புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014

news
 கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன் - அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்குயிராக தங்களை நேசித்து உறவு கொண்டாடி பரஸ்பரம் நன்மை தீமையில் பங்கு கொண்டு வாழ்ந்தார்களோ அதே உயிரோட்டமான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பேரவாதான் கிழக்கு மாகாணத்தை நான் பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்து நின்று, அதனைப் பிரித்தெடுப்பதற்குக் காரணமாய் அமைந்தது இவ்வாறு தெரிவித்தார் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
 
ஏறாவூர் ஆற்றங்கரையோர பூங்கா திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றியதாவது,
 
'முன்னோர்களைப் போல் நமக்குப் பின்வருகின்ற சந்ததிகளும் பிரிக்க முடியாத உறவோடு இணைந்து வாழவேண்டும். கிழக்கு மாகாணம் என்பது தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்களுக்குச் சொந்தமானது.
 
இந்த எதிர்பார்ப்பு இப்பொழுது 90 வீதம் சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆனால் 10 வீதம் சில சில சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த சந்தேகங்களுக்குக் காரணம் சில அரசியல் தலைமைகளும் அரசியல் கட்சிகளும்தான்.
 
தாங்களும் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளும் வாழ வேண்டும் என்பதற்காக தினமும் இனவாதங்களைப் பேசி முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கின்ற ஒற்றுமையைச் சீர்குலைத்து அதன் மூலம் வாக்கு வேட்டையாடுகின்ற கேவலமான சிந்தனையாளர்கள்தான் இவ்வாறு தமிழ்முஸ்லிம் மக்களைப் பிரிக்கப்பார்க்கின்றார்கள்.
 
அரசியல் சதிகாரர்கள் சில நேரம் எல்லைப் பிரச்சினை என்பார்கள். இன முறுகல் என்பார்கள். இவற்றையெல்லாம் பொருட்படுத்தவே கூடாது. எந்தக் கிராமம் எந்த ஊருக்குள்ளும் இருக்க முடியும். அது கிழக்கு மாகாணம்தான். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான்.
 
இந்த அடிப்படையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் முயற்சிக்கின்ற பொழுது இனவாதிகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிப்பதற்கு எப்பொழுதுமே சதி செய்து கொண்டு வந்திருக்கின்றார்கள். இது வரலாற்று உண்மை இதற்கு நாம் ஒருபோதும் இனிமேல் இடமளிக்கவே கூடாது.
 
எல்லாம் வல்ல இறைவன் இந்த அநியாயக் காரர்களின் கறைபடிந்த உள்ளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நீதியானவன். அவன் நமக்குத் துணை நிற்பான். தினமும் நாங்கள் போராட்டம் என்று பொங்கி எழ முடியாது. ஏனெனில் அதனால் இழப்புக்கள் ஏராளம். நாம் சற்று மாறுபட்டுச் சிந்தித்து இழந்தவற்றை ஈடுசெய்து ஒற்றுமைப்பட்டு வீறுகொண்டு எழவேண்டும்.
 
இன ஒற்றுமைக்காக எங்களை நாங்கள் தியாகம் செய்ய வேண்டும். எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும். சண்டித்தனம் காட்டி எதனையும் சாதிக்க முடியாது. அப்படி சாதித்த ஒரு வரலாறும் இதுவரை இல்லை. நீதியும் நேர்மையும் தான் வெற்றி பெறும்.' என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

ad

ad