புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014


முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் மீது தென்னிலங்கையில் நடத்தப்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மேற்படி வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மா னத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அஸ்மின், வடமாகாணசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த போது முன்மொழிந்திருந்தார்.
குறித்த பிரரேரணையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர் இந்திரராசா வழிமொழிந்த நிலையில் குறித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மேலும் குறித்த தீமானத்தின் மீது சுமார் ஒன்றரை மணிநேரம் விவாதமும் இடம்பெற்றிருந்தது.
குறித்த தீர்மானம் தொடர்பாக அஸ்மின் உரையாற்றுகையில், ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையின் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு முன்பாகவே இந்த வன்முறைகள் நடந்தன.
இதேபோன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்திய சிங்கள பௌத்த இனவாதிகளை நியாயப்படுத்தும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுத்துள்ளார்.
இதனோடு பாதிப்பு நடைபெற்ற இடத்திற்கு இலங்கையின் ஜனாதிபதி வருகை தந்து சில தினங்களேயான நிலையில் முஸ்லிம்களின் புடவை வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் கடந்த 15ம் திகதி கந்தே விகாரைக்கு முன்பாக கூடிய, சிங்கள பௌத்த இனவாதிகள் முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே சிங்கள குடிமகன் மீது அவர்கள் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை காண்பிக்க வேண்டும் என விஷத்தை கக்கும் வார்த்தைகளை பேசிய பின்னரே, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இது 83ம் ஆண்டு கலவரத்தைப் போன்றதொரு கலவரத்தை முஸ்லிம் மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள் என்றே நாங்கள் கருத வேண்டியிருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சபையில் மேற்படி பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பேரவைத்தலைவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த விவாதத்தின் போது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது முஸ்லிம் தரப்புக்கள் மௌனம் காத்தமை தொடர்பாக பலத்த பேச்சுக்கள் எழுந்திருந்த போதும் மேற்படி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

ad

ad