புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவேன்!- அமைச்சர் சுவாமிநாதன்


யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக புதிய மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளேன்.
மேலும், தான் சில நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு கிடைக்குமெனவும் அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்தார்.
மேலும், பெருந்தோட்ட பகுதிகளிலும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறினார்.
100 நாட்கள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், சகல பிரச்சினைகளையும் தீர்ப்பது சாத்தியமானதல்ல. ஆனால், என்னால் முடியுமான அளவுக்கு பல பிரச்சினைகளை தீர்க்க எனது முழு சக்தியையும் பிரயோகிப்பேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதி செய்யப்படும் - சுவாமிநாதன்
அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதி செய்யப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 3 காலி வீதியில் அமைந்துள்ள அமைச்சில் கடமைகளை நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களும் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழக்கூடிய பின்னணி உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினால் 100 நாள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நூறு நாள் திட்டத்தின் ஊடாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள துயரமிக்க நிலையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத்துறை மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
30 ஆண்டுகளான நீடித்த போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர்.
இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்ட வேண்டியது அவசியமானதாகும்.
எனினும், அந்த இடத்திலேயே நின்று விடாது போர் ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
போரின் பின்னர் நீண்ட கால சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான ஓர் முனைப்பிற்கு அடித்தளம் இடப்படவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் என்ற ரீதியில் இந்த நிலைமையை இல்லாமல் செய்து வடக்கு தெற்கு மக்களை இணைத்து மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகளின் போது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்தவொரு காரியத்திலும் ஈடுபடப் போவதில்லை.
மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் நிலவும் பிரதான பிரச்சினை காணிப் பிரச்சினையாகும். தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படாத வகையில் காணிகள் பெற்றுக்கொள்ளப்படும்.
பெருந்தோட்ட மக்கள் நீண்ட காலமாக வீட்டுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர், ஏனைய அரசியல் சக்திகளுடன் இணைந்து வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ad

ad