புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


வெள்ளை நரியும் ஊளையிடும்
முன்னாள் இராணுவ ஜெனரல் சந்திரசிறி இன்று ஒரு பொதுமகனே. அவர் இராணுவ உடையை எப்போதோ கழற்றிவிட்டார்.
ஆகவே சாதாரண பொதுமகன் ஒருவரையே நான் மாகாண ஆளுநராக நியமித்திருக்கிறேன்
''என்ற விநோத விளக்கம் ஒன்றை ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் அளித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­.
அத்துடன் மட்டும் நின்று விடாமல் "மாகாணங்களுக்கு எல்லா அதிகாரங்களும் வழங்கப்பட்டு விட்டன. அவற்றைக் கொண்டு மாகாண சபைகளைத் திறம்பட நடத்த முடியும். ஆயினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் நான் கூட எனது சொந்த ஊருக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டு விடும்'' என்றும் ஜனாதிபதி நீட்டி முழக்கத் தவறவில்லை. ஜனாதிபதியின் இந்த விளக்கங்களிலிருந்து மாகாணசபை நிர்வாக விடயத்தில் அரசின் எதிர்கால ராஜதந்திர நகர்வுகள் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இராணுவ அதிகாரியாக இருந்த ஒருவர் நிர்வாகத்துறைக்குள் பிரவேசிக்கும் போது அவரின் அணுகு முறைகள் எப்படியிருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தான். அவர் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் வடக்கு மாகாண சபையால் என்ன சாதிக்க முடிந்தது என்று கேட்டால் அதற்கு விடை பூச்சியம் என்பதாகவே இருக்கும். மத்திய அரசின் அனுமதியில்லாமல் துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையே மாகாணசபை நிர்வாகத்தில் காணப்படுகிறது.
ஒரு மாகாண பிரதம செயலாளரைக் கூட கட்டுப்படுத்தக் கூடிய நிர்வாக அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்ற உண்மையை ஏற்கனவே உயர் நீதிமன்றம் போட்டுடைத்து விட்டது.

மாகாணப் பிரதம செயலாளரையே கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்குத் தான் இருக்கின்றதே தவிர அது மாகாண முதலமைச்சருக்கு கிடையாது என்றே உயர் நீதிமன்ற வியாக்கியானம் அமைந்திருக்கிறது. ஆகவே மாகாண பிரதம செயலாளரும் மாகாண முதலமைச்சருக்கும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் உயர்நீதி மன்றம் கடந்த மாதம் வழங்கியிருக்கிறது. இந்த விரக்தியில் தானோ என்னவோ "மத்திய அரசிடமிருந்து எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நாம் தயாரில்லை. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தியே சேவையாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்'' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் ஒரு பொம்மை ஆட்சியாகவே மாகாண சபை இருக்கிறது. அதன் சூத்திரக் கயிறு மத்திய அரசின் கைகளிலேயே இருக்கிறது என்ற உண்மை தெட்டத் தெளிவாகிவிட்டது. இராணுவ நிர்வாகமும் என்பது பொதுநிர்வாகமும் ஒன்றுக்கு முரண்பட்ட தன்மையைக் கொண்டவை. "1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 30 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ளதன் படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தனக்குக் கீழ் இருக்கும் நாடாளுமன்றம் மீது எத்தகைய அளவுக்கதிகமாக கடப்பாடுகளை விதிக்கமுடியுமே அதைவிட அதிகமாக ஆளுநரால் மாகாண சபை மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்'' என்பது 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் உறுப்புரைகளை தெளிவாக வாசிக்கும் ஒருவருக்கு இலகுவாகப் புரியும்.
அங்கு கூட ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை 2/3 பெரும்பான்மையுடன் கொண்டு வரப்பட்டால ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியாத சூழல் ஒன்று ஏற்படும். ஆனால் மாகாணசபையில் ஆளுநர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் அதுவும் ஜனாதிபதியிடமே அனுப்பப்படும். ஆகவே மாகாணசபையில் சர்வவல்லமையோடு இருக்கும் ஆளுநரை பதவியிறக்குவதா இல்லையா என்ற இறுதி முடிவையும் ஜனாதிபதியே கொண்டிருக்கிறார்.

அத்துடன் சபையின் கூட்டங்களுக்கு வருதல், உரையாற்றுதல், சட்ட மூலங்களுக்கு கையயழுத்திடல், மாகாணசபைக்கு செய்திகளை விடுத்தல், மாகாணசபையைக் கூட்டல், கலைத்தல், போன்ற அதிகாரங்களும் ஆளுநரின் கைகளிலேயே உள்ளன. இப்படி மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் கைகளில் அளவுக்கதிகமான அதிகாரங்கள் இருப்பதாலும் வடக்கு மாகாண ஆளுநர் ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதாலுமே பெரும் சிக்கலுக்குள்ளாளேயே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வடமாகாண சபை தள்ளப்பட்டிருக்கிறது. இதனாலேயே சிவில் நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரி ஒருவரை மாகாணசபைக்கு ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு திக்குகளில் இருந்து ஒலிக்கின்றன. அப்படி மாகாண சபைக்கு பொதுநிர்வாகத் துறையைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் மாகாண ஆட்சிமுறையில் உள்ள மத்திய அரசின் அழுங்குப்பிடி நீங்கிவிடும் என நினைப்பதும் மகா முட்டாள் தனம்.
ஆயினும் இப்போதிருப்பதை விடவும் ஓரளவுக்கேனும் தளர்வு நிலை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பே இவ்வாறான கோரிக்கைக்கு காரணமாக இருக்க முடியும். சிவில் அதிகாரி ஒருவரை மாகாண ஆளுநராக நியமித்தாலும் அவரும் ஜனாதிபதியின் அல்லது மத்திய அரசின் மத்திய அரசின் உத்தரவுகளையே நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். எனவே ஜனாதிபதி என்ன நினைக்கிறாVரோ அதையே தான் இவரும் செயற்படுத்த முனைவார்.
இருப்பினும் ஒரு இராணுவ அதிகாரியைப் போல தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்காமல் ஓரளவுக்கேணும் மாகாண சபையோடு இணங்கிச் செயற்படும் போக்கு பொதுநிர்வாக துறையிலிருந்து வந்த ஒருவருக்கு இருக்கும். ஆனால் அதற்கு அரசு தயாராக இல்லை என்பதையே மீளவும் வடக்கு ஆளுநராக சந்திரசிறியை நியமித்ததன் மூலம் அதிகாரத் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆயினும் தங்களுடைய நியமனம் ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்று காட்டுவதற்காக சந்திரசிறி ஒரு பொதுமகனே என்று வாய் கூசாமல் ஜனாதிபதி விளம்பியிருக்கிறார். என்னதான் நரிக்கு வெள்ளை வர்ணம் பூசினாலும் அது இரையைக் கண்டவுடன் ஊளையிடாமலா இருக்கப் போகிறது? ஊளையிடுதல் அதன் பரம்பரைக் குணம்.ஆகவே அது எந்த வர்ணம் பூசி தன்னை அப்பாவியாகக் காட்டிக் கொண்டாலும் தருணம் வரும் போது தன்னுடைய உண்மைக்குணத்தை வெளிப்படுத்தவே செய்யும். இது வடக்கு மாகாண ஆளுநர் விடயத்துக்கும் பொருந்தும்.

ad

ad