புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014



திருமண கோஷ்டி பஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது :
மணமக்கள் உள்பட 70 பேர் கதி என்ன? 

காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 156.7 மி.மீ. மழையும், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 119.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த கன மழையால் அங்குள்ள ஜீலம் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இந்த வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்தநிலையில் ரஜோரி மாவட்டத்தில் இருந்து ஒரு திருமண கோஷ்டியை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று மாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மணமக்கள் உள்பட சுமார் 70–க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்த பஸ் காஷ்மீரின் எல்லைப்பகுதியான நவுஷேராவுக்கு அருகே லாம் பகுதியில் வந்த போது, கனமழை காரணமாக அருகில் உள்ள சானலில் கவிழ்ந்தது. அப்போது அந்த சானலில் அதிகமான வெள்ளம் சென்று கொண்டிருந்ததால், அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர், பஸ்சில் இருந்து குதித்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்பட 4 பேரை மீட்டனர்.

மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ்சையும், பஸ்சில் இருந்த மணமக்கள் உள்பட சுமார் 70 பேரையும் மீட்கும் பணியில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதைபோல நவுஷேரா பகுதியில் லாரி ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதற்கிடையே ஜீலம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அனந்தநாக் மற்றும் குல்காம் மாவட்டங்களை சேர்ந்த 23 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த ஆற்றில் அபாயகட்டத்தை தாண்டியும் வெள்ளம் செல்வதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மேலும் மாநிலத்தின் கோடைகால தலைநகராகிய ஸ்ரீநகர் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும் ஸ்ரீநகரின் ஒரு பகுதி தூத் கங்கா ஆற்று வெள்ளத்தில் மூழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்காம் மாவட்டத்தின் அபூரா பகுதியில் 2 பேரை ஆற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. இவ்வாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12–க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு மீட்புப்பணிகளில் ராணுவத்தினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad