வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார்
வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து அதில் வலி.வடக்கு மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கடந்த கூட்ட அறிக்கை தொடர்பிலான விடயங்கள் ஆராயப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்புத் தொடர்பில் அரசினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை மீளப்பெறவேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானம் அரசுக்கு அறிவிக்கப்பட்டதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா கேள்விஎழுப்பினார்.
அன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வந்தமையால், இந்தக் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை என்று பொதுவாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய அது அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.
இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, கடந்த கூட்டம் இடம் பெற்ற பின்னர் கீரிமலையில் காணி சுவீகரிப்பு இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வளலாயில் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருக்கின்றனர்.அவர்களது காணிகளைச் சுவீகரித்து அந்தக் காணிகளில் வேறு மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது முறையற்ற செயல்.இதனை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன் போது பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்படி குடியேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் கூறினார்