புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு 
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்
, இயற்பியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றினார்.

1974ஆம் ஆண்டில் ஜனசங்க கட்சிக்கு மிர்சாபூர் பகுதி செயலாளராக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு மிர்சாபூர் மாவட்ட ஜனசங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனையடுத்து 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1983ஆம் ஆண்டு அந்த மாநில பாஜக பொதுச் செயலாளர் பதவியும், பாஜகவின் உத்தரப் பிரதேச இளைஞர் அணித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டன.
1986ஆம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய பொதுச் செயலாளராகவும், 1988ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1988ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். மாநிலத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
1994ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதை அடுத்து, தேசிய அரசியலில் ராஜ்நாத் சிங் கால்தடம் பதித்தார். மாநிலங்களவையில் பாஜகவின் கொறடாவாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1997ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், 1999இல் மத்திய தரை வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் வரை, அப்பதவியில் நீடித்தார். அவர் இத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் உத்தரப் பிரதேச அரசியலுக்கு அவர் திரும்பிய போதும், 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 2013ஆம் ஆண்டு பாஜகவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அருண் ஜேட்லி
பஞ்சாப் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஜேட்லி (61), ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் 1970ஆம் ஆண்டு சேர்ந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவராக ஜேட்லி தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ் நாராயணனால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அவர் சேர்ந்தார். பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் தலைவர்கள், எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளராகவும், பல்வேறு மாநிலங்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 2002, 2007 ஆம் ஆண்டு குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சியமைக்க அவருக்கு உறுதுணையாக ஜேட்லி இருந்தார்.
முந்தைய வாஜ்பாய் அமைச்சரவையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி, பங்கு விற்பனைத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), கப்பல் துறை அமைச்சர், சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நேரிட்ட கலவரத்தால், பாஜகவில் மோடிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டபோது அவருக்கு ஆதரவாக ஜேட்லி செயல்பட்டார். பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டதிலும் அருண் ஜேட்லி முக்கிய பங்காற்றினார். அதனால்தான் தேர்தலில் அருண் ஜேட்லி தோல்வியடைந்தபோதும், அவரை தனது அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு மோடி அமைச்சராக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ்
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் (62), 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுஷ்மாவின் தந்தை, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஆவார். 1970ம் ஆண்டில் ஏ.பி.வி.பி. அமைப்பில் சேர்ந்ததன் மூலம், தனது அரசியல் வாழ்க்கையை அவர் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு முதல், 1982ஆம் ஆண்டு வரை அம்பாலா கண்டோன்மெண்ட் தொகுதி பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தனது 25ஆவது வயதில் ஹரியாணா மாநில கேபினெட் அமைச்சராக சுஷ்மா பதவியேற்றார். 27ஆவது வயதில் கட்சியின் ஹரியாணா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் ஹரியாணாவில் பாஜக-லோக் தள கூட்டணி அரசில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

பிறகு மாநிலங்களவை உறுப்பினராகவும், தில்லி தொகுதி மக்களவை உறுப்பினராகவும் சுஷ்மா தேர்வு செய்யப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜக அரசின் 13 நாள் ஆட்சிகாலத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார்.
வாஜ்பாயின் 2ஆவது ஆட்சிக்காலத்திலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தில்லியின் முதல்வராக 1998ஆம் ஆண்டு கட்சியால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். தில்லி பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக சுஷ்மா மீண்டும் நியமிக்கப்பட்டார்.
வெங்கய்ய நாயுடு
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கய்ய நாயுடு (65), தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது கல்லூரி படிப்பை நெல்லூர் வி.ஆர். கல்லூரியில் முடித்த வெங்கய்ய நாயுடு, சட்டப் படிப்பை விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைகழகத்தில் நிறைவு செய்தார்.
ஆந்திர மாநில ஜனதா கட்சியில் மாணவர் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வெங்கய்ய நாயுடு, பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆந்திர பேரவை உறுப்பினராக 2 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 3 முறையும் வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் பாஜக தலைவராக 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பதவி வகித்துள்ளார். 
நிர்மலா சீதாராமன்
முதல் முறையாக மத்திய இணை (தனிப்பொறுப்பு) அமைச்சராகியுள்ள நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பிறந்தவர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றது. அதில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1959-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருச்சியில் பிறந்த அவர், அங்குள்ள சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பையும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.
திருமணத்துக்குப் பிறகு ஆந்திரத்தில் குடியேறிய அவர், பாஜகவில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டார். தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆந்திர மாநில பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த 2010-ஆம் ஆண்டு நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவரான போது, கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
2012-ல் ராஜ்நாத் சிங் தலைவரான போது, நிர்மலா சீதாராமன் மீண்டும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மோடி அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மோடி அரசில் இடம்பெற்றுள்ள 7 பெண் அமைச்சர்களில் நிர்மலா சீதாராமனும் ஒருவர். அதுவும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. ஸ்மிருதி இரானி  தில்லியை சேர்ந்த ஸ்மிருதி இரானி, பாஜகவின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ஆவார். தற்போது அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.
தனது கல்வியை தில்லியில் முடித்த அவர், பின்னர் மும்பையில் குடியேறி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். இதில் அவர் நடித்த "சாஸ் பி கபி பஹு தி' தொடர் மிகவும் பிரசித்து பெற்றதாகும்.
அதனைத் தொடர்ந்து பாஜகவில் சேர்ந்து, 2 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில் 2004ஆம் ஆண்டு தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து தில்லியின் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.
அதனையடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த போதிலும், அவருக்கு கடுமையான போட்டியை ஸ்மிருதி இரானி அளித்தார்.
இதனால் ராகுல் காந்தியால் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது.
ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானி, தொழிலதிபர் ஆவார். இத்தம்பதிக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அனந்த் குமார்
கர்நாடக மாநிலத்தில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த அனந்த் குமார் (55), மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். ஏ.பி.வி.பி. அமைப்பின் பொதுச் செயலாளர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த அவருக்கு, அக்கட்சியின் யுவ மோர்ச்சா அமைப்பின் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதனையடுத்து 1995ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1996ம் ஆண்டு பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதே தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஜ்பாய் அரசில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும், சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நலன், கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
வி.கே. சிங்
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த வி.கே. சிங் (63), இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஆவார். ஒய்வு பெறும் வயதில், வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவத்துக்கு டட்ரா வாகனங்களை கொள்முதல் செய்ய அனுமதியளித்தால், தனக்கு ரூ.14 கோடி லஞ்சமாக தரப்படும் என தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு, சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பாஜகவில் சேர்ந்த அவர், காஜியாபாதில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு 5.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரவிசங்கர் பிரசாத்
"ஜன சங்கம்' தோற்றுவிக்கப்பட முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரும் பிரபல வழக்குரைஞருமான தாக்குர் பிரசாத்தின் மகன் ரவிசங்கர் பிரசாத். லாலு பிரசாத் யாதவ் தலைமையில் பாட்னா பல்கலைக்கழக மாணவர் பிரிவு தலைவராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய ரவிசங்கர் பிரசாத் கடந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
1970களில் மாணவர்கள் போராட்ட தலைவராக இருந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தினார்.

 நெருக்கடி நிலைக்கு எதிரான ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்துக்கு தீவிர ஆதரவு அளித்தவர்.
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு காரணமான கால்நடைத் தீவன ஊழல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலக்கு வழக்கைத் தொடர்ந்து வாதிட்டவர். வாஜ்பாய் அரசில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, ஒலிபரப்புத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக சிறப்பான பணியாற்றியுள்ளார்.
உமா பாரதி
பெண் துறவியும் பாஜகவின் தீவிர கொள்கைவாதியுமான உமா பாரதி (55) மக்களவைத் தேர்தலில் ஜான்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குவாலியர் அரச பரம்பரையைச் சேர்ந்த விஜயராஜே சிந்தியாவால் அரசியலில் அறிமுகப் படுத்தப்பட்ட உமா பாரதி மத்திய பிரதேச மாநிலம் கஜு ராஹோ மக்களவைத் தொகுதியில் இருந்து கடந்த 1989ஆம் ஆண்டு முதன்முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று எம்.பி.யானார். 1999-இல் போபால் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சுற்றுலா, மனித வளம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார்.  கடந்த 2003 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசின் முதல்வராக பதவியேற்ற உமா பாரதி, கர்நாடகத்தில் ஹூப்ளி நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகினார்.
நிதின் கட்கரி
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடுத்தர வேளாண் குடும்பத்தில் பிறந்த நிதின் கட்கரி (57), பாஜகவின் இளம் தேசியத் தலைவராக பதவி வகித்து, தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுளார்.
 நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நாகபுரி தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விலாஸ்ராவ் முத்தேம்வாரை, 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் மாணவர் தலைவராக கால்பதித்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  அதைத் தொடர்ந்து, பாஜக இளைஞர் அணியில் பணியாற்றிய நிதின் கட்கரி பின்னர் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினரானார்.
 1995ஆண்டு முதல் 1999ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில பொதுப் பணித்துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவி வகித்துள்ளார்.
ராம்விலாஸ் பாஸ்வான்
கடந்த 1977-இல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வான் சுமார் 4.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கின்னஸ் சாதனை படைத்தார். பிகார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து தற்போது 9ஆவது முறையாக எம்.பி.யாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ள அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரான பாஸ்வான், குஜராத் மாநிலம் கோத்ராவில் ஏற்பட்ட கலவரத்தைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2002ஆம் ஆண்டில் விலகினார். தற்போது மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்று மோடி தலைமையிலான அரசில் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

ad

ad