புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 'அரோகரா..!' கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைப் பார்த்த பக்தர்கள்  'அரோகரா..!' கோஷத்துடன் அண்ணாமலையாரை வழிபட்டனர்.
முன்னதாக, தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது.

அண்ணாமலையார் சன்னதியில் உள்ள கருவறையில் கற்பூர தீபமேற்றி உலக இயக்கத்தை நடப்பிப்பதும், உயிர்களை காப்பதும் இந்த ஜோதிதான் என சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மண் மடக்கில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தைக் கொண்டு  ஏகனாக இருக்கிற இறைவன் அனேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 வகை தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்ச விளக்கில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கோவில் சிவச்சாரியார்கள் 108 நாட்கள் விரதமிருந்து பரணி தீபத்தை ஏற்றுவதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர அண்ணாமலை மலையில 'மகாதீபம்' ஏற்றப்பட்டது.
மகா தீபத்தை காண லட்சக்கணக்கான அண்ணாமலையார் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து திருவண்ணாமலையில் வந்திருந்தனர். தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை ஏ.டி.ஜி.பி. தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மலை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் 200 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கிரிவலப்பாதை மற்றும் நகரை சுற்றி 34 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உதவிக்காக, மலையில் 6 மருத்துவ குழுவும், நகர்புறத்தில் 18 மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் 34 கேமராவும், நகரில் 32 கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பேருந்துகள் கேமரா மூலம் ஸ்கேன் செய்து கண்காணிக்கப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நகரில் 34 இடங்களில் ஆன்லைன் மூலம் அகன்ற திரை வைக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் மாடவீதிகளில் தலா ஒரு ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பலூனில் கேமரா பொருத்தியும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். போக்குவரத்து கழகம் சார்பாக தீபத்திற்காக 2 ஆயிரம் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையிலும் கார்த்திக தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை தரிசனம் செய்தனர்

ad

ad