புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

தேர்தல் பிரசாரங்கள் 17இல் நிறைவு; இறுதிப் பணிகளில் கட்சிகள் தீவிரம்

* மொனராகலை, வெல்லவாயவில் ஐ.ம.சு.மு. பிரதான கூட்டங்கள்
* பதுளையில் ஐ.தே.க பிரசாரம்
* 12,500 அரச உத்தியோகத்தர்கள் பணியில்

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நாளை மறுதினம் நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. தேர்தலுக்கு இன்னும் 5 தினங்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார பதாகைகள், சோடனைகள், கட்அவுட்கள் என்பவற்றை 17ம் திகதி நள்ளிரவுக்குப் பின் அகற்றுமாறு சகல அபேட்சகர்களிடமும் அவர்களது ஆதரவாளர்களிடமும் தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.
பிரசார பதாகைகள், அகற்றப்பட்டுள்ளதா என பரீட்சிப்பதற்காக பொலிஸார், தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழு 18ம் திகதி இரு மாவட்டங்களுக்கும் செல்ல இருப் பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
19ம் திகதி முற்பகலுடன் தேர்தல் கட்சி அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும் எனவும் அவை அகற்றப்படா விட்டால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் கோரியுள்ளார்.
இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறும் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஊவா மாகாணத்திற்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததோடு தேர்தல் ஆணையாளரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு 223 முறைப்பாடுகளும் பொலிஸ் திணைக்களத்துக்கு 65 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
நாளை மறுதினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், அன்றைய தினம் பிரதான கட்சிகளின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இடம்பெற உள்ளன.
ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.மு. இறுதித் தேர்தல் பிரசார கூட்டங்கள் வெள்ளவாய மற்றும் மொனராகலையில் நடைபெற உள்ளன. இதில் ஐ.ம.சு.மு. தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். ஐ.தே.க.வின் இறுதிப் பிரசார கூட்டம் ஐ.தே.க. தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடைபெற உள்ளதோடு ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல கூட்டங்கள் இரு மாவட்டங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கடமையில் சுமார் 12,500 அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு வெளிமாவட்ட அரச உத்தியோகஸ்தர்கள் 18 ம் திகதி முதல் கடமைகளை ஏற்பதற்காக செல்ல உள்ளனர். தேர்தல் நடைபெறும் பாடசாலைகள் 19ம் திகதி மூடப்படும் என அறிய வருகிறது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 20ம் திகதி நடைபெற உள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் தெரிவாவதோடு பதுளை மாவட்டத்தில் 609,966 வாக்காளர்களும் மொனராகலை மாவட்டத்தில் 332,764 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ad

ad