புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!
சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
அணியில் இடம் கிடைக்காததால், அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கருதப்படுகிறது.

28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற (2011) இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த 15 வீரர்களில் 11 பேருக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை. இதில் சீனியர் வீரர்களான சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் முக்கியமானவர்கள்.

நல்ல பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தாலும், கடந்த காலங்களில் அணிக்கு அளித்த அளப்பரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு, தங்களுக்கு உத்தேச அணியில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால் தேர்வாளர்களின் அதிரடி முடிவின் மூலம் சீனியர் வீரர்களின் கனவு கோட்டை நேற்று கலைந்து போனது. 

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இடம் பிடிக்க முடியாமல் போனதன் மூலம், சீனியர் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்திய அணிக்கு திரும்பலாம் என்று காத்து இருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவே கருதப்படுகிறது. கடந்த உலக கோப்பையில் இடம் பிடித்து, தற்போதைய இந்திய உத்தேச அணியில் இடம் கிடைக்காத வீரர்களை பற்றிய அலசல்...


யுவராஜ் சிங்: 
32 வயதான யுவராஜ் சிங், 293 போட்டிகளில் விளையாடி 13 சதங்களுடன் 8,329 ரன்கள் குவித்திருக்கிறார். கடந்த உலக கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 362 ரன்கள் குவித்தும் இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றியிலும் அணிக்கு முதுகெலும்பாக விளங்கியவர். கடைசியாக 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங் ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வால் அதன் பிறகு அணிக்கு திரும்பவில்லை. அத்துடன் அவர் உள்ளூர் போட்டியிலும் பெயர் சொல்லும்படியாக விளையாடவில்லை.

சேவாக்: 251 போட்டிகளில் விளையாடி 15 சதங்களுடன் 8,273 ரன்கள் குவித்திருக்கும் சேவாக், கடந்த உலக கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி 380 ரன்கள் எடுத்தார். உத்தேச அணியில் இடம் கிடைக்கும் என்று நம்புவதாக கருத்து தெரிவித்து இருந்த சேவாக், இரு தினங்களுக்குள் அவருக்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. 36 வயது அதிரடி தொடக்க ஆட்டக்காரரான சேவாக் கடந்த 2 ஆண்டுகளாவே இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். அத்துடன் அவர் உள்ளூர் போட்டி எதிலும் சோபிக்கவில்லை.

கம்பீர்: 147 போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 5,238 ரன்கள் குவித்துள்ள கம்பீர், கடந்த உலக கோப்பை போட்டியில் 9 ஆட்டங்களில் ஆடி 393 ரன் சேர்த்தவர். குறிப்பாக இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் 97 ரன்கள் குவித்து கோப்பையை இந்திய அணி கையில் ஏந்த காரணமாக இருந்தார். 33 வயதான அவர் 2013ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அந்த டெஸ்டில் அவர் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை.

ஹர்பஜன் சிங்: 229 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. 34 வயதான அவர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் இளம் வீரர்களின் சுழலை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து விட்டார் எனலாம்.


ஜாகீர்கான்: 200 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர்கான், இதுவரை 282 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த உலக போட்டியில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 36 வயதான ஜாகீர்கான், உடல் தகுதி பிரச்னையால் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகுஇந்திய அணியில் அடியெடுத்து வைக்கவில்லை.

41 வயதான் சச்சின் கடந்த ஆண்டு நவம்பரில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆசிஷ் நெஹ்ரா, முனாப் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா, ஆல் ரவுண்டர் யூசுப்பதான் ஆகியோர் புதிய வீரர்களின் வரவாலும், பார்ம் பிரச்னையாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் உருப்படியாக செயல்படாததால் அணிக்கு திரும்ப முடியவில்லை.

ad

ad