தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 6 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர் ஒருவர் என 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. விளக்கம் தருவதற்காக இவர்களுக்கு ஒருவார கால அவகாசம் தந்துள்ளது தலைமை. அவர்கள் தரும் விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில், கட்சியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள்.
தஞ்சை தேர்தல் அமைப்பாளர் கோ.சி.மணி, தேர்தல் பொறுப்பாளர் ராஜமாணிக்கம், வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் தந்த புகாரின் அடிப்படையில், மா.செ.பழனிமாணிக்கம், நகரச்செயலாளர்கள் பட்டுக் கோட்டை சீனி அண்ணாதுரை, மன்னார்குடி ராஜ பூபாலன், ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை ஏனாதி பாலு, ஒரத்தநாடு தியாக இளங்கோ ஆகிய 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதுபற்றி நாம் விசாரித்தபோது, ""தேர்தல் வேலைகளை சரிவர செய்துகொண்டிருந்த ஒ.செ. தியாக இளங்கோவனை அழைத்த பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார், "டி.ஆர்.பாலு ஆளாக மாறிட்டீயா நீ? ஒழுங்கா வீட்டுல இருந்துக்கிட்டு வேலை பார்க்கிற மாதிரி பாவ்லா காட்டுனா போதும்'னு கட்டளையிட... அதன் பிறகு அவரும், அவரது ஆட்களும் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை என்றும், மன்னார்குடியில் வாக்காளர் களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்துக்கொண் டிருக்கும் தகவல் அறிந்த டி.ஆர்.பாலு, அதனை ஒ.செ. ராஜபூபாலனுக்கு தெரிவித்துவிட்டு ஸ்பாட்டுக்கு விரைந்து சென்றார். ஆனால் ராஜபூபாலனோ கடைசிவரை ஸ்பாட்டுக்கு வரவே இல்லை என்றும், தன் கட்டுப் பாட்டிலுள்ள ந.செ., ஒ.செ.க்களை தேர்தல் பணி செய்ய தேவையில்லை என பழனி மாணிக்கம் கட்டளையிட்டு தடுத்து வைத் திருந்தார் என்றும், இ.பி.காலனியிலுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஒருவரே சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்ய முற்படுவதை அறிந்து, அதை பழனிமாணிக்கத்திற்கு தெரிவித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வந்து அதை தடுத்தார் டி.ஆர்.பாலு. ஆனால், வாக்குச் சாவடிக்கு 2 கி.மீ. தூரத்திலிருந்த பழனி மாணிக்கம் ஸ்பாட்டுக்கு வரவே இல்லை என்றும் பல புகார்களை அடுக்கியிருக் கிறார்கள். இதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டினார்கள். பழனி மாணிக்கத்தின் தொடர்பு நமக்கு கிடைக்காத நிலையில், அவரது தரப்பினரிடம் நாம் பேசியபோது, ""டி.ஆர்.பாலுவை திருப்தி படுத்த நடவடிக்கை எடுத்திருக்காங்க. கலங்காதீர்கள். கட்சி அனுப்பிய நோட்டீஸ் வந்ததும் அதற்குரிய பதிலை தருவோம். நிச்சயம் தலைவர் நம்மை கைவிட மாட்டார் என்று எங்களிடம் சொல்லி வருகிற பழனிமாணிக்கம், கட்சியை விட்டு நீக்கமாட்டாங்கங்கிற திடமான நம்பிக்கையில் இருக்கார்'' என சொல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஒ.செ.க்கள் பாரப்பட்டி சுரேஷ், ஓமலூர் பரமன், நங்கவள்ளி ரவிச்சந்திரன், மேச்சேரி காசிவிஸ்வநாதன் என வீரபாண்டியாரின் ஆதரவாளர்களை களை எடுத்துள்ளது அறிவாலயம். வேட்பாளர் உமாராணி, கலைஞரை சந்தித்து ""வன்னியர் தொகுதியில் கவுண்டச்சியை நிறுத்தியிருக் காங்க. அவங்களுக்கு நாம் யாருன்னு காட்டணும்னு சொல்லி யாரையுமே தேர்தல் வேலை செய்யவிடாமல் பாரப்பட்டி சுரேஷ் தடுத்துவிட்டார் என்றும் என்னை கட்சி வேட்பாளராக கருதாமல் தனிப்பட்ட மனுசியாகவே காசிவிஸ்வநாதனும் ரவிச்சந்திரனும் பார்த்தார்கள் என்றும் மேச்சேரி ஒன்றியம் தர்மபுரி மாவட்டங்கிறதினாலே சரியாக வேலைப்பார்க்கலைன் னும் தி.மு.க.விலுள்ள வன்னியர் வாக்காளர்களை ஓட்டு போடாமல் வீட்டில் இருந்துவிடுங்கள் என்று சொல்லி பூத்துகளுக்கு வராமல் தடுத்துவிட்டனர்'' என்றும் சரமாரியாக புகார் வாசித்ததன் அடிப் படையில் ஆக்ஷன் பாய்ந்துள்ளது.
ஆனால், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தி.மு.க. தலைமையகத்தை முற்றுகையிட்டு பொறுப்பாளர் சிவலிங்கத்திடம் நியாயம் கேட்பதற் காக திரண்டிருந்தனர் வீரபாண்டியார் ஆதரவாளர் கள். அவர்களில் பனமரத்துப்பட்டி ஒன்றிய விவசாய அணி து.செ. செல்லமுத்து நம்மிடம், ""பாரப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க.வை விட தி.மு.க.விற்கு 771 வாக்குகளை கூடுதலாக வாங்கித் தந்திருக் கிறார் பாரப்பட்டி சுரேஷ். ஆனால், வேட்பாளர் உமாராணி அவரின் சொந்த பகுதியிலுள்ள 186-வது பூத்தில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 82 வாக்குகள் அதிகம். இங்கு தே.மு.தி.க. 96 வாக்குகள் வாங்கி யிருக்கிறது'' என்று கொந்தளித்தார்.
தேர்தல் தோல்விக்கு காரணமானவர் கள் என கழக நிர்வாகிகள் கொடுத்தப் பட்டியலை திருச்சி, பெரம்பலூர் வேட் பாளர்கள் தலை மைக்கு அனுப்பி வைத்தனர். அத னடிப்படையில், மண்ணச்சநல்லூர் ஒ.செ. ஆனந்தன், முசிறி ஒ.செ. சோழன், துறையூர் ஒ.செ. மகாராஜன் ஆகி யோரை சஸ் பெண்ட் செய்துள் ளது அறிவாலயம். இவர்கள் மூவரும் முன்னாள் அமைச் சர் செல்வராஜின் ஆதரவாளர்கள். பெரம்பலூர் வேட்பாளர் சீமானூர் பிரபு விடம் நாம் பேசியபோது, ""என் தொகுதியிலுள்ள முக்கிய நிர்வாகிகள் 40 பேர் செல்வராஜின் சொல்படி செயல்பட்டார் கள். ஓட்டுக் கேட்க என்னோடு வந்துவிட்டு இவர்கள் அனை வரும் கட்சி வாக்காளர்களிடமே தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு பிரச்சாரம் செய்தாங்க'' என்றார். திருச்சி மா.செ. நேருவின் ஆதரவுபெற்ற வேட்பாளர்கள் என்பதால் அவர்களைத் தோற்கடிக்க அனைத்து வேலைகளையும் செல்வராஜ் தரப்பு செய்தது என்பதுதான் மொத்தக் குற்றச் சாட்டின் சாரம்சமாக இருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ள ஒ.செ.க்கள் சார்பாக நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், ""தனது ஆட்களை மட்டுமே தேர்தல் பணிக்கு பயன்படுத்திக் கொண்டு செல்வராஜ் ஆதரவாளர்கள் அனைவரையும் திட்ட மிட்டே புறக்கணித்தார்'' என்கிறார்கள்.
விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர் போஸ் மற்றும் விருதுநகர் ஒ.செ. சின்ராஜ் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைக்கு, அழகிரி ஆதரவு நிலை எடுத்து ம.தி.மு.க.வுக்கு வேலை பார்த்தனர் என்பதே பிரதான காரணம். ஆனால் மாவட்ட உ.பி.க்களோ, ""ஏற்கனவே கட்சியை விட்டு அவர் கள் போய்விட்டார்கள். இப்போ எதற்கு நடவடிக்கை?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஒ.செ. குடிகாடு ஜெயபால் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. ""அ.தி.மு.க. வேட்பாளரும் தனது நண்பரு மான அருண்மொழித்தேவன் ஜெயிக்க வேண்டும் என்பதற் காகவே டம்மி வேட்பாளரை நிறுத்தினார். என்னை பலிகடா வாக்குகிறார்கள்'' என புலம்பிக் கொண்டிருக்கிறார் ஜெயபால்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 33 பேருக்கும் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பும் வேலைகள் துவங்கிவிட்டன. அதே சமயம், நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் இவர்கள் மட்டும் தான் தவறு செய்தவர்களா? மற்றவர்கள் யாருமே தவறு செய்யவில்லையா? என்கிற கேள்விகள் மூத்த நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரையில் எதிரொலிக்கும் நிலையில், மேலிட தொடர்புகளிடம் விசாரித்தபோது, ""தம்மி டம் கொடுக்கப்பட்ட புகார்களை தங்கம் தென்னரசு மற்றும் கல்யாணசுந்தரத்திடம் கொடுத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கச் சொன்னார் கலைஞர். அதன்படி, 3 வகையான பட்டியலை தயாரித்து தலைமையிடம் ஒப்படைத்தது இருவர் குழு.
முதல் பட்டியலில், சொந்த கட்சியை தோற்கடிக்க மாற்று கட்சிக்கு துணை போன துரோகிகள் அடங்குவர். இரண்டாவது பட்டியலில் தேர்தல் நிதியை முறையாக செலவு செய்யாமல் வேட்பாளர்களை டார்ச்சர் செய்தது. பிரச் சாரத்தில் கவனம் செலுத்தாதது, வெற்றிக்காக முனைப்பு காட் டாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் அடங்குவர். எந்த வேலையும் செய்யாமல் லக்கேஜ் போல தேமே என்று இருந்தவர்கள் மூன்றாவது பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளனர். அதன்படி, துரோகப் பட்டியலில் இருந்தவர் கள் மீது முதல் நடவடிக்கைப் பாய்ந்துள்ளது. அடுத்தடுத்த பட்டியலில் மா.செ.க்கள் பலரும் அவரது ஆட்களும் இடம் பிடித்துள்ளதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட விருக்கிறது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது'' என்று விவரிக்கின்றனர்.