புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

கலைஞர் என் மீது மான நட்ட வழக்குதொடுக்கத் தயாரா? : வைகோ கேள்வி 
 தேனி நாடாளுமன்றத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர்,  ‘’சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை வைகோ ஏன் வலியுறுத்தவில்லை?
கைவிட்டு விட்டார் என்று, கருணாநிதியின் வாரிசு என்மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்.


அவருக்குச் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைப் பற்றித் தலையும் தெரியாது; வாலும் புரியாது. முதல் அமைச்சர் எழுதி வைத்ததைப் பார்த்துப் படிக்கிறார் என்று கேலி பேசுகிற இவருக்கு இரண்டு வரிகளைத் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை; தாளைப் பார்த்துத்தான் படிக்கிறார்.
1998 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மறுமலர்ச்சிப் பேரணி, சென்னைக் கடற்கரைக்குப் பொதுக்கூட்டத்திற்கு, பிரதமர் வாஜ்பாய் அவர்களை அழைத்து வந்து, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவிக்கச் செய்தவன் வைகோ.
ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இப்போது இவர்கள் வகுத்து இருக்கின்ற கால்வாய்த்  தடத்தில் 40 டன் எடை கொண்ட பெரிய கப்பல்கள் போக முடியாது. சிறிய கப்பல்கள்கள் மட்டும்தான் போக முடியும். அதனால் தூத்துக்குடித் துறைமுகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. பெரிதாக வளர்ச்சி பெற்று விட முடியாது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டம். எழுபதுகளின் தொடக்கத்தில், தி.மு.க.வின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பிரதமர் இந்திரா சிறுபான்மை அரசை  நடத்திக்கொண்டு இருந்த காலத்தில், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒருபோதும் வலியுறுத்தவில்லை.
அதற்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபோதும், மத்திய அரசுக்கு எந்தக் கோரிக் கையும் விடுக்கவில்லை. பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்று நான் குற்றம் சாட்டினேன். அவ்வாறு மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்ததாக அவர் ஆதாரத்தைக் காட்டினால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று அறைகூவல் விடுத்தேன். தொடர்ந்து பல கூட்டங்களில் இதைப் பேசினேன்.
2006-2011 காலகட்டத்தில், திரும்பவும்  முதல்வராக வந்த கருணாநிதி, திடீரென ஒருநாள் ஒரு கடிதத்தை வெளியிட்டார். 1989 ஆம் ஆண்டு தான் முதல்வராக இருந்தபோது, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறி, அந்தக் கடிதத்தை ஏடுகளுக்குத்  தந்தார். அத்துடன், இதற்காகத் தம்பி வைகோ அரசியலை விட்டு விலக வேண்டும் என்று கேட்கவில்லை; தெரிந்து கொண்டால் போதும் என்று ஏதோ பெருந்தன்மையாகக் கூறினார்.
ஆனால் அப்படி ஒரு கடிதத்தைத் கருணாநிதி எழுதவே இல்லை. தொடர்ச்சியாக எனது குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய நாளில் கடிதம் எழுதியதுபோல, ஒரு போலிக் கடிதத்தைத்  தயாரித்து விட்டார். காரணம் 89 ஆம் ஆண்டு அவர் அந்தக் கடிதத்தை எழுதியதாகக் கூறுகின்ற நாளில், அவர் தில்லியில் இருந்தார். பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அப்படி இருக்கும்போது அவரிடம் நேரில் கோரிக்கை விடுக்காமல், கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன?
சரி அப்படி எழுதி இருந்தால், அதற்கு மறுநாள் முரசொலியில் அந்தக் கடிதம் பற்றியோ, கோரிக்கை பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இல்லையே? அது ஏன்? சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கருணாநிதி கோரிக்கை என்று ஒரு செய்தி உண்டா? இல்லை, ராஜீவிடம் நான் கோரிக்கை விடுத்தேன் என்றைக்காவது எங்காவது பேசி இருக்கின்றாரா?
எனவே, இன்றைக்கும் சொல்லுகிறேன். கருணாநிதி தயாரித்தது ஒரு போலிக் கடிதம். இதை மறுக்க முடியுமா? இல்லை என் மீது மான நட்ட வழக்குப் போடத் தயாரா? இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
நான் திரும்பவும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால், தகவல் உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு பதிவு ஏடுகளில் அப்படி ஒரு கடிதம் இருக்கின்றதா என்ற தகவலைப் பெற்று வெளியிடுவேன். கருணாநி தியின் மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவேன். இன்றைக்கு எங்கள் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லி இருக்கின்றோம்?
பேரறிஞர் அண்ணா இந்தத் திட்டத்தை வலியுறுத்திய நாள்களில் சுற்றுப்புறச் சூழல் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. அத்தகைய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பின்னாளில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அந்தத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இந்தக் கேள்வி எழுந்து இருக்காது. ஆனால் இன்றைக்கு, கடலோரப் பகுதி வாழ் மீனவப் பெருமக்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். கடல்வாழ் உயிரினங்களுக்குக் கேடு என்று கருதுகிறார்கள். மீனவப் பெருமக்கள் ஏற்றுக்கொண்டால்தான் இத்திட்டத்தை நான் ஆதரிப்பேன்’’ என்று பேசினார்.

ad

ad