புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014




புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.)த்திற்காக, புத்தம் புதிய 10 வால்வோ பேருந்து களை வாங்கியிருக்கிறது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர வளர்ச்சித் திட்டத் திற்கான, மத்திய அரசின் 80 விழுக்காடு மானியத்தோடு வாங்கப்பட்ட, இந்தப் பேருந்துகளில் ஒன்றை 20.06.14 வெள்ளியன்று புதுச்சேரி சட்டமன்ற வாயிலில், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார் பி.ஆர்.டி.சி.யின் சேர்மன் ஞானம்.

பேருந்து புறப்பட்டதும், தனது அலுவலகம் செல்வதற்காக, படியேறினார் முதலமைச்சர். அவர் பின்னாலேயே செல்வதற்காக சேர்மன் ஞானமும் முயன்றார். அந்தச் சமயத்தில், "நில்லுய்யா' என்றார் உருளையன்பேட்டை எம்.எல்.ஏ. நேரு. நின்று திரும்பினார் சேர்மன் ஞானம். அடுத்த நொடி... சடார் என்று விழுந்தது, ஞானத்தின் கன்னத்தில் ஒரு அறை. திகைத்த ஞானம் கன்னத்தை தடவியபடி ஒரு கணம் எம்.எல்.ஏ. நேருவை வெறித்தார். அதே நாளில், மாலையில், தனக்கு நெருக்கமான அசோக் ஆனந்த், கல்யாண சுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகிய எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்திய நேரு, சட்டமன்ற அலுவலகச் செயலாளரைச் சந்தித்தார். ""எனக்கு அரசு கொறடா பொறுப்பும் வேண்டாம். அரசாங்கக் காரும் வேண்டாம். ரூமும் தேவையில்லை. இந்தாங்க சாவி!'' சாவிகளை செயலாளரின் மேஜையில் போட்டுவிட்டு தனது சொந்தக் காரில் கிளம்பிப் போனார்.

""என்.ஆர்.காங்கிரசில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் விலகப் போகிறார்கள், ரங்கசாமியின் ஆட்சி கவிழப் போகிறது'' என்ற பேச்சுக் கிளம்பியது.


என்னதான் நடக்கிறது? உருளையன்பேட்டை எம்.எல்.ஏ. நேருவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

""எம்.பி. எலெக்ஷனுக்கு முன்னாடியே பிரச்சினைதான். அண்ணன் எந்தக் கோரிக்கை வைத்தாலும் செய்றதில்லை. எந்த டிரான்ஸ்பருக்கு சிபாரிசு செய்தாலும் கவனிக்கிறதில்லை. ஆள் மாறாட்டம் செய்து பரிட்சை எழுதினார் என்று கல்யாண சுந்தரத்திடம் இருந்த கல்வி அமைச்சர் பதவியைப் பறித்து முதலமைச்சர் ரங்கசாமி தன்னிடம் வைத்துக் கொண்டார். கல்யாணசுந்தரம் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தபிறகும் அமைச்சர் பதவியைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அல்லது மற்றவர்களுக்காவது கொடுத்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து ஜெயித்த நம்மை ரங்கசாமி மதிக்காமல், சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறாரே என்றுதான் எங்க அண்ணன் நேருவும் மற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று சேர்ந்து ரங்கசாமியிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். எம்.பி. எலெக்ஷன் முடியட்டும். கவனிக்கிறேன் என்றார். எலெக்ஷன் முடிந்தும் கூட பழைய மாதிரியே புறக்கணித்தார் ரங்கசாமி. அதனோட வெளிப்பாடுதான் ரங்கசாமியின் நிழலான ஞானத்துக்குக் கிடைத்த பரிசு!'' என்கிறார்கள் நேருவின் விசுவாசிகள்.

கடந்த மூன்று நாட்களாக பலமுறை முதலமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ. நேருவுக்கு போன் செய்தும் அவர் அட்டென்ட் செய்யவே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

எம்.எல்.ஏ. நேருவைத் தொடர்பு கொண்டோம்.

""நான் ஞானத்தை அடிக்கவில்லை. சும்மா என் அதிருப்தியை வெளிக்காட்டினேன். எனது 16 கோரிக்கைகளில் ஒன்றைக் கூட முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. எனது தொகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் ஒன்றும் இப்போது சொல்ல விரும்பவில்லை!'' என்றார் நேரு.

நேருவும் மற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் விலகினால், என்.ஆர்.காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என்ற பேச்சு புதுச்சேரியில் பரபரப்பூட்டிக் கொண்டிருக்கிறது.  

ad

ad