புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014




ஜெயலலிதாவின் ஆட்சிரீதியான கட்சிரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் இரண்டாவதாகவும் அமைச்சரவையில் மூன்றாவதாகவும் இருந்துவருபவர், நத்தம் விசுவநாதன். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற கொழிக்கும் துறைகள் இவரின் வசம் உள்ளன. சட்டமன்றத்தில் நெடுநேரம் பேசக்கூடியவர் என்பதிலிருந்தே இவருக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைத் தெரிந்துகொள்ள முடியும். 

திண்டுக்கல் மாவட்டம் உலுப்பங்குடி கிராமத்தில் அண்ணாமலை சேர்வை குடும்பம் என்றால் பிரசித்தம். அவரது மகன் ராமநாதன் சேர்வைக்கும் மகனின் மனைவி சின்னம்மாளுக்கும் பிறந்த மூன்று மகன்களில் இரண்டாமவர்தான் விசுவநாதன். சின்னம்மாள் தன் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, தங்கள் வயலில் வேலை செய்த பெண்களின் குழந்தைகளுக்கும் பசி நேரத்தில் பாலூட்டிய தாயுள்ளம் கொண்டவர். அதனால் சாதி கடந்து அந்தக் குடும்பத்திற்கு செல்வாக்கு உண்டு. அதன் மூலமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு வந்தார் விசுவநாதன். ஜெ. ஆட்சியில் நத்தம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மா.செ. திண்டுக்கல் சீனிவாசன் சிபாரிசில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் விசுவநாதன். வெற்றிபெற்றார். அதன்பிறகு அவருடைய அரசியல் நடவடிக்கை களெல்லாம் அமைதிப்படை பட நாயகன் அமாவாசை நாகராஜசோழன் பாணிதான். திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக காய் நகர்த்தி ஓரங் கட்டியவர், அரசியலில் தன்னுடைய வளர்ச்சிக்குத் துணை நின்ற சொந்த சகோதரர் ஜெயராஜையும் ஓரங்கட்டிவிட்டார். தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் அணுப்பொழுதும் கவனமாக இருப்பார் என்கிறார்கள் நத்தம் விசுவநாதனின் உடனிருப் பவர்கள்.

நால்வர் அணி அமைச்சர்களில் ஓ.பன்னீரின் அடையாளம் ஜெ. முன்பாகக் காட்டுகிற பணிவு. வைத்தியலிங்கத்தைப் பொறுத்தவரை ஜெ.வின் மனநிலை அறிந்து பேசுபவர். நத்தம் விசுவநாதன் தான் துறைரீதியான தகவல்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். நான் சொல்றது தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்கம்மா என்ற வார்த்தை அவரது பேச்சின் தொடக்கத்திலேயோ இறுதியிலேயோ இருக்கும். அந்த வார்த்தை அவருக்கு காரியம் சாதிக்கக் கைகூடுகிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

சொந்தபந்தங்களையே பி.ஏக்களாக்கிக் கொள்ள ஜெ.விடம் அனுமதியும் வாங்கியது நத்தத்தின் அபார சாதனையாகக் கருதப்படுகிறது. நத்தத்தின் மனைவி செல்வராணி. அவருடைய தம்பி கண்ணனுக்குத்தான் தங்கள் மகள் கவிதா வைக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் நத்தம் தம்பதியினர். அந்த கண்ணன்தான் நத்தத்தின் முதல் பி.ஏ.  மனைவியின் உறவினரும் தனது பங்காளியுமான சோமுவை பொலிட்டிக்கல் பி.ஏ.வாக்கிக்கொண்டார். மற்றொரு உறவினரான மனோகரன் ஸ்பெஷல் பி.ஏ.  நத்தத்தின் மகனான எம்.பி.ஏ. பட்டதாரி அமர்நாத், அறிவிக்கப்படாத பி.ஏ.வாக செயல்படுகிறார். அக்கா மகன் கோபி இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக் குடையவர். இவர்கள்தான் தன் வசமுள்ள முக்கியமான துறைகளுக்கு சரியாக இருப்பார்கள் என்பது நத்தம் விசுவநாதனின் கணக்கு.  

மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகம் முக்கியமான இடம். அத்திப்பூத்தாற்போலதான் இங்கு நியமனங்கள் நடக்கும் என்பதால், அந்தக் காலத்தைப்போல வேலைவாங்கித் தாரேன்; எடுத்துவையுங்க பணத்தைனு யாரும் கேட்பதில்லை. ஆனால், இடமாற்றம்..? உதவிப் பொறியாளர்(ஏ.இ) பணியிலிருந்து தொடங்கி, உதவி செயற்பொறியாளர்(ஏ.இ.இ), செயற்பொறியாளர்(இ.இ), மேற்பார்வைப் பொறியாளர்(எஸ்.இ), தலைமைப்பொறியாளர்(சி.இ) பணிவரைக்கும் இடமாற்றல், பணிஉயர்வு எதுவும் இங்குதான் முடிவுசெய்யப்படுகின்றன. இதில் எந்த வேலையாக இருந்தாலும், மின்வாரியத் தலைமையகத்தில், "கோபிச்சுக்காதவரைப் பாத்துடுங்க, கோபிச்சுக்காதவரைப் பாத்துடுங்க'’என்கிறார்கள். டெண்டர் விவகாரத்தைப் பற்றிக் கேட்டாலும், அதே பதில்தான் வருகிறது. கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறதா? ஒன்றுமில்லை, நத்தத்தின் அக்கா மகன் கோபிதான். 

அமர்நாத் -நத்தத்தின் மகன். வீட்டிலேயே இருந்துகொண்டு, தன் பணிகளை கவனிக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முன்னிலையில் வானகரத்தில் இவருடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. கொட்டோகொட்டு என மழை கொட்டிய பொழுதும் ஜெயலலிதா சரியான நேரத்தில் வந்து நடத்திவைத்த திருமணம் இவருடையது. வாழ்க்கையில் பெரிய அனுபவம் இல்லை. ஆனாலும், அப்பா பார்க்கவேண்டிய பாதி வேலைகளை இவர்தான் கவனித்துக்கொள்கிறார். குறிப்பாக, அப்பாவுடன் அமைச்சரவையில் (இப்போதைக்கு!) இருக்கும் நண்பர்களின் பரிந்துரைகளை அக்கறையோடு செய்து முடிப்பதை, அமர் கடமையைப்போல செய்கிறாராம். பல அமைச்சர்கள் நத்தத்திடமே சில விசயங்களைப் பேசுவதில்லை. அமரிடமே எல்லாவற்றையும் பேசிமுடித்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு பேச்சிலும் வீச்சிலும் தம்பி கண்ணாக இருப்பார்! கொடுக்கல் வாங்கல் எவ்வளவாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே பக்காவாகப் பேசிமுடித்துவிடுகிறார். வெளிமாநில-வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் இரும்புத்தாது ஏற்றுமதி, இந்தோனேசிய சுரங்கங்களிலிருந்து நிலக்கரி இறக்குமதி என எதுவாக இருந்தாலும் கச்சிதமாகக் கவனித்துக் கொள்ளக் கூடியவர் அமர். 

கண்ணன் -திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் யாரென்றால், அது கண்ணன்தான். யார் கலெக்டராக வந்தாலும் எஸ்.பி.யாக இருந்தாலும் கண்ணன்சாரை மீறி, மாவட்டத்தில் எதுவும் நடந்துவிடாது. நத்தத்தின் மைத்துனர் மட்டும் அல்ல மருமகனும் என்பது உலகம் அறிந்த விசயம். வார்டு பஞ்சாயத்தில் இருந்து வெட்டு குத்துவரைக்கும் போன பஞ்சாயத்துவரை கண்ணனிடம் வந்துபோகும். எதுவாக இருந்தாலும் நாட்டாமை விசாரித்து தீர்ப்பு வழங்குவதில் கில்லாடி. சில நேரம் கில்.. அடியும் கிடைத்தால், அதற்கு கில்லாடி பொறுப்பாக மாட்டார். அவரென்ன யாரும் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களே கண்ணை மூடிக்கொண்டு போய்விடுவார்கள்; அவர்களுக்கு அந்த சமயங்களில் மட்டும் காது கேட்காது. 

கோட்டை விவகாரங்களைக் கவனிப்பதில் அமைச்சரின் சீனியர் பி.ஏ. செந்தில் கைதான் ஓங்கி யிருக்கிறது. முறையும் அதுதானே என மெச்சுகிறார்கள், அவரின் திறமைகளை அருகிலிருந்து பார்க்கும் சில அதிகாரிகள், "வில்லங்கம் இல்லாம முடிச்சுக்கொடுக் கிறாரு; வாழ்க்கைனா இப்படி அமையணும்யா' என அங்கலாய்க்கிறார்கள், கோட்டையில். 

சுரேஷ் -அமைச்சரின் உறவினரான இவரும் ஒரு பி.ஏ.! இப்படியும் மின்வாரியத்தில் சொல்கிறார்கள். அவரும்கூட சொல்லிக்கொள்வார். நத்தம் எங்கு போனா லும், அட்டையைப் போல அவருடன் ஒட்டிக்கொண்டு வருவார். நத்தத்தின் பார்வையில் படாமல் ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டார். அதில் கவனமாக இருப்பார். ஆனால், எல்லாமே சும்மா பேச்சுக்குதான். கிராமங்களில் இருந்து கிளம்பி நான் மெட்ராசுல இருக்கேன் என அந்தக் காலத்தில் பெருமிதமாகச் சொல்லிக்கொள்ளும் கேரக்டர்களைப் போல, விவரம் இல்லாதவர். சீரியசான ஆட்களுக்கு மத்தியில் கலகலப்பான ஒரு கேரக்டர். 

இவர் இப்படி லேசான பெயர் என்றால், நத்தத்தின் சொந்த வட்டாரத்திலேயே கோபிக்குதான் கனமான பெயர். அப்பா இறந்துவிட்டார். அக்கா பையன் என்ற அக்கறையில், இவரைப் படிக்க வைத்தது நத்தம். அதற்காக பிரதி உபகாரமோ என்னவோ, துறையில் தூள் பரத்துகிறார் கோபி. திருமணம் ஆகாத இளைஞர் என்பதால், முழுக்க முழுக்க இவருடைய சொல் வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது, மின்சாரத் துறையில். ஒரு கட்டத்தில் தலைமைப் பொறி யாளர்(சி.இ) இடமாற்றம் ஒன்றில் வழக்கம்போல கோபியின் சொல் அரங்கேற, அது வாரியத்தின் தலைமையில் இருக்கும் ஞானதேசிகனுக்கே கௌரவப் பிரச்சினை ஆகிவிட்டது. அதனால் அதிகாரமட்டங்களில் சங்கடமாகி, தலைமைப் பொறியாளர் விவகாரம் எதுவும் ஞானத்துக்குத் தெரியாமல் நடக்காது என உடன்பாடு காணப்பட்டது. இவ்வளவுக்கும் கோபியின் நலம்விரும்பிகள், "அவரு பையன்தான் நல்லா வருமானம் பண்றான். ஆனா உன்னைத்தான் முன்னிறுத்து றாங்க. பிறகு ஏதாவது பிரச் சினைனா, உன்னைக் கைகாட் டிட்டுப் போய்கிட்டே இருப்பாங்க' என அவரிடம் எச்சரிக்கையாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனாலும் அவரின் உறவுப் பாசமும் விசுவாசமும் இறக்கை கட்டிப் பறக்கிறது. 

அதிகாரிகளைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை- டெடாவின் தலைமை அதிகாரி சுதீப் ஜெயின். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தித் துறையை வளர்த்து சில அதிகாரிகள் அகில இந்திய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தும் இருக்கிறார்கள். அப்படி நினைத்து சுதீப்ஜெயினை யாராவது சந்திக்க அணுகி, அவர்கள் அவரைச் சந்தித்து விட்டால் அது பெரிய சாதனை தான். அந்த அளவுக்கு சார், எப்பவுமே பிஸி! அப்படியா, என்ன நடக்குது அங்கே என்று மட்டும் யாரும் கோட்டைப் பக்கம் போய் கேட்டீர்களோ, கொல்லென சிரிக் கிறார்கள். ஆனாலும் அதே பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார் மனுசன். 


நத்தத்திடம் உள்ள "வருமானம்' மிகுந்த துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை. வருமானம் என்று குறிப்பிடுவது, அரசுக்குத்தான். கஜானா விற்கு அதிக வருவாய் தரும் டாஸ்மாக் இதன்கீழ் வருவதால் இந்தத் துறை முக்கியமானதாக உள்ளது. இதில் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றை கவனிப்பவர் அமைச்சரின் பி.ஏ. செந்தில். மாவட்ட டாஸ்மாக் மேனேஜர் பதவிக்கு எப்போதுமே பலத்த போட்டி இருக்கும். அது மந்திரி தரப்பை உற்சாகப்படுத்தும்.

மாவட்ட டாஸ்மாக் மேனேஜர் ஒருவரை மாற்றும்படி அமைச்சரின் மச்சான் கண்ணன், டாஸ்மாக் ஜே.எம்.டி. மோகனிடம் பேச... நேர்மையான அதிகாரியை மாற்ற மாட்டேன் என  ஜே.எம்.டி. உறுதிகாட்ட அதன்பிறகு அமைச்சரே நேரில் சென்று ஜே.எம்.டி.யை தனியே அழைத்துப் பேசியுள்ளார். அதன்பிறகு விரும்பியவாறு இடமாற்றம்  நடந்துள் ளது. இத்துறையில் அமைச்சரின் விருப் பத்தை மீறி எதுவும் அடைந்துவிட முடியாது என்கிறார்கள்.

மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆணைய ராக இருக்கும் மாலிக் பெரோஸ்கானும் சுதீப் பும் நத்தத்துக்குப் பெரிதாக வேலை வைப்பதில்லை. பேச்சுவார்த்தை களை இவர்களே சிறப்பாக செய்துமுடித்து விடுகிறார்கள். இவர்களின் பங்களிப்பைப் பற்றி நத்தம் ஒருபோதும் அதிருப்தி அடைந்ததே இல்லை. 

முன்னாள் எம்.பியான திண்டுக்கல் சீனிவாசனை ஓரங்கட்டி அரசியலில் வளர்ந்த நத்தம் விசுவநாதனுக்கு இந்நாள் எம்.பியான உதயகுமார் திண்டுக்கல் மாவட்டத்தில் சவாலாக உருவெடுத்துவருகிறார். தன் மச்சானுக்கு எம்.பி. சீட் வாங்கிவிடவேண்டும் என்ற நத்தத்தின் கனவு ஜெ.விடம் பலிக்கவில்லை. வேட்பாளராக உதயகுமார் நிறுத்தப்பட்டார். தேர்தல் முடியும்வரை நத்தம் காலிலும் கண்ணன் காலிலும் விழுந்து ஆதரவைப் பெற்ற உதயகுமார். வெற்றி பெற்ற பிறகு மிஸ்டர் விசுவநாதன், மிஸ்டர் கண்ணன் எனப் பெயர் சொல்லி அழைக்கிறாராம். இந்த புதிய சக்தியை எப்படி அடக்கியாள்வது என்ற யோசனைகளுடனும் உற்சவ மூர்த்திகளின் துணையோடும் வலம்வரும் மூல விக்கிரகமான நத்தம் விசுவநாதன்,  பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. யாராவது பார்க்கப்போனால், "புது பிசினஸ் ஏதாவது இருந்தா சொல்லுங்க'’என்கிறார். அது சரி! 

ad

ad