புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

தடையில்லா மின்சாரம் இன்று முதல் தமிழகத்தில் 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து
செய்யப்படுகிறது. அதேபோல் உயர்மின் அழுத்த தொழில்களுக்கான மின் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் 1 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் வீடுகளும், 19 லட்சத்து 11 ஆயிரம் விவசாய பம்பு செட்கள், 26 லட்சத்து 32 ஆயிரம் வணிக நிறுவனங்கள், 5 லட்சத்து 9 ஆயிரம் தொழிற்சாலைகள், 20 லட்சத்து 8 ஆயிரம் பிறவகை இணைப்புகளும் உள்ளன. இந்த மின்நுகர்வோர்களுக்கு தேவையான மின்சாரம், மின்உற்பத்தி நிலையங்களில் இல்லாததால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டு அமலானது.

2010-ம் ஆண்டு முதல் 2 முதல் 3 மணி நேரம் வீடுகளுக்கு மின்வெட்டும், தொழிற்சாலைகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் மின்நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததுடன், தேவையும் 11,500 மெகாவாட்டிலிருந்து 12,500 மெகாவாட் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால் மின்உற்பத்தி நிலையங்களில் முறையான பராமரிப்பில்லாததால் மின் உற்பத்தியின் அளவும் நாளுக்கு நாள் குறைந்தது.

இதனால் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டதால் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மாவட்டங்களில் வீடுகளுக்கு 8 முதல் 10 மணி நேரமும், சென்னை மாநகரில் வீடுகளுக்கு முதலில் ஒரு மணி நேரமும், பின்னர் 2 மணி நேரமாகவும் மின்வெட்டு உயர்த்தப்பட்டது.

2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்சார பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தினார். மேலும் வரும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது எனது தொலைநோக்கு திட்டம் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 செயல்திட்டத்தை வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் இப்போது மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

மின்சார நிலையை மேம்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கான கூட்டங்களை கூட்டி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின்உற்பத்தி நிறுவுதிறன் ஏற்படுத்தினார்.

மேலும் மின்தேவையை பூர்த்தி செய்ய 500 மெகாவாட் மின்சாரம் நடுத்தர கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த மின்சாரம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் படிப்படியாக பெறப்பட உள்ளது. தற்போது புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாகவும் நமக்கு தேவையான மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.

இதனால் இன்று (ஜூன் 1-ந் தேதி) முதல் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வல்லூர் அனல்மின்நிலையத்தில் 600 மெகாவாட் கொள்திறன் கொண்ட ஒரு அலகு மின்சார உற்பத்தி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தின் பங்காக 375 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த மாதம் 29-ந் தேதியிலிருந்து வல்லூரில் உள்ள 2 அலகுகளும் முழு உற்பத்தி திறனை எட்டியுள்ளதால், தமிழகத்தினுடைய பங்கு 340 மெகாவாட் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் வல்லூரில் இருந்து கடந்த 29-ந் தேதியிலிருந்து 715 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

இதன் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்டு வந்த 3,045 மெகாவாட் என்ற அளவும் உயர்ந்து 3,395 மெகாவாட் பெறப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு முடிய 3 மாதங்கள் காற்று அதிகம் வீசுவதால் காற்றாலைகளுக்கு “பீக் லோடு” மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாதங்களிலும் காற்றாலைகள் அதிகபட்சமாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். தற்போது காற்றாலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், 2,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்து வருகிறது.

குறிப்பாக கடந்த மாதம் 30-ந் தேதி இரவு 7.20 மணிக்கு 2,438 மெகாவாட்டும், நேற்று அதிகாலை 1.50 மணி நிலவரப்படி 2,618 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் 4 ஆயிரம் மெகாவாட் என்ற முழு உற்பத்தி நிலையையும் காற்றாலைகள் எட்டும். இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முதல்-அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்.

தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவே இருந்து வந்தது.

குறிப்பாக நேற்று 293 மெகாவாட் என்ற அளவிற்கு மட்டுமே மின்தடை செய்ய வேண்டியிருந்தது. அதுவும் இன்று முதல் இருக்காது.

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின்கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் இன்று முதல் அறவே நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படுகிறது. குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்களை தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கும் முழுமையான மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மின்வெட்டு இல்லை என்ற நிலை உருவாகும்.

இதேபோல் உயர்மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 சதவீதம் மின் கட்டுப்பாடும் இன்று முதல் நீக்கப்படுகிறது.

இதே போன்று உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 சதவீதம் மின்கட்டுப்பாடும் முதல்-அமைச்சரின் உத்தரவை ஏற்று இன்று முதல் நீக்கப்படுகிறது.

ad

ad