புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை அடுத்தே அவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், அரியாலை, செம்மணி, வண்ணார்பண்ணை மற்றும் நீர்வேலி ஆகிய இடங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றித் தெரியவருவதாவது,
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தில் சமுர்த்தி அலுவலகத்தின் அருகிலுள்ள வீட்டிலிருந்த இளம் பெண்ணை, வானில் வந்த ஐவர் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை, வீட்டினர் கத்தியுள்ளனர். இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ஓடிச் சென்ற போதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது கடத்தலில் ஈடுபட்ட முயற்சித்த இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்த, கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
பொலிஸார் மண்டைதீவு சந்தியிலுள்ள பொலிஸாருக்கு இது பற்றித் தெரிவித்ததைத் தொடர்ந்து, குறித்த வாகனம் மண்டைதீவுச் சந்தியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இந்த வாகனத்தில் இருந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த இளைஞர்களில் ஒருவரைத் தான் காதலிப்பதாகவும், அதற்கு வீட்டுக்காரரின் சம்மதம் கிடைக்காததாலேயே இவ்வாறு அவர்களுடன் சென்றதாகவும் மேற்படி பெண் தெரிவித்தார்.
ஆனால், இவர்களின் வாகனத்தின் சீற்றுகளுக்கு அடியில் 2 வாள்கள், 2 இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணைத் தந்தையிடம் ஒப்படைத்ததுடன், இளைஞர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ad

ad