புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

சோகத்தில் ஜல்லிக்கட்டு கிராமங்கள்!

ல்லிக்கட்டு ஆர்வலர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பொங்கல் பண்டிகையை
முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. சிறு ஊர்களில் நடத்த முடியாவிட்டாலும் பேர்போன அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையாவது நடத்த அனுமதி கிடக்கும் என்று நினைத்தனர். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போனதால் மதுரை மாவட்டமே களையிழந்து காணப்படுகிறது.


இது மட்டுமில்லாது மதுரையில் ஜனவரி 15 முதல் வரும் 30ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கி விடுவார்கள் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நீக்கினால் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு அமையும் என்று நினைத்தனர், ஆனால், அறிவிப்பை வெளியிடுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை, மற்றும் வேறு அது சம்பந்தமாக எந்த கூட்டமும் போடமுடியாத வகையில் மாவட்ட நிர்வாகம் போட்டிருக்கும் 144 தடை உத்தரவால் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடாமல் நொந்துபோன மக்கள், அவனியாபுரத்தில் வீட்டுக்கு வீடு கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன.

'பரிசீலனை மனுவை, உடனடியாக விசாரிக்க வேண்டும்' என தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், அவசர மனு ஒன்று, செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமையும் என்பதாலேயே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பது, சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 

ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் நாளும், பாலமேட்டில் இரண்டாவது நாளும், மிகசிறப்பாக அலங்காநல்லூரில் மூன்றாவது நாளும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இதைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சில நாட்களுக்கு முன் காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த ஊர்களில் வாடிவாசலையும் கேலரியையும் பார்த்துவிட்டு சென்றனர். அதனால், பொங்கலுக்கு முன்தினம் வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்தோ, அரசிடமிருந்தோ எவ்வித உத்தரவு வரும் என்று மக்கள் நினைத்தனர்.

இம்முன்று ஊர்களிலும் கறுப்புக்கொடிகள் ஏந்தியும் பல்வேறு அமைப்பினர், கட்சிகள், பொதுமக்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை  காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர். பலபேர் பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். அத்துமீறி ஜல்லிக்கட்டு நடத்திவிடாமல் தடுக்க வெளியூர்களில் இருந்து மதுரை மாவட்டத்துக்குள் நுழையும் சாலைகளில் 14 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, ஜல்லிக்கட்டு காளைகளோ, வீரர்களோ அல்லது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோ மைதானத்துக்குச் சென்று விடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்புக்கொடி போராட்டம் இதனிடையே ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களாக உண்ணாவிரதம் நடந்த நிலையில் பொங்கலுக்கு முன்தினம் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
 

ஜனவரி 15 முதல் வரும் 30ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் ஊர்வலங்கள்,பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தடையை மீறி போராட்டம் இதனிடையே அலங்காநல்லூர், பலமேடு பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல், கடைவீதி, பிரதான சாலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டி தங்களின் எதிர்பினை பதிவு செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் அது சாமி குற்றமாகி மதுரை மாவட்டத்தில் காலரா நோய் தாக்கும் என்பது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். எனவே உச்ச நீதிமன்றம் தடையை நீக்கும்பட்சத்தில் அடுத்த ஒருவாரத்திற்குள் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்.

இனிமேலும் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்புள்ளதா என்று சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் கேட்டோம், "வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காளையை விலக்கி அறிவித்தாலே அடுத்து நீதிமன்றத்தில் தெரிவித்து ஜல்லிக்கட்டை நடத்தி விடலாம். அது மட்டுமில்லாது, ஒவ்வொரு ஆண்டும் இப்படி பதற்றப்படுவதை விட, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர உத்தரவை வாங்கிவிட முயற்சித்து வருகிறோம். பாவம் பல மாவட்டங்களில் மக்கள் பொங்கல் கொண்டாடாமல் சோகத்தில் இருக்கிறார்கள். உத்தரவு ஒருசில நாட்கள் தாமதமாக கிடைத்தாலும் பரவாயில்லை நிரந்தர தீர்ப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

மக்களும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.

ad

ad