பட்டுள்ளார். இது உண்மையில் மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்" என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"போருக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளிலும் மகளிர் தினங்களிலும் தனது நாட்டில் வாழும் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக அரசாங்கம் புகழுரைத்து வருகிறது. ஆனால் இவ்வாறு பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களை வைத்துப் பார்க்கும் போது சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரையை ஏற்றுக்கொள்ள முடியாது" என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தி வழிமூலம் : Associated Press in Colombo - theguardian.com 

ad

ad