புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் : சீமான் ஆவேசம்

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அ
றிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டாகவும் கலாசாரச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விழாவை இந்த வருடம் நடத்தியே தீர வேண்டும். ஒருமித்த தமிழ் மக்களின் இத்தகைய உணர்வறிந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான விஜயகுமார், ஆபிரகாம், அயூப்கான் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் யோசனையை மத்திய அரசு நீட்டித்துக்கொண்டே போகிறது. தமிழர்களின் பாரம்பரிய பெருமையையும் பண்பாட்டுச் சிறப்பையும் வெளிக்காட்டக்கூடிய ஜல்லிக்கட்டு விழாவுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு இவ்வளவு காலம் இழுபறி காட்டுவது தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல். 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் மனதில்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வனவிலங்குகள் பாதுகாப்பு பட்டியலிலிருந்து காளைகள் நீக்கப்படும் என அறிவித்தார். மொத்த தமிழ் மக்களின் மனதிலும் பால்வார்த்த இந்த அறிக்கை, அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராகத் தமிழர்களைக் குழப்பி வருகிறது. 

சங்க காலம் தொடங்கியே மாடுபிடி விழாக்கள் தமிழ் மண்ணில் நடந்து வருகின்றன. வேளாண்மையில் விவசாயிகளுக்கு நிகரான உழைப்பை வெளிப்படுத்தும் மாடுகளைக் கொண்டாடவும், அவற்றுக்கு நன்றி பகரவும், வீரத்தை வெளிக்காட்டவுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழனின் வாழ்விலும் வழிபாட்டிலும் மாடுகள் தவிர்க்க முடியாதவையாக பண்டைய காலம் தொட்டே விளங்குகின்றன. பண்பாட்டு விழாவாக மட்டும் அல்லாமல் அறிவியல் புரிதலோடும் நடத்தப்படும் நிகழ்வு இது. விவசாய மண் மெல்லிய அதிர்வுக்கு ஆளாகும்போது மரங்களும் செடிகளும் செழித்து வளர்வதற்கான வேர் இடைவெளி உண்டாகும். வருடம் ஒருமுறையாவது மண் அதிர அதிர மாடுகள் ஓட வேண்டும். அதன் மூலம் விவசாயம் செழித்தோங்க வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான சிந்தனையும் ஜல்லிக்கட்டு விழாவின் பின்னணியாக இருக்கிறது. அப்படியிருக்க, ஜல்லிக்கட்டு விழாவின் மகத்துவம் புரியாமல்  வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் காளைகளையும் சேர்த்து 2011-ம் ஆண்டு கடந்த காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. 

ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளைச் சித்ரவதை செய்யும் வழக்கமே கிடையாது. காளைகளுக்கு நிகராக இளங்காளைகளாகிய வீரர்கள் இறங்கி விளையாடுகிற விளையாட்டு இது. 'காளைகளின் கொம்பா... களமாடும் தமிழர்களின் தெம்பா' என்பதுதான் ஜல்லிக்கட்டு விழாவின் களம். வெளிநாடுகளில் நடத்தப்படுவதைப்போல சிகப்பு துணியைக் கையில் வைத்துக்கொண்டு மாடுகளை சுவரில் மோத வைத்து சித்திரவதை செய்யும் விளையாட்டு அல்ல இது. மாடுகளின் திமிலோடு தமிழனின் திமிர் மல்லுக்கட்டும் பாரம்பரிய விளையாட்டு.

ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகள் சித்திரவதை செய்யப்படுவதாகச் சொல்லி எதிர்ப்புக்குரல் கிளப்புபவர்கள் கறிக்காக அக்கம்பக்க மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் காளைகள் குறித்து கவலைப்படாதது ஏன்? இராணுவத்தில் இருக்கும் குதிரைப்படைகள் குறித்தோ கேரள மாநிலத்தின் யானைக் கொண்டாட்டங்கள் குறித்தோ எதிர்ப்புக்குரல் கிளப்பாதவர்கள் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் 22-வது பிரிவிலிருந்து காளைகளை நீக்க மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். 

ஜல்லிக்கட்டு விழாவை சில காலமாக நடத்தாததால் தமிழர்கள் மனதளவில் பெரிதாக சோர்ந்து போயிருக்கிறார்கள். அதேநேரம் மாடுகளுக்கும் இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போது தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் காளைகள் பங்கேற்றதாகவும், தடை விதித்ததால் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்பட்டுவிட்டதாகவும், காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் வரும் புள்ளிவிவரங்களை யாரும் புறக்கணித்துவிட முடியாது. காளைகளின் குறைவால் மாடுகளின் இனவிருத்தி பாதிக்கப்பட்டு, தமிழர்களின் வாழ்வில் மாடுகளையே பார்க்க முடியாத அவல நிலை உருவாகும் அபாயமும் இருக்கிறது. 

எனவே இந்த வருட பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு உடனடி அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல், ஒருமித்த தமிழர்களையும் திரட்டி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad