புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014


முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை!- படுகாயமடைந்த யசோதரன்
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தங்கவேல் யசோதரன், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
அத்துடன், முக்கொலை குற்றவாளியினை எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த மே 4ம் திகதி இடம்பெற்ற முக்கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன், மன்றில் சாட்சியமளித்தார்.
கொலைகள் நடைபெற்ற அன்று தான் பிறிதொரு அறையில் படுத்திருந்ததாகவும், 'எங்களை வெட்டுகின்றான் காப்பாற்றுங்கள்' என்ற அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது தனக்கும் வெட்டு வீழ்ந்ததாகவும், இதனால் தான் சுயநினைவிழந்தமையினால் அதன் பின்னர் நடந்தமை தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
மேலும், தனக்கும் தனஞ்சயனுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும், எனது மனைவி குடும்பத்திற்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தமையினைத் தான் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4 ம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நிர்க்குணானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிர்க்குணானந்தன் சுபாங்கன் (19)  ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்சயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.
இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்சயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்)  மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார்.
ஏற்கெனவே தனஞ்சயனின் மனைவியான தர்மிகா கடந்த 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார். இந்நிலையில் இன்று கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் தனது சாட்சியினைப் பதிவு செய்திருந்தார்.

ad

ad